இந்த வருடம் அக்கினி நட்சத்திர ஆரம்ப நாளன்றே பெய்ய ஆரம்பித்த மழை, வெப்பத்திலிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு அளித்தாலும், அனைத்து விவசாய நண்பர்களையும் அலைக்கழித்துக் கொண்டேதான் இருந்தது!
முதலில் நெல் விவசாயிகளின் விளைச்சலைப் பாதித்தது; அறுவடையானதை நனைத்து அவர்களை அழ வைத்தது! பின்னர், குலை தள்ளிய வாழை மரங்களைத் தள்ளி அவர்களின் குலைகளை நடுங்கச்செய்தது! மாம்பழ விவசாயிகளை மாபெருந்துயருக்கு ஆளாக்கியது!
‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது!’ என்றார்கள் நம் முன்னோர்கள்!
நம் பட்டுக்கோட்டை கவிஞரும்,
’அட காடு வெளஞ்சியென்ன மச்சான்
நமக்குக் கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்! என்றதோடு
மாடாய் உழைச்சவன் வாழ்க்கையிலே
பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்? என்று அவள் கேட்க, அவரோ,
அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே
சேர்வதனால் வரும் தொல்லையடி! என்பார்!'
மாம்பழ சீசன் முடிவுக்கு வரும் நேரம் இது ... கிடைத்த தகவல்கள் நெஞ்சை உருக்குகின்றன ...
என்ன கொடுமை! மார்க்கெட்டில் நாம் வாங்கும் மாம்பழங்களின் விலை கிலோ 80ரூபாய்! ஆனால் இடைத்தரகர்கள் விவசாயிகளுக்குக் கொடுப்பதோ கிலோவுக்கு வெறும் 4 ரூபாய்தானாம்! பாருங்கள் இந்த பகற்கொள்ளையை! அதாவது 20 மடங்கு அதிகம்! 19 மடங்கைச் சாப்பிடுவது, உழைக்காமல், சுற்றித் திரியும் இடைத்தரகர்கள்! விளைப்பவனுக்கும் பயனில்லை! விலை கொடுத்து வாங்குபவனுக்கும் பயனில்லை!ஆனால் நடுவில் இருப்பவர்கள் நலுங்காமல், குலுங்காமல் சம்பாதித்து, சுகபோகங்களில் திளைக்கின்றனர்!
சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகளைக் கடந்த பின்னாலும், உழைப்பு உதாசீனப்படுத்தப்படுவதை எங்ஙணம் ஏற்பது?
கொள்ளை லாபம் பார்க்கும் இடைத்தரகர்களை எளிதாக விரட்டும் உபாயம் ஒன்றுண்டு! விவசாயிகளே! ஒன்றுசேருங்கள்.
சிறு, சிறு குழுக்களை அமைத்து, மாம்பழங்களை விவசாயிகளிடம் வாங்குவதற்கும், அவற்றை மார்கெட் கொண்டு செல்வதற்குமென்று வேலையைப் பகிர்ந்து கொண்டு செயல்படலாம்.
நேரடியாக வியாபாரமும் செய்யலாம்! எல்லாம் ஒற்றுமையிலும், திட்டமிடலிலும் உள்ளது! எத்தனை காலத்திற்குத்தான் இந்த இடைத்தரகர்களின் பிடியில் சிக்கி அல்லல்படப் போகிறீர்கள்? வாட்ஸ் அப் குழுக்களை விற்பனைக்கு நீங்கள் எளிதாகப்பயன்படுத்திக் கொள்ளலாமே! செய்தித் தொடர்பில் வந்துள்ள அளப்பரிய முன்னேற்றத்தைப் பயன்படுத்தி, உயர்ச்சி அடையுங்களேன்!
முடியுமா? என்று நீங்கள் முணகுவது எனக்கும் கேட்கிறது வேளாண் தோழர்களே!
மண்ணையே சீர்படுத்தி பலவற்றையும் விளைக்கும் உங்களால், இதுவும் முடியும்! முயலுங்கள்! வெற்றி நிச்சயம்!
அநியாயமாகப் பணம் சேர்க்கும் அத்தனை பேரும் ஒன்றை உணர வேண்டும். குறிப்பாக, ஏழை விவசாயிகளை வஞ்சித்து வரும் பணம், உங்கள் கஜானாக்களை வேண்டுமானால் நிரப்பலாம்! உங்கள் வயிற்றை அவற்றால் நிச்சயமாக நிரப்ப முடியாது! வயிறு பசியில் தவிக்கையில், விவசாயின் கருணையே கைகொடுக்கும் என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள்!