
பட்டிமன்றத் தலைப்பிலும் சரி… சொற்பொழிவின் இடையேயுமாகட்டும், ஆசி வழங்கி வாழ்த்தும் போதும்கூட நிறைய இடங்களில் வாழ்க்கைப்பயணம் என்ற சொல்லிற்கு இடமுண்டு. உங்கள் வாழ்க்கைப் பயணம் இனிதாகட்டும். மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும் என்ற வார்த்தைகள் அடிக்கடி நம் செவியில் விழும்.
ஆனந்தமாக பயணம் செய்யத்தானே எல்லோரும் விரும்புவோம். வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு விடுங்கள். இப்படித்தான் இருக்கணும்ன்னு ஏன் எதிர்பார்க்கணும்? எதிர்பார்ப்புகளுடன் பயணிக்கும் போது, ஏமாற்றங்கள், வருத்தங்கள் என்ற நிறுத்தங்கள் நம் முயற்சியை குறைத்து, ஆயாசத்தை அன்லிமிடெட்டாக கொடுக்கும். மகிழ்ச்சிக்கான பயணமே இது.
கல்லோ, முள்ளோ குத்தினால் என்ன? அது தரும் அனுபவம் நம்மை அடுத்த கட்டத்திற்கு கைபிடித்து கூட்டிச் செல்லும் என்ற பக்குவத்துடன் தொடருங்கள் பாதையில் தெளிவு கிடைக்கும்.
பணியிடத்திலும், குடும்பத்திலும், அக்கம் பக்கம் மற்றும் அபார்ட்மெண்ட்டிலும் எல்லா பொறுப்புகளையும் நாமே ஏற்றுக்கொள்ளத் தேவையே இல்லை. மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள். அவர்கள் சொதப்பினால், டென்ஷனாகாமல், எப்படி செய்யவேண்டும் என எடுத்துச் சொல்லி வழிகாட்டுங்கள். எல்லோருமே முதல் முயற்சியில் வெற்றி அடைவதில்லை. பல்பை கண்டுபிடித்த எடிசனே முயற்சிகளில் பல்பு வாங்கிய அனுபவத்தைக் கூறி ஊக்கப்படுத்துங்கள். மனதுக்குப் பிடித்த மாதிரி சிறப்பாக செய்தால், மறக்காமல் பாராட்ட வேண்டும். அப்புறமென்ன… சுற்றியுள்ளவர்கள் உங்களைக் கொண்டாடுவார்கள்.
அப்டேட்டாக இருங்கள். நிகழ்காலத்திற்கு ஏற்றாற்போல் உங்கள் லட்சியத்தை செயலை மாற்றிக்கொள்ளுங்கள். அந்தக் காலத்தில் நான் இப்படி இருந்தேன். அப்படி செய்தேன் என்ற வீர வசனங்கள் வேண்டாமே. உதாரணத்திற்கு ஒன்று சொல்லவா? ஐம்பது வருடங்களுக்கு முன், பணி செய்யுமிடங்கள் அருகில் இருக்கும்.
நடந்தே அலுவலுக்கு சென்றார்கள். சற்று தூரமென்றால் சைக்கிள் கை கொடுத்தது. இன்று நிறைய பேருக்கு தொலை தூரங்களில் இருக்கிறது. வாகனமோ, பேருந்தோ அல்லது மெட்ரோவோதான் பயணமார்க்கமாக இருக்கிறது. அது புரியாமல், நான் நடந்துதான் வேலைக்குப் போனேன் என முதியவர்கள், இளைய வர்களை கடுப்பேத்தாதீர்கள். அவர்கள் வசதிக்கு ஏற்றாற்போல் வாகனங்களில் அமைதியாக பயணிக்கட்டுமே… இன்றைய வாகன நெரிசல் பற்றியும் நாம் அறிவோம்தானே.
வாழ்க்கை என்பதே அடர்ந்த கானகம் போல்தான். வெளியிலிருந்து பார்க்கும்போது இருட்டாகத்தான் தெரியும். உள்ளே நுழைந்ததும் திணறும். அதை ஓரங்கட்டி, தைரியமாக உள்ளே போகப்போக செடிகள், மரங்கள், அருவிகள் என கண்ணுக்கு குளிர்ச்சியும், ஆரோக்கிய சூழலையும் கொடுக்கின்ற இயற்கையை உணர்வுபூர்வமாக ரசிக்க முடியும். வாழ்க்கையும் அப்படித்தான். முதலில் மருள வைத்தாலும், சரியான முடிவுகளை எடுத்து செயல்பட பயணம் ஆனந்தமாகும்.