

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற பறவைகள் மருத்துவமனை டெல்லியில் உள்ள ஜெயின மந்திர் வளாகத்தில் (Jain Mandir complex) அமைந்துள்ள "சேரிட்டி பறவைகள் ஆஸ்பத்திரி" (Charitable Trust Bird Hospital) ஆகும்.
புது தில்லி செங்கோட்டைக்கு எதிரே உள்ள திகம்பர ஜைனக் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள 'சேரிட்டி பேர்ட்ஸ் ஹாஸ்பிடல்'. காயமடைந்த பறவைகளுக்கும் முயல்களுக்கும் உதவுவதற்காக, நிறுவப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம். ஜெயின் ஆன்மீகத் தலைவரான ஆச்சார்ய தேஷ்பூஷன் மகாராஜின் அறிவுறுத்தல்களின் கீழ் மருத்துவமனையின் கட்டுமானம் தொடங்கப்பட்டு 1956-ல் ஒரு ஜைனப் பிரிவினரால் திறக்கப்பட்டது.
இப்போது இந்த மருத்துவமனை ஒரு விசித்திரமான சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. இங்கு வரும் பார்வையாளர்கள், கட்டுப்போட்ட பறவைகளான புறாக்கள், சில சமயங்களில் மயில் மற்றும் கிளி போன்றவையும் குணமடைந்து வருவதைக்காண வருகிறார்கள்.
டெல்லி சாந்தினி சௌக் பறவைகள் ஆஸ்பத்திரிதான் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பறவைகள் ஆஸ்பத்திரி. இங்கு தினமும் 50 முதல் 60 வரை அடிபட்ட, நோயுற்ற புறா, கிளி, வாத்து, காக்கை மற்றும் கொன்றுண்ணிப் பறவைகள் வரை சிகிச்சைக்கு கொண்டு வரப்படுகின்றன. பறவைகளின் எலும்பு முறிவுகள் முதல் நீரிழப்பு மற்றும் விஷம் வரையிலான அனைத்தையும் கையாளும் கால்நடை மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள், பராமரிப்பாளர்கள் குழு இணைந்து அவைகளுக்கு சிகிச்சை அளிக்கிறது.
சேரிட்டி பேர்ட்ஸ் மருத்துவமனையில், ஒரு சிறிய ஊழியர் குழு ஒரே நேரத்தில் சுமார் 2,600 பறவைகளைப் பராமரித்து வருகிறது. காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட பறவைகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள், மருந்துகள், உணவு மற்றும் பாதுகாப்பான ஓய்விடம் ஆகியவற்றை அவர்கள் வழங்குகிறார்கள். இந்த மருத்துவமனை, 'வாழு, வாழ விடு' என்ற தத்துவத்தைப் பின்பற்றும் ஜைன சமூகத்தினரிடமிருந்து பெறப்படும் நன்கொடைகளைக் கொண்டே முழுமையாக நடத்தப்படுகிறது.
இங்கு 10,000 க்கும் மேற்பட்ட பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பறவைகளுக்காக தனித்தனி வார்டுகள் உள்ளன. சரியான நேரத்தில் பறவைகளுக்கு உணவும் நீரும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் சிகிச்சை முடிந்து நலன் பெற்ற பறவைகள் சுதந்திரமாக பறக்கவிடப்படுகின்றன.
இது உலகிலேயே பறவைகளுக்கென பிரத்யேகமாக இயங்கும் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகும். காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் இந்த மருத்துவமனைக்கு மருத்துவ உதவிக்காக பறவைகளை கொண்டு செல்லலாம். எமர்ஜென்சி என்றால் எந்நேரமும் செல்லலாம்.
இங்கு அனைத்து வகையான பறவைகளுக்கும், குறிப்பாக காயமடைந்த, நோய்வாய்ப்பட்ட அல்லது கைவிடப்பட்ட பறவைகளுக்கு இலவசமாக சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் பறவைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் பறவைகள் குணமடைந்த பின் பறந்து செல்வதற்கான கூண்டுகள் உள்ளன. இது ஜெயின் தர்மார்த்த அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது.
இது ஒரு தொண்டு மருத்துவமனை என்பதால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பறவைகளுக்காகப் பணத்தையோ, அல்லது விதைகளையும் உணவையோ நன்கொடையாக வழங்கலாம். நீங்கள் வழங்கும் அனைத்து நன்கொடைகளுக்கும், சிகிச்சைக்காக ஒரு பறவையைக் கொண்டு வரும்போதும் உங்களுக்கு ரசீது வழங்கப்படும்.
மக்காச்சோளம், கொண்டைக்கடலை, தினை, பாசிப்பயறு, கோதுமை, சோளம், உளுந்து மற்றும் கடுகு விதைகளைக் கொண்டு வரலாம். இவை முழு தானியங்களாகவும் கலப்படம் இல்லாதவையாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.