தமிழகத்தின் தெற்கு கடலோர வளைகுடாவில் துவங்கி இலங்கை தலைமன்னார் பகுதி வரை விரிந்துள்ள கடற்பகுதி தான் மன்னார் வளைகுடா. ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் சார்பில் கடல் வளம், அதில் வாழும் உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் செயற்கை பவளப்பாறைகள், கடல்புற்கள் வளர்க்கப்படுகின்றன.
ராமநாதபுரம், துாத்துக்குடி கடற்கரைப்பகுதிகளில் 21 தீவுகள் உள்ளன. இங்கு 117 வகையான பவளப்பாறைகள் உள்ளன. மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தில் ஏராளமான பவளத்திட்டுகள், கடல் பாசிகள், கடல் புற்கள், சங்குகள், ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் உள்ளன. குறிப்பாகப் பாலுாட்டி இனங்களைச் சேர்ந்த கடல் பசு, டால்பின்கள் உள்ளன. முறையற்ற கடற்புற்கள் சேகரிப்பு மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக பவளப்பாறைகளை அழித்தல் போன்ற செயல்கள் காப்பகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
இதுவரை 65 சதவீதம் பவளத்திட்டுகள் அழிந்து விட்டன. இதையடுத்து மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் சார்பில் தீவுப்பகுதியில் நடுக்கடலில் இருந்து அகற்றி எடுத்து வந்து ஓரளவிற்கு ஆழமுள்ள இடங்களில் செயற்கை பவளப்பாறைகள், கடற்புற்கள் வளர்க்கப்படுகின்றன.
ராமநாதபுரம் மாவட்ட மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர் கூறியதாவது. 2022 ல் 600 ச.மீ, அளவிற்கு ராமநாதபுரம், துாத்துக்குடி கடலில் ரூ.20 லட்சத்தில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடற்புற்களும் வளர்க்கப்படுகின்றன. மேலும் 2023ல் 1500 ச.மீ, செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்பட்டதையடுத்து, தொடர்ந்து 4500 ச.மீ, வரை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.