மகசூலை அதிகரிக்க 'தோட்டத்து தேவதை'களையும் பயன்படுத்தலாம்!
உலகில் மிகவும் சுறுசுறுப்பான உயிரினமாக தேனீக்கள் பார்க்கப்படுகிறது. தேனை சேகரிப்பது மட்டுமின்றி, தனக்கே தெரியாமல் மகரந்தச் சேர்க்கைக்கும் இவை உதவுகின்றன. சிறிதளவு மாற்றி யோசித்தால் விவசாயத்திலும் தேனீக்களைப் பயன்படுத்த முடியும். இன்றைய நவீன உலகில் செயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. ஆனால் தேனீக்களை சரியான முறையில் பயன்படுத்தினால், இயற்கை விவசாயத்தையும் மீட்டெடுக்கலாம்; அதோடு கூடுதல் லாபமும் ஈட்டலாம்.
பூக்களைத் தேடி வரும் தேனீக்கள், தோட்டத்து தேவதைகள் எனவும் வர்ணிக்கப்படுகின்றன. தேனீக்கள், விவசாயத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் படைத்தவை. அதாவது விவசாய நிலங்களில் தேனீப் பெட்டிகளை வைத்து வளர்ப்பதன் மூலம், மகசூல் 40% அதிகரிக்கும் என வேளாண் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் மண்ணிற்கும், பயிருக்கும் நன்மை செய்யும் தேனீக்கள் கூட, செயற்கை உரங்களின் பிடியில் இருந்து தப்பவில்லை.
வயல்களில் செயற்கை உரங்களைத் தெளிப்பதன் மூலம், அங்கு வரும் தேனீக்களும் பாதிக்கப்படுகின்றன. அனைத்துப் பூச்சிகளும் பயிர்களைத் தாக்குவதில்லை. மாறாக பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சியினங்களும் உள்ளன. செயற்கை உரங்களினால் தேனீ உள்பட சில பூச்சியினங்கள் இறக்கின்றன.
விவசாயத்தில் உரச் செலவைக் கட்டுப்படுத்துவதோடு, இயற்கை உரத்தையும் அதிகளவில் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் விவசாயம் தொடர்ந்து செழித்து வளரும். இதற்கு தேனீக்களை இலாவகமாக பயன்படுத்த வேண்டியது அவசியம். அதாவது, தேனீக்களைப் பயன்படுத்தியே இயற்கை உரங்களை பயிர்களின் மீது தெளிக்க முடியும். இதெப்படி சாத்தியம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது சாத்தியப்படும் என கனடா நாட்டு விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
இதற்கு முதலில் வயலில் ஆங்காங்கே தேனீப் பெட்டிகளை வைத்து தேனீக்களை வளர்க்க வேண்டியது அவசியம். பெட்டியில் இருக்கும் சிறு சிறு துளைகளின் வழியே தான் தேனீக்குள் வெளியே சென்று வரும். இந்தத் துளைகளில் இயற்கையான பூஞ்சைக் கொல்லி மருந்துகளைத் தடவி விட வேண்டும். தேனீக்கள் துளைகளின் வழியே நுழையும் போதெல்லாம், அம்மருந்து அவற்றின் உடலில் படும். தேனீக்கள் பறந்து சென்று பயிர்களின் மீதுள்ள பூக்களில் அமரும் போது, பூஞ்சைக் கொல்லி மருந்து பூக்களின் மீது பரவும். இதனால் பூக்களில் பூஞ்சைத் தொற்று ஏற்படுவது தவிர்க்கப்படும். இதே முறையில் தேனீக்களை பாதிக்காத வேறு சில இயற்கை உரங்களையும் தேனீப் பெட்டிகளில் வைக்கலாம்.
பொதுவாக விவசாயிகள் உரங்களைப் பயிர்களின் மீது தெளிக்கும் போது, அது அனைத்துப் பாகங்களிலும் படும். இதனால் பயிர்கள் முழுமையாக நச்சுத்தன்மைக்கு ஆளாகும். அதோடு உரமும் அதிக அளவில் தேவைப்படும். ஆனால், தேனீக்களைக் கொண்டு உரத்தெளிப்பு செய்தால், பூக்களின் மீது மட்டுமே உரங்கள் பரவுவதால், உரத்தேவை குறையும். இதனால் கணிசமாக உரச்செலவைக் குறைக்க முடியும்.
அதோடு, தேனீக்கள் சேகரிக்கும் தேன் மூலமும் ஒரு குறிப்பிட்ட இலாபத்தை ஈட்டலாம். இம்முறையை கனடா விஞ்ஞானிகள் ‘பீ வெக்டார் டெக்னாலஜி’ என்று அழைக்கின்றனர். இந்தியாவில் தேனீ உரத்தெளிப்பு முறை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஒருவேளை விவசாயிகள் இதனை முயற்சி செய்தால், நல்ல பலன் கிடைக்கும் என வேளாண் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.