வனவிலங்குகள் விவசாயப் பயிர்களை சேதம் செய்வதால், அறுவடை செய்ய முடியாமல் பல விவசாயிகள் நட்டத்தை சந்திக்கின்றனர். இதனைத் தடுக்க, எந்தவித பாதிப்பும் இல்லாமல், அதோடு கூடுதல் வருமானமும் கிடைத்து, வனவிலங்குகளை விரட்டும் ஒரு சூப்பரான ஐடியா இருக்கிறது என்றால் யார் தான் வேண்டாம் என சொல்லப் போகிறார்கள். வாங்க அந்த ஐடியாவை கேட்போம்.
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பயிரை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு வருவதற்குள் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை, பூச்சித் தாக்குதல், உரங்களின் விலையேற்றம், மகசூல் குறைதல் மற்றும் விலை சரிவு இப்படி எவ்வளவோ பிரச்சினைகள் விவசாயிகளை வாட்டி வதைக்கிறது. இதில் கூடுதலாக இரவில் வனவிலங்குகள் அவ்வப்போது வந்து பயிர்களை சேதம் செய்கின்றன. இதனைத் தடுக்க விவசாயிகள் பல வழிமுறைகளை கையாண்டாலும், அதில் சில இடர்பாடுகளும் இருக்கின்றன. இருப்பினும் சில விவசாயிகள் பயிர்களின் பாதுகாப்பிற்காக இரவு நேரங்களில் வயல்களிலேயே தங்கி விடுகின்றனர்.
வனவிலங்குகளில் பெரும்பாலும் யானைகள் தான் காடுகளை விடுத்து, ஊர்ப் பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. இவை உருவில் பெரிதாக இருப்பதால், விவசாய நிலங்களில் இறங்கினால் பயிர்கள் முழுவதும் சேதமடைவது உறுதி. இதனால் பெரும் நட்டத்தை சந்திக்கும் விவசாயிகள், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். யானைகளைத் துரத்த சில விவசாயிகள் வெடி வெடிப்பதுண்டு. இதனால், அதிக சத்தத்தைக் கேட்கும் யானைகள் திசையறியாமல் ஓடுகின்றன. இருப்பினும் வனவிலங்குகளையும் நாம் பாதுகாக்க வேண்டியது அவசியமல்லவா! இதற்குத் தான் நாம் தேனீக்களைப் பயன்படுத்த வேண்டும்.
அவ்வளவு பெரிய யானையை விரட்ட சிறு தேனீ போதுமா என்று வியப்பாக இருக்கிறதா! இயற்கையின் ஒவ்வொரு படைப்பும் நமக்கு நிச்சயமாக உதவும் வகையில் தான் இருக்கிறது என்பதை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். உங்கள் வயல் ஓரங்களில் தேனீ பெட்டிகளை வைத்து தேனீக்களை வளர்க்கத் தொடங்குங்கள். இந்தத் தேனீக்கள் இருக்கும் வரை யானைகளால் பயிர்களை நெருங்கவே முடியாது. தேனீக்களைக் கண்டால் யானைகளுக்கு பயமாம். ஏனெனில் யானைகளின் கண்கள் மற்றும் தும்பிக்கையில் தேனீக்கள் கொட்டி விடும். இதனால் தேனீக்களின் சத்தத்தைக் கேட்டால் போதும்; யானைகள் வேறு திசை நோக்கிச் சென்று விடும்.
வயல்களில் தேனீ வளர்ப்பதன் மூலம் பாதிப்புகளைத் தவிர்ப்பது மட்டுமின்றி, யானைகளையும் நாம் பாதுகாக்க முடியும். மேலும், தேனீக்களின் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும். அட இந்த ஐடியா நல்லா இருக்கே என நாம் இங்கு சொல்வதற்கு முன்பே, ஆப்பிரிக்க நாடுகளில் இதனை செயல்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார்களாம். அங்கு வனவிலங்குகளை பயமுறுத்துவதற்கு வெடிகளைப் பயன்படுத்தக் கூடாது. ஆகையால் தான் தேனீக்களைப் பயன்படுத்தி யானைகளைப் பாதுகாப்பாக திசை திரும்புகின்றனர்.
விவசாயிகளே! இனி நீங்களும் தேனீக்களைப் பயன்படுத்தி வனவிலங்குகளை விரட்ட முயற்சி செய்யுங்கள். விவசாயத்தை மட்டுமல்ல, வனவிலங்குகளையும் அழிவின் பாதையில் இருந்து மீட்டெடுங்கள்.