
இந்தியாவில் ஆண்டுதோறும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால், வருங்காலங்களில் தண்ணீரின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இந்நிலையில், விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் பற்றாக்குறையையும் நாம் சரிசெய்ய வேண்டியது அவசியமாகும். காலநிலை மாற்றத்தால் பருவமழையின் வருகையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. ஆகையால் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி மகசூலை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வயல்களுக்கு நேரடியாக தண்ணீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் சொட்டுநீர்ப் பாசன முறையைப் பயன்படுத்தினால், பெருமளவு தண்ணீர்த் தேவையை விவசாயிகளால் தவிர்க்க முடியும். சொட்டுநீர்ப் பாசன முறை அறிமுகமான போது, விவசாயிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு அரசு மானியமும் கிடைத்ததால் பல விவசாயிகள் சொட்டுநீர்ப் பாசனத்தை ஆர்வமுடன் பயன்படுத்தத் தொடங்கினர். சொட்டுநீர்ப் பாசன முறையில் தண்ணீரைப் பாய்ச்ச விவசாயிகள் வயலில் இருக்க வேண்டியது அவசியம். இந்த முறையில் சில மாற்றங்களைச் செய்து விவசாயிகளுக்கு மேலும் பயனுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டது தான் ஆட்டோமெட்டிக் சொட்டுநீர்ப் பாசனம்.
சமீப காலமாக ஆட்டோமெட்டிக் சொட்டுநீர்ப் பாசன முறை விவசாயிகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்த அமைப்பு முழுமையாக தானியங்கி முறையில் செயல்படுவதால், விவசாயிகள் வயலில் இருக்க வேண்டிய அவசியமில்லை. நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, விவசாயிகள் வேறு வேலையில் கவனம் செலுத்தும் வாய்ப்பையும் இவை வழங்குகின்றன.
பயிர்களுக்குத் தேவையான தண்ணீரை சரியான நேரத்தில் பாய்ச்சுவதே ஆட்டோமெட்டிக் சொட்டுநீர்ப் பாசனத்தின் வேலை. இதில் கணினி, சென்சார் மற்றும் டைமர் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இருப்பதால் தண்ணீர்ப் பாய்ச்சுவது விவசாயிகளுக்கு எளிதாகி விட்டது.
செயல்படும் விதம்:
ஈரப்பத மீட்டரில் உள்ள சென்சார் மண்ணின் ஈரப்பதத்தைத் தொடர்ந்து கண்காணித்து வரும். இந்தத் தகவல்கள் ப்ளூடூத் அல்லது வைஃபை மூலம் மைக்ரோ கண்ட்ரோலர் வழியாக கணினிக்கு அனுப்பப்படும். கிடைக்கின்ற தகவலின் படி மண்ணில் ஈரப்பதம் குறைவாக இருக்கும் போது, சொலினாய்டு வால்வின் உதவியால் பாசனக்குழாய் திறக்கப்பட்டு, தண்ணீர் தானாகவே பயிர்களுக்குப் பாய்ச்சப்படும்.
மண்ணில் ஈரப்பத அளவு குறிப்பிட்ட அளவை எட்டியதும், பாசனக்குழாய்கள் தானாகவே மூடிக்கொள்ளும். வயலில் தண்ணீர்ப் பாய்ச்சும் நிகழ்வுகளை விவசாயிகள் தங்கள் செல்போன் மூலம் வேறிடத்தில் இருந்து கூட கண்காணிக்கலாம்.
ஆட்டோமெட்டிக் சொட்டுநீர்ப் பாசனம் முழுக்க முழுக்க வானிலையைச் சார்ந்து, டிஜிட்டல் முறையில் செயல்படுகிறது. பொதுவாக தோட்டக்கலைத்துறை பயிர்களுக்கு ஆட்டோமெட்டிக் சொட்டுநீர்ப் பாசன முறை உகந்ததாக இருக்கும்.
பயன்கள்:
1. வழிதல் மற்றும் ஆவியாதல் என்றில்லாமல் தண்ணீர் விணாவது தடுக்கப்படும்.
2. உரங்களையும் பாசன நீர் வழியாக செலுத்தினால், அதன் பலன்கள் முழுமையாக பயிர்களுக்கு கிடைக்கும்.
3. தேவைப்படும் நேரத்தில் பயிர்களுக்கு தண்ணீரும், உரமும் கிடைப்பதால் மகசூல் அதிகரிக்கும்.
4. நேரடியாக பயிர்களின் வேருக்கு தண்ணீர்ப் பாய்ச்சப்படுவதால், அவற்றின் வளர்ச்சி சீராக அதிகரிக்கும்.
5. பாசனத்திற்கான செலவு பெருமளவில் குறையும்.
விவசாய உபகரணங்கள் மற்றும் சொட்டுநீர்ப் பாசன முறைக்கு அரசு சார்பில் மானியங்கள் வழங்கப்படுவதால், விவசாயிகள் அருகிலுள்ள வேளாண் மையங்களை அணுகலாம். ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஆட்டோமெட்டிக் சொட்டுநீர்ப் பாசனத்தை அமைக்க ரூ.20,000 முதல் ரூ.1,00,000 வரை ஆகும் என தரவுகள் கூறுகின்றன.