ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா வறுமையின் கோரப் பிடியில் உள்ள நாடு. இயற்கை, பசுமை வளங்களை அளித்தாலும் உணவு சார் உற்பத்தியில் அவர்கள் போராடிக் கொண்டே இருக்கின்றனர். வனமும் வாழிடமும் ரொம்ப தூரமில்லை என்பதால் அடிக்கடி வனவிலங்குகளின் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். அதில் முக்கியமானது யானைகள். யானைகள் மனிதர்களை தாக்குவதுடன், சுற்றுப்புறங்களில் உள்ள பயிர்களையும் அழிக்கின்றன.
தொடர்ச்சியாக அழிந்து கொண்டிருந்த யானைகளை பாதுகாக்க கென்யா வனவிலங்கு சேவை (KWS) திட்டங்களை செயல்படுத்தி யானைகளின் எண்ணிக்கையை பெருக்கியது.1990-களின் இறுதியில் சாவோவில் இருந்த 6,000 யானைகளின் எண்ணிக்கை 2021 இல் கிட்டத்தட்ட 15,000 யானைகளாக உயர்ந்தது. அதே நேரத்தில் பெருகி வந்த மக்கள் தொகையின் காரணமாக, அவர்களின் ஆதாரமான கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களுக்கான தேவைகள் அதிகரித்தது.
அருகருகே உள்ள வனமும் வாழிடமும் மோதலுக்கு வழி செய்தது. பெருகிய யானைக் கூட்டங்கள் அவ்வப்போது ஊருக்குள் நுழைகையில் அதன் காலடி பட்டு பயிர்கள் நாசமாகின. சில நேரங்களில் வீட்டில் உள்ள தானியங்களும் தப்புவதில்லை.
யானைகள் - மனிதர்கள் போராட்டங்களில் இருபுறமும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அடிக்கடி பயிர் நாசமாவதால் விவசாயிகள் விவசாயத்தை கை விட்டு மேலும் வறுமைக்கு ஆளாகின்றனர். விவசாயிகள் இதனால் யானைகளை வெறுக்கின்றனர்.
கென்யாவின் பொருளாதாரத்தில் 10% வருவாய் சுற்றுலாப் பயணிகளால் வருகிறது. சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்வது யானைகள்தான். யானைகளுக்காகவே சுற்றுலாப் பயணிகள் வருவதால் அதை காக்க அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கென்யாவின் உலகப் புகழ்பெற்ற சாவோ தேசியப் பூங்காவின் அருகில் உள்ள தங்களது நிலங்களில் அடிக்கடி யானைகள் புகுந்து நாசம் செய்வதாக அங்குள்ள விவசாயிகள் கவலை தெரிவித்தனர். பயிர்கள் அழிக்கப்பட்ட போது தேசியப் பூங்காவின் சார்பின் இழப்பீடு கிடைக்காததால் அடிக்கடி பூங்கா ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் பிணக்குகள் தோன்றுகின்றன.
சேவ் தி எலிஃபண்ட்ஸ் என்ற சேவை நிறுவனத்தின் நீண்டகால திட்டம் அவர்களுக்கு ஒரு தீர்வை வழங்கியது. தேனீக்களின் கூடுகளை வேலிகள் மீது பொருத்துவதன் மூலம் காட்டு யானைகள் வயல்களில் புகுவதை தடுக்க முயற்சி செய்தனர். இந்த முயற்சியில் பலன் கிடைத்தது. இந்த தேன்கூடு வேலிகள் பயிர்களையும் வாழிடங்களையும் பாதுகாக்கின்றன.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒன்பது ஆண்டுகால ஆய்வில், யானைகள் பெரும்பாலும் தேனீக்கள் உள்ள பாசனப் பகுதிகளை தவிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 70,000 தேனீக்களின் பயமுறுத்தும் ரிங்கார ஒலிகள் யானைக்கு அச்சுறுத்தலை தருகிறது. வேலிகளை நெருங்கும் போது தேனீக்கூட்டம் யானைகள் மீது படையெடுப்பதால் அந்த ஆறு டன் எடையுள்ள பெரிய விலங்கு தலைத்தெறிக்க ஓடுகிறது. மீண்டும் அந்த பகுதிக்கு வர அஞ்சுகிறது. இது மின்சார வேலியை போல யானைகளின் உயிரை குடிப்பதில்லை. யானைகளை விரட்ட மட்டுமே பயன்படுகிறது. இதனால் யானைகளின் உயிர்களும் பாதுகாக்கப்படுகிறது.
இந்த திட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தேனீக்களின் வேலி பாதுகாப்பு மட்டுமின்றி , தேன் மூலம் வருவாயும் பெற்றுத் தருகிறது. ஆயினும் சமீபத்திய வறட்சி, காலநிலை மாற்றத்தால் நிலைமை மோசமாகி, புதிய சவால்களை உருவாகியுள்ளது. வறட்சிப் பகுதிகளில் தேனீக்கள் மறைந்து விட்டன. மீண்டும் பசுமை வந்தால் தான் தேனீக்களை வளர்க்க முடியும்.
மற்ற பகுதிகளில் தேனீக்கள் இருந்தாலும் அதன் விலை அதிகமாக இருப்பதால் சிலரால் வாங்க முடிவதில்லை. தேனீக்களை வாங்க முடியாதவர்களுக்கு, சேவ் தி எலிஃபண்ட்ஸ் மற்ற தீர்வுகளை வழங்குகிறது. அதாவது யானைகள் நெருங்கும்போது காற்றில் சலசலக்கும் உலோகத்தாள் வேலிகள், டீசல் அல்லது மிளகாய் ஊறவைத்த துணிகளை வேலியில் போடுவதன் மூலம் யானைகளை தடுக்கிறார்கள்.