அணைப்பு (HUG) என்பது பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு உலகளாவிய வடிவம் ஆகும். இது உலகெங்கிலும் உள்ள எல்லா கலாசாரங்களிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மனிதர்கள் மனம் செழிக்க அரவணைப்புகள் அவசியம். பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அணைப்பு மிகவும் அவசியம். அணைப்பு சிறந்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் மன ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கிறது. அதன் சிறப்புகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் தனது தந்தை தன்னைத் தொட்டு பேசுவதே இல்லை. தோளில் கை போட்டு லேசாக அணைப்பது கூட இல்லை என்கிற ஏக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். வளர்ந்த குழந்தைகள் ஆனாலும் அவர்கள் அணைப்பிற்காக ஏங்குகிறார்கள் என்பதே நிஜம். தந்தையின் ஆறுதலான அணைப்பு குழந்தைகளுக்கு மிகவும் தன்னம்பிக்கையைத் தரும்.
கட்டிப்பிடித்தல் என்பது ஒரு எளிய ஆனால், சக்தி வாய்ந்த செயலாகும். இது எண்ணற்ற, உடல் உணர்ச்சி மற்றும் உளவியல் நன்மைகளைக் கொண்டிருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரவணைக்கும்போது பிள்ளைகள் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறார்கள். பெற்றோரின் பாசத்தை அறிந்து கொள்கிறார்கள். அவர்களின் தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. தினமும் ஒரு நிமிடமாவது பிள்ளைகளை அரவணைத்துக் கொஞ்சுவது மிகவும் முக்கியம்.
உறவினர்களை அல்லது நண்பர்களை கட்டிப்பிடிப்பது என்பது அவர்களது உறவு முறையை, நட்பை ஆழப்படுத்த உதவும். அக்கறை, அன்பு, பாராட்டு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வார்த்தைகள் அல்லாத ஒரு சிறந்த வழியாகும் அணைப்பு. இது நெருக்கத்தை வளர்க்கிறது. உணர்ச்சிபூர்வமான தொடர்புகளை வலுப்படுத்துகிறது.
அணைப்பு தரும் உடல் ஆரோக்கிய நன்மைகள்: அணைப்பு நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கட்டிப்பிடிக்கும்போது ஆக்சிடாசின் வெளியீடு இயற்கையான வலி நிவாரணியாக செயல்படும். சிறிய உடல் வலிகள் மற்றும் அசௌகரியங்களை தணிக்கும். குழந்தைகள் உடல்நலம் சரியில்லாதபோது அவர்களை அணைத்து ஆறுதல்படுத்தும்போது மிக விரைவில் அவர்கள் நோயிலிருந்து மீண்டு வருவார்கள். வளர்ந்த பிள்ளைகளுக்கும் இது தேவை.
மனநிலை மேம்பாட்டு நன்மைகள்: காதலர்கள் மற்றும் தம்பதியர்களுக்கும் கட்டிப்பிடி வைத்தியம் உதவும். காதல் ஹார்மோன் என்று அறியப்படும் ஆக்சிடாசின், தம்பதிகள் அல்லது காதலர்கள் அணைத்துக் கொள்ளும்போது வெளியாகிறது. இது அவர்களது மனநிலை மேம்பாட்டிற்கு உதவுகிறது.
உளவியல் நன்மைகள்: மகிழ்ச்சியின் உணர்வுகளை அதிகரிக்கவும், தளர்வை ஊக்குவிக்கவும் அணைப்பு உதவுகிறது. இது மனச்சோர்வை எதிர்த்துப் போராடுகிறது. கட்டிப்பிடிப்பது போன்ற உடல் ரீதியான தொடுதல் தனிமையின் உணர்வுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. மிகவும் நேர்மறையான கண்ணோட்டத்திற்கு பங்களிக்கிறது. அணைப்பின் மூலம் அன்பாகவும் ஆதரவாகவும் உணரும்போது சுய மதிப்பையும் நம்பிக்கையையும் அதிகரிக்கும். இது நேர்மறையான சுய பிம்பத்தை ஊக்குவிக்கும். தான் நேசிக்கப்படுகிறோம் என்கிற உணர்வு அவரது மனதில் நேர்மறை உணர்வை வளர்க்கும்.
உறவுமுறை மேம்பாடு: அணைப்பு மோதல்களைத் தீர்க்கிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் இடையே மனஸ்தாபம் அல்லது மோதல்கள் ஏற்படும்போது இந்த அரவணைப்பு ஒரு பாலமாக செயல்பட்டு மோதலைத் தடுத்து அன்பின் பிணைப்பை உருவாக்குகிறது.
சிறந்த தூக்கம்: அணைப்பு குழந்தைகளையும் பெரியவர்களையும் நிதானமாக உணர வைக்கிறது. இதனால் அவர்கள் உடலும் மனமும் தளர்ந்து நல்ல ஆழமான தூக்கத்தை அனுபவிக்கிறார்கள். ஆறுதல் மற்றும் பாதுகாப்பு உணர்வு நிம்மதியான இரவு தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
கலாசார முக்கியத்துவம்: பல கலாசாரங்களில் கட்டிப்பிடிப்பது என்பது ஒரு பாரம்பரிய வாழ்த்து அல்லது பிரியாவிடை போன்றது. சில சமயங்களில் வார்த்தைகளால் செய்ய முடியாத அல்லது வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை அணைப்பு செய்கிறது.