தேனீ வளர்ப்பு விவசாயிகளினுடைய துணை நடவடிக்கையாக மாறி இருக்கிறது. மேலும். தேனீ வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். தேனீக்கள் மகரந்த சேர்க்கைக்கு வித்திடுவதால் பயிர்கள் அதிகம் வளர வாய்ப்பு ஏற்படுகிறது. குறைந்த இட வசதி, குறைந்த நேரம், குறைந்த முதலீடை கொண்டு இத்தொழிலை செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் பலரும் தேனீ வளர்ப்பை முக்கிய வர்த்தக நடவடிக்கையாக மாற்றி இருக்கின்றனர்.
மேலும். தேன்கள் உணவுப் பொருளாக மட்டுமல்லாமல். மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுவதால் தேனுக்கான சந்தை மதிப்பு உலக அளவில் விரிவடைந்து காணப்படுகிறது. இந்தியா தேன் உற்பத்தியில் உலக நாடுகளில் 8வது இடத்தில் உள்ளது. மேலும். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளுக்கு இந்தியா அதிக அளவில் தேன்களை ஏற்றுமதி செய்கிறது. தேன் ஏற்றுமதியில் இந்தியா 9வது இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தேனீ இனம் பெட்டிகளில் வளர்க்க ஏற்றது என்பதால் மிகக் குறுகிய பரப்பில் தேனீ வளர்ப்பை மேற்கொண்டு லாபம் ஈட்ட முடியும். பெரும்பான்மையான விவசாயிகள் மூலத் தேன் பிரிப்பை முக்கிய நடவடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். ஒரு சில விவசாயிகள் மூலத் தேன் பிரிப்போடு சேர்த்து மெழுகு மற்றும் மகரந்தத்தையும் பிரித்து பயனடைந்து வருகின்றனர். இப்படி தேனீ வளர்ப்பின் மூலம் எண்ணற்ற பயன்களை பெற்றாலும் சில சவால்களையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு, நோய் பரவல் ஆகியவை தேனீக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னையாக மாறி இருக்கிறது. தேனீகளுக்கான உணவின்மை, கூட்டம் பிரிதல், ராணி தேனீ உயிரிழப்பு, மகரந்தத்தை சேகரிக்கும் தன்மை குறைவு, தப்பி ஓடுதல், காலநிலை மாற்றம் போன்றவை தேனீ வளர்ப்பவர்கள் சந்திக்கும் சவால்களாக மாறியிருக்கிறது. இது மட்டுமல்லாது, பூஞ்சைகள், பூச்சிகள், பாக்டீரியா, மைக்ரோஸ்போரிடியா, நோய்கள் ஆகியவையும் தேனீக்களை பாதிக்கின்றன.
இவற்றோடு சர்க்கரை பாவு கலப்பு தேனீன் வர்த்தக நடவடிக்கையை பெருமளவில் பாதிக்கிறது. இதனால் விலை குறைவு ஏற்படுகிறது. தேனீ வளர்ப்பினுடைய இன்றியமையாத செயல்பாடு சிறந்த பயிற்சியாகும். ஆனால், பலர் பயிற்சி பெறாமல் மேற்கொள்ளும் நடவடிக்கை மூலம் தேனீ வளர்ப்பு விரைவில் சிதிலம் அடைந்து பாதிப்பை சந்திக்கிறது.