வெளியூர்களுக்குப் பிரயாணம் செய்யும்போதெல்லாம் நாம் பார்த்திருப்போம், நெடுஞ்சாலைகளைப் பிரிக்கும் தடுப்பு சுவர்களின் மையப்பகுதிகளில் அடர்த்தியான அரளிச் செடிகள் வளர்ந்து, பூத்துக் குலுங்குவதை. ஆஹா, கண்களுக்கு விருந்தளிக்கும் எப்பேர்ப்பட்ட ரம்யமான காட்சி என்று வியந்து கொண்டே போயிருப்போம்.
இப்படி ஒரே மாதிரியாக கண்ணைக் கவரும் வண்ணம் அரளிச் செடிகளை சாலை நெடுகிலும் வளர்க்க நெடுஞ்சாலை துறையினருக்கு எப்படித் தோன்றியது என்னும் எண்ணமும் கூடவே எழும். விசாரித்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது, இந்த அரளிச் செடிகள் வெறும் அழகுக்காக மட்டும் வளர்க்கப்படுபவையல்ல, அதைத் தவிரவும் நிறைய நடைமுறை காரணங்களுக்காகவும் இவை வளர்க்கப்படுகிறது என்று.
இரவு நேரத்தில் எதிரே ஒளிர்ந்து கொண்டு வரும் வாகன விளக்குகளின் ஒளியை தடுப்பது ஒரு முக்கியமான காரணமாகும். எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளிலிருந்து வரும் நேரடி ஒளித்தாக்கம் ஓட்டுநர்களின் கண்களை கூசச் செய்து, விபத்துகளை ஏற்படுத்தக் காரணமாகிறது. அரளிச் செடிகள் இந்த ஒளிக்கற்றைகளை திறம்பட உறிஞ்சித் தடுக்கும் திரையாக செயல்படுகின்றன. இதனால், இரு திசைகளிலிருந்தும் வரும் வாகனங்களுக்கிடையே பாதுகாப்பான போக்குவரத்து உறுதி செய்யப்படுகிறது.
சில நேரங்களில், வாகனங்கள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை தடுப்பின் மீது மோதியும் விபத்து ஏற்படுவதுண்டு. அரளிச் செடிகள் அடர்த்தியாக வளர்ந்திருப்பதால் தடுப்புச் சுவரை மோதும் வாகனத்தின் வேகம் ஓரளவு குறைக்கப்படுகிறது. இதனால் வாகனத்திற்கு ஏற்படும் சேதமும், அதில் பயணிக்கும் நபர்களுக்கு ஏற்படும் காயங்களும் குறைவாக இருக்கின்றன என்றும் சொல்லலாம். இவை மட்டுமல்ல, அரளிச் செடிகள் ஒலி மாசுபாட்டையும் கட்டுப்படுத்துகிறது என்று கேள்விப்பட்டதும் மிகவும் வியப்பாக இருந்தது. நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் ஒலி மாசு என்பது எப்பொழுதும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளை மிகவும் பாதிக்கும். அரளிச் செடிகள் இயற்கையான ஒலித்தடைகளாக செயல்பட்டு ஒலி மாசை குறைக்கிறது. இதனால் சுற்றுப்புறத்தை பாதிக்கும் ஒலி மாசு வெகுவாக குறைகிறது.
அதுமட்டுமா? வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வாயுக்கள் மற்றும் நுண்ணிய துகள்கள் உள்ளன. அடர்த்தியான அரளிச் செடிகள் இந்த மாசுக்காற்று ஓரளவு வடிகட்டுவதை உறுதி செய்கின்றன. மேலும், இந்தச் செடிகள் இயல்பாகவே காற்றிலுள்ள கரியமில வாயுவை உறிஞ்சி பிராண வாயுவை வெளியிடுவதால் தூய்மையான காற்றை தங்கள் சுற்றுப்புறத்திற்கு வழங்குகின்றன.
மழைக்காலங்களில், நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மண், நீரோட்டத்தினால் அரிக்கப்பட்டு, பாதையின் உறுதித்தன்மையை பாதிக்கும். அரளிச் செடிகளின் வேர்கள் மண்ணை உறுதியாகப் பற்றிக்கொள்ளும் தன்மையுடையதாக இருப்பதால் மண் அரிப்பும் பெருமளவில் தடுக்கப்படுகிறது.
அரளிச் செடிகள் பராமரிப்பதற்கு வெகு எளிதானவை. எந்தவிதமான பிரத்யேக கவனிப்பும் இல்லாமலேயே தானாகவே வளரக்கூடியவை. இதனால் அரசாங்கத்திற்கு பராமரிப்பு செலவு மிச்சமாகிறது.
வெளியூர் பயணத்தின்போது பச்சைப் பசேலென்ற அரளிச் செடிகளையும், அதில் பூத்திருக்கும் வண்ணமயமான அரளிப் பூக்களின் அழகையும் மட்டுமே ரசித்துக் கொண்டு செல்லும் நமக்கு, இவை வெறும் அழகுக்காக மட்டும் இல்லாமல் பல்வேறு பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் நன்மைகளுக்காகவே நெடுஞ்சாலைகளின் மையத்தில் வளர்க்கப்படுகின்றன என்னும் கூடுதல் தகவல் மகிழ்ச்சியைத் தந்து, நம் மனதிற்கு நிறைவையும் அளிக்கிறது.