விவசாயத்தில் கூடுதல் மகசூலைப் பெற வேண்டும் என விவசாயிகள் பலரும் பல யுக்திகளைக் கையாள்கின்றனர். இதில் ஒரு யுக்தி தான் பல தானியப் பயிர் சாகுபடி. அங்கக வேளாண்மையின் சிறந்த தொழில்நுடபம் இது. பல தானியப் பயிர் சாகுபடி எப்படி விவசாயிகளுக்கு உதவும் என்பதை இப்போது பார்ப்போம்.
நல்ல மகசூல் கிடைக்க மண்வளம் மிகவும் முக்கியமானது. பல தானியப் பயிர் சாகுபடி முறையைக் கையாள்வதன் மூலம் மண் வளத்தைப் பெருக்க முடியும். அதாவது நிலத்தில் பல தானியங்களின் விதைகளை விதைத்து, பயிர்கள் வளர்ந்து பூக்கும் பருவத்தில் நிலத்திலேயே மடக்கி உழுதல் வேண்டும். பல தானியங்களின் பயிர்கள் மண்ணிற்கு மிகச் சிறந்த உரம் என்பதால், மண்ணின் வளம் மேம்படும்.
பல தானியப் பயிர் சாகுபடியில், தானியங்களின் விதைத் தேர்வில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். தானியப் பயிர்களில் 2 வகை விதைகள், பயறு பயிர்களில் 2 வகை விதைகள், எண்ணெய் வித்துகளில் 2 வகை விதைகள் மற்றும் பசுந்தாள் உரங்களில் 1 வகை விதை என மொத்தம் 7 வகைப் பயிர் விதைகளை தலா 1 கிலோ எடுத்துக் கொள்ள வேண்டும். 1 ஏக்கருக்கு இந்த 7 கிலோ விதைகளை கோடைகால இறுதியில் பருவப் பயிருக்கு முன்னதாக விதைத்து, மடக்கி உழ வேண்டும். நிலத்தின் அளவுக்கு ஏற்ப விதைகளின் அளவை எடுத்துக் கொள்ளலாம்.
முக்கியத்துவம்:
செயற்கை உரங்களின் பயன்பாட்டால், மண்ணின் வளமானது குன்றி விட்டது. இனி பயிர் விதைத்தால் செயற்கை உரங்கள் அவசியம் என்ற நிலையில் பல விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையிலிருந்து விவசாயிகளையும், விவசாயத்தையும் மீட்டெடுக்க பல தானியப் பயிர் சாகுபடி அவசியம் தேவை. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் இழந்த மண்ணின் வளத்தை மீட்டெடுக்க முடியும். பல தானியப் பயிர் சாகுபடியின் மூலம் மண்ணில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். செயற்கை உரங்களினால் மண்ணில் ஏற்பட்ட நச்சுத்தன்மையின் அளவு குறைந்து, மண்ணில் கரிமச்சத்துகளின் அளவு அதிகரிக்கும்.
தானிய வகைகளில் கம்பு, சோளம், சாமை மற்றும் திணை ஆகியவற்றையும், பயறு வகைகளில் பாசிப்பயறு, கொள்ளு, தட்டைப் பயறு, உளுந்து மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றையும், எண்ணெய் வித்துகளில் சூரியகாந்தி, நிலக்கடலை, எள் மற்றும் ஆமணக்கு ஆகியவற்றையும், பசுந்தாள் உரங்களில் சணப்பை மற்றும் தக்கைப் பூண்டு ஆகியவற்றையும் ஒன்றாகக் கலந்து ஒரே நிலத்தில் விதைக்க வேண்டும். பல தானியப் பயிர்களை விதைத்து உழுத பிறகு, கோமியம், ஜீவாமிர்தம், மாட்டுச்சாணம் மற்றும் பஞ்சகவ்யத்தைப் பயன்படுத்தி இயற்கை விவசாயத்தைத் தொடங்கலாம்.
செயற்கை உரங்களின் ஆதிக்கம் உள்ள தற்போதைய காலகட்டத்தில் பல தானியப் பயிர் சாகுபடி முறை மீண்டும் பயன்பாட்டுக்கு வர வேண்டும். விவசாயிகள் மத்தியில் இந்த முறை குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.