மேகம் வரும்... ஆனா மழை வராது! 400 வருஷமா வானம் பொய்த்துப்போன மர்ம பூமி!

Atacama Desert
Atacama Desert
Published on

மழைக்காலம் வந்தால் சாலைகளில் தேங்கும் தண்ணீரையும், போக்குவரத்து நெரிசலையும் பார்த்து நாம் சலித்துக் கொள்கிறோம். ஆனால், மழை என்றால் என்ன? என்று கேட்கும் மக்கள் வாழும் ஒரு நிலப்பரப்பை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? 

ஆம், நம் பூமியில்தான் அப்படி ஒரு விசித்திரமான இடம் உள்ளது. நான்கு நூற்றாண்டுகளாக ஒரு துளி மழைநீர் கூட மண்ணைத் தீண்டாத, உலகின் மிக வறண்ட பிரதேசமான 'அதகாமா (Atacama Desert)' பாலைவனத்தைப் பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம். இது வெறும் வறண்ட நிலம் மட்டுமல்ல, இயற்கையின் தீர்க்க முடியாத ஒரு புதிர்.

தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் நீண்டுகிடக்கும் இந்த அதகாமா பாலைவனம், பார்ப்பதற்கு நம் பூமியைப் போலவே இருக்காது. எங்குப் பார்த்தாலும் செந்நிற மண், விசித்திரமான பாறை வடிவங்கள் மற்றும் உப்புப் படிவங்கள் என இது அச்சு அசல் செவ்வாய் கிரகத்தைப் போலவே காட்சியளிக்கும். அதனால்தான், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வேற்றுக் கிரகங்களுக்குச் செல்லும் முன் பயிற்சிகளை மேற்கொள்ள இந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இயற்கை வேலி!

இங்கு மழை பெய்யாமல் இருப்பதற்குக் காரணம் இதன் புவியியல் அமைப்புதான். ஒரு பக்கம் வானுயர்ந்த 'ஆண்டிஸ்' மலைத்தொடர் மேகங்களை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது. மறுபக்கம், பசிபிக் பெருங்கடலில் இருந்து வரும் காற்றோ, மிகவும் குளிர்ந்த நீரோட்டத்தால் ஈரம் இழந்து வறண்ட காற்றாகவே வீசுகிறது. இப்படி இருபுறமும் இயற்கை அரண்கள் சூழ்ந்திருப்பதால், மழைமேகங்கள் இந்தப் பக்கம் எட்டிப்பார்ப்பதே இல்லை. வரலாற்றுக் குறிப்புகளின்படி, 1570 முதல் 1971 வரை இப்பகுதியின் சில இடங்களில் மழையே பெய்யவில்லை என்றால், அதன் வறட்சியைப் புரிந்து கொள்ளுங்கள்.

"தண்ணீர் இல்லாவிட்டால் உயிரினங்கள் இருக்காது" என்ற விதியை அதகாமா உடைத்தெறிகிறது. இந்த உப்பு நிறைந்த நிலத்திலும் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. மிக முக்கியமாக, இங்குள்ள உப்பு ஏரிகளில் காணப்படும் பிங்க் நிற 'ஃபிளமிங்கோ' பறவைகள், இந்த வறண்ட நிலத்திற்குத் தனி அழகைச் சேர்க்கின்றன. மனிதர்களும் பல நூறு ஆண்டுகளாகத் தண்ணீர் சேகரிக்கும் விசித்திரமான முறைகளைக் கையாண்டு இங்கே வாழ்ந்து வருவது அவர்களின் மன உறுதியைக் காட்டுகிறது.

இதையும் படியுங்கள்:
லாடாக்கின் வினோத 'கர்ப்ப சுற்றுலா' - உண்மையில் நடப்பது என்ன?
Atacama Desert

இது ஒரு பாலைவனம் என்றாலும், சுற்றுலாப் பயணிகளை காந்தம் போல ஈர்க்கிறது. இங்குள்ள Moon Valley பகுதிக்குச் சென்றால், நிலவில் நடப்பது போன்ற உணர்வு ஏற்படும். மேலும், கடுமையான வறட்சிக்கு நடுவே ஆங்காங்கே இயற்கையாகவே சுரக்கும் வெந்நீர் ஊற்றுகள், பயணிகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் மருந்தாக உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, இங்கு மாசுக்களே இல்லாததால், இரவில் வானத்தைப் பார்த்தால் கோடிக்கணக்கான நட்சத்திரங்களை மிகத் தெளிவாகக் காண முடியும். நட்சத்திரங்களை ரசிப்பதற்கு இதைவிடச் சிறந்த இடம் உலகில் வேறில்லை.

அதகாமா பாலைவனம் நமக்கு உணர்த்தும் பாடம் ஒன்றுதான். இயற்கை எவ்வளவு கடினமான சூழலை உருவாக்கினாலும், அதிலும் ஒரு அழகையும், உயிர்ப்பையும் அதனால் தக்கவைக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com