கோட்டிகள் (Coatis) ரக்கூன் குடும்பத்தைச் சேர்ந்த கவர்ச்சிகரமான விலங்கினங்கள் ஆகும். இவை தென் அமெரிக்காவில் அர்ஜென்டினாவின் வடக்கு பகுதிகளில் காணப்படுகின்றன. தனது தனித்துவமான அம்சங்கள் மற்றும் நடத்தைகளுக்கு பெயர் பெற்ற இந்த விலங்குகள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் பயன் தரக்கூடியவை.
கோட்டிகளின் சிறப்பியல்புகள்:
உடலமைப்பு: இவற்றுக்கு நீளமான நெகிழ்வான மூக்குகள் உள்ளன. இவற்றினால் தனது முதன்மை உணவு ஆதாரங்களான பூச்சிகள் மற்றும் பழங்களைத் தோண்டுவதற்குப் பயன்படுத்துகின்றன. நீண்ட புதர் போன்ற வால்களைக் கொண்டிருக்கின்றன. இவற்றின் கணுக்கால் 180 டிகிரியில் சுழலும் தன்மை வாய்ந்தது. இதைக் கொண்டு மரங்களின் உச்சியில் விரைவாக ஏறி, இறங்க இவற்றால் முடியும். இதன் உடலின் நீளத்தைப் போலவே சமமான நீளத்தில் வால் இருக்கும்.
பிறந்த சில நாட்கள் வரை பூனைக்குட்டிகள் போன்று தோற்றத்தில் இருக்கும் இவற்றை பூனைக்குட்டிகள் என்று அழைக்கிறார்கள். பச்சோந்தி போன்ற கண்கள் கொண்ட கோட்டிகளுக்கு வலுவான கண் பார்வை உள்ளது. இதனால் தனது இரையையும், தன்னை வேட்டையாடுபவர்களையும் மிக எளிதில் கண்டுபிடித்து விடுகிறது.
சமூக விலங்குகள்: இவை கூட்டம் கூட்டமாக வாழும் இயல்புடையவை. ஒரு குழுவில் பொதுவாக 30 நபர்கள் வரை இருக்கலாம். இவை பெண் கோட்டிகளால் வழி நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றின் குழுக்கள் பேண்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. தாய் கோட்டிகள் தங்கள் குட்டிகளைப் பாதுகாப்பாக ஒரு குகையில் விட்டுவிட்டு உணவு தேடிச் செல்லும். அடிக்கடி திரும்பி வந்து குட்டிகள் பத்திரமாக இருக்கிறதா என்று பரிசோதிக்கும்.
வாழ்விடம்: அர்ஜென்டினாவின் வடக்கு பகுதியில் காணப்படும் இந்த விலங்குகள் வெப்பமண்டலக் காடுகள், புல்வெளிகள் மற்றும் மலைப்பகுதிகள் உட்பட பல்வேறு சூழல்களில் செழித்து வளர்கின்றன. தான் தங்குமிடம் மற்றும் உணவு தேடும் இடங்களில் ஏராளமான பாதுகாப்பான அம்சங்களைக் கொண்ட பகுதிகளை விரும்புகின்றன.
உணவு முறை: கோட்டிகள் பூச்சிகள், பழங்கள், சிறிய பாலூட்டிகள், புழுக்கள், பல்லிகள், சிலந்திகள், எலிகள் மற்றும் முட்டைகள் உட்பட பல வகையான உணவுகளை உண்ணும். உணவு தேடும் திறமைக்கு பெயர் பெற்றவை. இவை உதிர்ந்த பழங்கள் மற்றும் பெர்ரிக்களை விரும்பி உண்ணும்.
சுற்றுச்சூழலின் நண்பர்கள்:
விதை பரவல்: கோட்டிகள் சுற்றுச்சூழல் அமைப்புகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பெர்ரிக்களை உண்பதால் அவற்றின் கொட்டைகளை வெளியேற்றுகின்றன. இதனால் பல தாவர இனங்கள் முளைப்பதற்கும் பரவுவதற்கும் உதவுகிறது. காடுகளின் மீள் உருவாக்கம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு இது உதவுகிறது.
மண் காற்றோட்டம்: பூச்சிகள் மற்றும் பிற உணவு ஆதாரங்களைத் தேடும்போது மண் மற்றும் இலைக்குப்பைகளை தோண்டி எடுக்க தனது நீண்ட மூக்கு மற்றும் நகங்களைப் பயன்படுத்துகின்றன. இந்தத் தோண்டுதல் நடவடிக்கை மண்ணை காற்றோட்டமாக ஆக்குகிறது. இது சிறந்த நீர் ஊடுருவல் மற்றும் ஊட்டச்சத்து விநியோகத்தை அனுமதிக்கிறது. தாவர ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் நன்மை பயக்கிறது.
பூச்சிகள் கட்டுப்பாடு: கோட்டிகள் முதன்மையாக வண்டுகள், எறும்புகள் மற்றும் லார்வாக்கள் உள்ளிட்ட பூச்சிகளை உண்ணுகின்றன. இவற்றை உண்ணுவதால் பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க கோட்டிகள் உதவுகின்றன. தீங்கு விளைவிக்கும் பூச்சிகளில் இருந்து தாவரங்கள் மற்றும் பயிர்களைப் பாதுகாக்கின்றன. மேலும் மற்ற உயிரினங்களுக்கு நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை உருவாக்குகின்றன. இவற்றின் உணவுப் பழக்கம் கரிமப் பொருள்களின் முடிவுக்கு பங்களிக்கிறது. இது சுற்றுச்சூழல் அமைப்பில் ஊட்டச்சத்து சுழற்சியை மேம்படுத்துகிறது.