கூடுதல் வெப்பம்... உஷ்ண காற்று... வாடும் பயிர்கள்... பாதுகாப்பது எப்படி?

Heat Wave
Agriculture
Published on

கோடை காலம் தொடங்கி விட்டால், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மனிதர்களே அச்சம் கொள்வர். அப்படி இருக்கையில் பயிர்களின் நிலை என்னவாக இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள். அதிலும் வெப்ப அலைகள் ஏற்பட்டால், பயிர்களின் நிலை இன்னும் மோசமாகி விடும். கோடை காலத்தில் வெப்ப அலைகளில் இருந்து தோட்டக்கலைப் பயிர்களை எப்படி பாதுகாப்பது என இப்போது பார்ப்போம்.

பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தான் வெயில் அதிகமாக இருக்கும். இந்நேரத்தில் பயிர்கள் வெயிலில் கருகி விடும் என்பதால் முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு கோடையில் இருந்து பயிர்களைப் பாதுகாப்பது எப்படி என்பது பற்றி ஓரளவு தெரிந்திருக்கும். இருப்பினும் காலநிலை மாற்றத்தால் இனி வரும் காலங்களில் கூடுதல் வெப்பநிலை நிலவும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். அதற்கேற்றவாறு நாமும் தயாராக இருக்க வேண்டியது அவசியமாகும்.

இயல்பான வெப்பநிலையைக் காட்டிலும், தொடர்ந்து 3 நாட்கள் அல்லது அதற்கும் மேல் கூடுதலான வெப்பம் வீசினால், அதனை வெப்ப அலை என்கிறோம். இந்நேரத்தில் விவசாயப் பயிர்கள், மாடித் தோட்டப் பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

1. கோடை காலத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் நீர்ப்பாசனம் செய்வது சிறப்பு. அதிலும் சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசன முறையைக் கையாள வேண்டும். இதன்மூலம் தண்ணீர் நேரடியாக பயிர்களின் வேர்களுக்குச் சென்றடையும்‌. இதனால் நீர் ஆவியாவது தடுக்கப்படும்.

2. வெப்ப அலை வீசும் காலத்தில் பயிர்களுக்கு அடியில் உரமிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி உரமிட்டால், அதிக வெப்பத்தால் தண்ணீர் கிடைக்காத சூழலில், பயிர்களின் திசு வளர்ச்சியானது பாதிக்கப்படும். இதனால் பயிர்கள் கருகி விடும். இந்நேரத்தில் இலைவழி தெளிப்பாக உரங்களை இடுவது தான் சிறந்தது.

3. மாடித் தோட்டப் பயிர்களைக் காக்க தற்காலிகமாக நிழல் வலைகளை அமைக்கலாம். இதன்மூலம் செடிகளின் மீது வெப்பம் நேரடியாக விழுவது தடுக்கப்படும்.

4. நிலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாவதைத் தடுக்க, வைக்கோல் கொண்டு மூடாக்கு போடலாம். இதன்மூலம் நிலத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்படுவதோடு, களைகள் ஏதும் முளைக்காமல் இருக்கும்.

5. கயோலின் என்ற களிமண்ணை 5% அளவு எடுத்துக் கொண்டு, தண்ணீரில் கலந்து பயிர்களின் மீது தெளித்தால் பயிர்களின் மீதான வெப்பத்தின் தாக்கம் குறையும்.

6. ‘மெத்தைலோ பாக்டீரியா’ உரத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 20மி‌.லி. அளவுக்கு கலந்து, காலை மற்றும் மாலை வேளைகளில் பயிர்களின் மீது தெளிக்க வேண்டும். இதனால் வறட்சியில் இருந்து பயிர்கள் பாதுகாக்கப்படுவதோடு, 10% கூடுதல் மகசூலும் கிடைக்கும்.

7. வெப்ப அலை காலத்தில் பயிர்களைப் பாதுகாப்பதே கடினம் என்பதால், புதிய பயிர்களை சாகுபடி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

8. தோட்ட வேலைகள், பூ பறித்தல் மற்றும் களை எடுத்தல் போன்ற வேலைகளை அதிகாலை அல்லது மாலை நேரங்களில் மேற்கொள்வது சிறப்பு.

9. கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல காலை மற்றும் மாலை நேரங்களே உகந்தவை. அதிக வெப்பம் கால்நடைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால், பகல் நேரங்களில் மேய்ச்சலைத் தவிர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
அதிவேக காற்றால் பாதிக்கப்படும் தோட்டக்கலைப் பயிர்கள்: பாதுகாப்பது எப்படி?
Heat Wave

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com