
நத்தை குத்தி நாரை அல்லது அகலவாயன் (Anastomus oscitans) என அழைக்கப்படும் இது நாரை குடும்பத்தைச் சார்ந்த பெரிய நீர்நிலை பறவை இனமாகும். இந்த பறவை இனம் இந்தியாவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் அதிகளவு காணப்படுகிறது.
இவை சற்றே சாம்பல்கலந்த வெள்ளை நிறமும் பளபளக்கும் கருநிறச்சிறகும் வாலும் கொண்டிருக்க, கருத்த உடல் பகுதிகள் ஒருவகை பச்சை வண்ணம் அல்லது ஊதா போன்ற நிறத்தில் பளபளப்பாக மின்னுகின்றன. இவற்றின் முதன்மையான உணவு நத்தை. இவை நத்தையை கொத்தி அப்படியே உண்பதில்லை. நத்தையை பிடித்து சுத்தமான நீரில் கழுவி, அவற்றின் ஓட்டை உடைத்து சதைப் பகுதியை மட்டும் விழுங்கும். இதன் காரணமாகவே இவை ‘நத்தை குத்தி நாரை’ என்று அழைக்கப்படுகின்றன.
மிகவும் முக்கியமான இரை நத்தைகள் என்றாலும், இவை மீன், தவளை, நண்டுகள் மற்றும் பல கடின உடல்கொண்ட உயிரினங்களை உண்ணுகின்றன. இப்பறவைகள் தன் அலகுகளின் இடையிருக்கும் துவாரம் தன்னில் நத்தைகளை வைத்து அழுத்தி வெளிப்புற ஓட்டினை உடைத்து உட்புற மாமிசத்தினை உட்கொள்கின்றன.
பிலா இனத்தில் உள்ள பெரிய நத்தைகளை பிடித்து அதன் தசையை ஓட்டிலிருந்து அலகின் இடைவேளையால் பிரித்தெடுத்து உண்ணுகின்றன. கீழலகின் நுனியினைக்கொண்டு அவை வலப்புறம் நகர்த்தி நுனியினை நத்தையோட்டின் நுழைவாயிலில் உட்புகுத்தி உடலை உறிஞ்சுகின்றன.
இந்த பறவையின் சிறப்பே, அதன் அலகின் வடிவமைப்புதான். ஓரிடத்தில் தங்கும் பறவையெனினும் சிறுதொலைவுக்குப் பறந்துசென்று இரைதேடும் பண்புடையது.
இவற்றின் அலகு அகலமாக திறந்து இருக்கிறது. மேல் அலகு மேல் நோக்கி வளைந்தும், கீழ் அலகு கீழ் நோக்கி வளைந்தும் இருப்பதால் அலகின் நடுப்பகுதி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும். இதனால் இவை ‘அகலவாயன்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
இவை பாதி நீரில் மூழ்கி இருக்கும் மரங்களின் கிளைகளில் கூடு கட்டுகின்றன. ஒரு பறவை 2 முதல் 4 முட்டைகள் வரை இடுகிறது. பின்பு 25 நாட்கள் வரை அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றன. ஆண் மற்றும் பெண் பறவைகள் இரண்டுமே அடைகாக்கும். அவற்றின் சராசரி உடல் நீளம் சுமார் 68 முதல் 81 செ.மீ வரை இருக்கும், இறக்கைகள் 147 முதல் 149 செ.மீ வரை இருக்கும். நாரைகள் பொதுவாக 1.3 கிலோ முதல் 8.9 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும்.
இவை பிற நாரைகளைப்போன்று இறகுகளையும் கழுத்தையும் நன்றாக விரித்து வானில் வெப்பக்காற்றின் போக்கிற்கேற்ப வட்டமிடும் தன்மையுடையவை. இதனால் இவை பறக்கும்போது மிகக்குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தி வானில் நெடுநேரம் பறக்க இயலும். இவற்றின் இறைச்சி மற்றும் முட்டைகள் சுவையான உணவுகளாகக் கருதப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதால், இந்த இனத்தை வேட்டையாடுவது பரவலாக உள்ளது.