வீட்டுத் தோட்ட வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள், பல வகையான தாவரங்களை வளர்ப்பதும், தோட்டத்தில் நேரத்தை செலவிடுவதும் வழக்கம். இருப்பினும் சிலர் வீட்டிற்குள் செடி, கொடிகளை வளர்த்து அழகாக்குவதில் அதிக அக்கறை காட்டுவார்கள். ஆனால், எல்லா தாவரங்களையும் வீட்டிற்கு உள்ளே வளர்க்க முடியாது. அதற்கென சில தாவரங்கள் உள்ளன. மேலும் உட்புறத் தாவர (Indoor Plants) வளர்ச்சிக்கு ஏற்ப மண் கலவைகளும் உள்ளன. இது தெரியாமல் கிடைத்த மண் கலவையை பயன்படுத்தி விட்டு, செடிகள் நன்றாக வளரவில்லை என புலம்புபவர்களும் உண்டு. இவர்களுக்கு உதவும் வகையில் உட்புறத் தாவரங்களின் வளர்ச்சிக்கு எந்தெந்த மண் கலவை ஏற்றது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஒரு தாவரத்தின் வளர்ச்சிக்கு தண்ணீர் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு மண்ணின் தரமும் முக்கியம். தண்ணீரைத் தேக்கி வைக்காமல் ஈரப்பதத்தை நீண்ட நேரத்திற்கு தக்க வைத்துக் கொள்வது தான் ஒரு சிறந்த மண்ணிற்கு எடுத்துக்காட்டாகும். சிறந்த மண்ணானது, வேர் அழுகல் மற்றும் பிற தாவர நோய்களில் இருந்து செடியைப் பாதுகாக்க வல்லது. போதுமான காற்றோட்டத்தை வேர்களுக்கு வழங்குபவை மண் கலவை தான். இதுதவிர சரியான முறையில் தாவரங்கள் வளரவும், சுவாசிக்கவும் மண் கலவை அனுமதிக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
தோட்ட மண் - உரக் கலவை:
இயற்கையான மண் கலவையை நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பினால் தோட்ட மண், உரம் மற்றும் மணல் ஆகியவற்றின் கலவையை உட்புறத் தாவரங்களுக்கு பயன்படுத்தலாம். இருப்பினும், தோட்ட மண் கொஞ்சம் கனமாக இருக்கும் என்பதால், அனைத்து வகையான உட்புறத் தாவரங்களுக்கும் ஏற்றதாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மணல் மற்றும் உரத்தை இக்கலவையில் சேர்ப்பதன் மூலம், மண்ணின் வடிகால் வசதி மேம்படும்.
தேங்காய் நார்/துருவல் கலவை:
உட்புறத் தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுவதில் தேங்காய் நார் பெரிதும் பங்காற்றுகிறது. இவை ஈரப்பதத்தை நீண்ட நேரத்திற்கு தக்க வைத்துக் கொள்ளும். இக்கலவையில் இருக்கும் உரம் மற்றும் ஃபெர்லைட் ஆகிய இரண்டும் மண்ணின் வடிகால் வசதியை மேம்படுத்துகிறது. மேலும் இவை தாவரங்களுக்கு ஊட்டச்சத்துகளை வழங்குவதில் முக்கிய காரணியாகத் திகழ்கின்றன. ஈரப்பதத்தை தக்க வைப்பதிலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் செயல்படுவதிலும் தேங்காய் நார் மிகவும் சிறந்தது.
பீட்பாசி கலவை:
இந்திய காலநிலையைப் பொறுத்தவரையில், பீட்பாசி கலவை உட்புறத் தாவரங்களுக்கு மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. இந்தக் கலவையில் ஃபெர்லைட் மற்றும் வெர்மிகுலைட் ஆகிய உரங்கள் நிரம்பியுள்ளன. இந்தக் கலவை மண்ணின் அமைப்பை மேம்படுத்தும் போது, ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்கிறது. ஃபெர்லைட் வேர்களுக்கு காற்றோட்டத்தை அளிக்கிறது; வெர்மிகுலைட் மண்ணின் வடிகால் வசதியை மேம்படுத்துகிறது.
வீட்டில் உட்புறத் தாவரங்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம், உங்கள் வீட்டை வெகு விரைவில் பசுமையாக மாற்றி விடும். இருப்பினும், வீட்டுத் தோட்டத்தில் காட்டும் அக்கறையை உட்புறத் தாவரங்களிடத்திலும் காட்ட வேண்டியது மிகவும் முக்கியம்.