
உலகில் பல வகையான உயிரினங்களும் தாம் உயிர்வாழ விதவிதமான உணவுப் பழக்கங்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் சில நமக்கு அதிர்ச்சியூட்டுவதாகவும் இருக்கின்றன. சில வகை மீன்கள் கரையோரம் வரும் பறவைகளைப் பிடித்து தனக்கு உணவாக்கிக்கொள்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. ஆப்பிரிக்கன் டைகர் ஃபிஷ்: கடலின் கரையோரம் தாழ்வாகப் பறந்து வரும் பறவைகளை தண்ணீருக்குள்ளிருந்து ஒரே பாய்ச்சலில் எகிறிப் பாய்ந்து வாயால் கவ்விப்பிடித்து கூரிய பற்களால் கடித்து விழுங்கி விடும் இந்த ஆப்பிரிக்கன் டைகர் ஃபிஷ்.
2. வெல்ஸ் கேட் பிஷ் (Wels Catfish): ஃபிரான்ஸ்ஸின் ஒரு பகுதியில் இந்த அசுரத்தனமான கேட் பிஷ் காணப்படுகிறது. பசியெடுக்கும்போது இந்த மீன் கடற்கரையின் ஓரமாக வந்து நீரில் உலவிக் கொண்டிருக்கும். அப்பாவியாக அங்கு வந்து நீர் அருந்தும் புறாக்களை லாவகமாகப் பற்றி இழுத்து தனக்கு உணவாக்கிக் கொள்ளும்.
3. அரபைமா (Arapaima): அமேசான் நதியின் ஃபிரஷ் வாட்டரில் வசிக்கும் ஜயண்ட் சைஸ் மீன் இது. வாக்யூம் கிளீனர் தனது முன்னிருக்கும் குப்பைகளை உறிஞ்சி எடுப்பது போல் இந்த மீன், கரையோரம் காற்றாட வந்து அமர்ந்திருக்கும் சிறிய பறவைகளை தனது வாய்க்குள் உறிஞ்சி எடுத்து விழுங்கிவிடும். பறவை எதிர் வினையாற்ற சிறிதும் இடம் கொடுக்காமல் மிக விரைவில் இச்செயல் நடந்து முடிந்துவிடும்.
4. நார்தெர்ன் பைக் (Northern Pike): நீர் நிலைகளின் கரையோரம், நீருக்குள் பதுங்கியிருந்து வாத்துக் குஞ்சுகள் போன்ற நீர்ப்பறவைகள் பக்கத்தில் வரும்போது, மின்னல் வேகத்தில் பாய்ந்து பிடித்து தனக்கு உணவாக்கிக் கொள்ளும்.
5. லார்ஜ் மவுத் பாஸ் (Large Mouth Bass): நீருக்கருகில் அமர்ந்திருக்கும் பறவைக் குஞ்சுகளைப் பிடித்து இழுத்து உணவாக்கிக் கொள்வது இதன் வழக்கம்.
6. முர்ராய் காட் (Murray Cod): ஆஸ்திரேலிய நதிகளில் வாழும் மீன் இது. ஸ்டார்லிங் போன்ற சிறு பறவைகள், நதியின் கரையோரம் வரும்போது அவற்றைப் பிடித்து அப்படியே விழுங்கிவிடும் குணம் கொண்ட மீன் இது.
7. நைல் பெர்ச் (Nile Perch): அதிக எடை கொண்ட இந்த ஆப்பிரிக்கன் ஃபிஷ், மேலே பறந்து கொண்டிருக்கும் பறவை திடீரென நீருக்குள் டைவ் அடிக்கும்போது, எதிர்பாராத வகையில் நீருக்கு அடியில் இருந்து இந்த மீன் அந்தப் பறவையைப் பிடித்துத் தனக்கு உணவாக்கிக் கொள்ளும். தண்ணீரில் அதிக தூரம் நீந்திக் கொண்டிருக்கும் பறவைகளையும் இதே முறையில் பிடித்து உட்கொண்டுவிடும்.