
எண்ணெய் திமிங்கிலம் வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக் கழிவுப் பொருள் அம்பர்கிரீஸ் (Ambergris) எனப்படுகிறது. இதனை, ‘திமிங்கில வாந்தி’ என்றும் சொல்கின்றனர். எண்ணை திமிங்கிலம் கடல்வாழ் உயிரினங்களில் ஒன்றான பீலிக் கணவாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உண்ணும் வழக்கமுடையது. திமிங்கிலத்தால் உண்ணப்பட்ட பீலிக் கணவாயின் ஓட்டைச் செரிக்க முடியாமல் போகிறது.
இந்த ஓடுகள் திமிங்கிலத்தின் குடலில் சிக்கிக்கொள்கின்றன. இந்த ஓட்டினால் திமிங்கிலத்தின் உள்ளுறுப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த ஒட்டை சுற்றிய செரிமான அமைப்பிலிருந்து ஒரு சிறப்பு வகை திரவம் உற்பத்தியாகிறது. இதனைத்தான் ‘அம்பர்கிரீஸ்’ என்கின்றனர். இந்த அம்பர்கிரீஸை சில வேளைகளில், எண்ணெய் திமிங்கிலங்கள் வாந்தியெடுப்பதன் மூலம் வெளியேற்றுகின்றன. சில எண்ணெய் திமிங்கலங்கள், இதை மலப்புழை வழியாக வெளியேற்றுகின்றன.
எண்ணெய் திமிங்கிலம் வாந்தியாக அல்லது மலப்புழை வழியாக வெளியேற்றிய அம்பர்கிரீஸ் கடலின் மேற்பரப்பில் மிதக்கிறது. சூரிய ஒளி மற்றும் உப்பு நீரும் சேர்ந்து இந்த அம்பர்கிரீஸை வலுப்படுத்துகின்றன. கடல் நீரில் தொடர்ந்து மிதந்து பயணம் செய்வதால், இது நீள் வட்டம் அல்லது வட்ட வடிவத்தினைப் பெறுகிறது. இது கருப்பு, வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் எண்ணெய் நிறைந்த பொருளாக இருக்கின்றது. இந்த அம்பர்கிரீஸ் கரையை அடைய பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் ஆகும்.
கடற்கரை ஓரமாக ஒதுங்கும் அம்பரீஸை சேகரித்து, அதனை வணிகம் செய்பவர்கள் பலர் இருக்கின்றனர். அம்பர்கிரீஸின் வாசனை நாய்களை அதிக அளவில் கவர்ந்திழுக்கக் கூடியதாக இருக்கும். எனவே, கடலோரப் பகுதிகளில் அம்பர்கிரிஸை சேகரித்து வணிகம் செய்யும் நபர்கள், இதற்கென சில நாய்களை வளர்ப்பதுடன், அதற்கென்று சிறப்புப் பயிற்சியும் அளித்து வைத்திருக்கின்றனர்.
இந்த அம்பர்கிரீஸின் மணம் முதலில் கெட்ட நாற்றம் கொண்டதாக இருக்கும். ஆனால், அது உலர்ந்த பிறகு மிகவும் நறுமணமாக மாறும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அம்பர்கிரீஸ் எத்தனை பழையதோ, எத்தனை பெரியதோ அதற்குத் தகுந்தபடி, அதன் நறுமணமும் அதிகரிக்கிறது. அம்பர்கிரீஸ் நறுமணப் பொருட்களைத் தயாரிக்கப் பயனுள்ளதாக இருக்கிறது. இதே போன்று பாலியல் மருந்துகள் தயாரிப்புகளிலும் இது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக அம்பர்கிரிஸ் வாசனை திரவியமாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. மார்கோபோலோ உள்ளிட்ட பன்னாட்டுக் கடல் பயணிகளின் பயணக் குறிப்புகளில் அம்பர்கிரீஸ் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தைத் தவிர, யுனானி மருத்துவத்திலும் இது பயன்படுத்தப்படுகிறது. இது மூளை, உடல், நரம்பு மற்றும் பாலுறவு பிரச்னைகளுக்கு பல்வேறு மூலிகைகளுடன் சேர்த்துப் யன்படுத்தப்படுகிறது. இது யுனானி மருந்தான மஜூன் மும்சிக் முகாவ்வி உடன் சர்க்கரைப் பாகு மற்றும் பிற மூலிகைகளுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது.
அம்பர்கிரீஸ் அரிதாகவே கிடைப்பதால், அரபு நாடுகளில் இதற்கான தேவை அதிகமாக உள்ளது. இதன் விலை தங்கத்தின் விலையை விட அதிகமாக இருப்பதால், இதனை, 'கடல் தங்கம்' அல்லது 'மிதக்கும் தங்கம்' என்றும் அழைக்கின்றனர். பன்னாட்டுச் சந்தையில் இதன் விலை கிலோ ஒன்றுக்கு 1.5 கோடி ரூபாய் வரை மதிப்பிடப்படுகிறது. இந்தியாவில் மிக நீளமான, சுமார் 1,600 கிலோ மீட்டர் கடற்கரை குஜராத்தில் உள்ளது. குறிப்பாக, குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரத் தீபகற்பக் கடலிலும், ஒடிசா கடலிலும் அம்பரிஸ் சேரிக்கப்படுகிறது. அவ்வப்போது,கேரள கடற்கரையிலும் அம்பர்கிரீஸ் கிடைக்கிறது.
எண்ணெய் திமிங்கிலத்தின் எலும்புகள், எண்ணெய் மற்றும் அம்பர்கிரீஸ் ஆகியவற்றுக்காக அதிகம் வேட்டையாடப்படுகின்றன. இதனால் 1970ம் ஆண்டு முதல் ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அம்பர்கிரீஸ் வணிகத் தடைச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலும் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகளின் கீழ், எண்ணெய் திமிங்கிலங்கள் பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் தகுதியைப் பெற்றுள்ளன.
1986ம் ஆண்டு முதல் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் 2வது அட்டவணையின் கீழ் இந்தியாவில் எண்ணெய் திமிங்கிலங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும், எண்ணெய் திமிங்கிலங்கள் அல்லது அவற்றின் உறுப்புகளை வணிகம் செய்வது சட்டவிரோதமானது. எனவே, அம்பர்கிரீஸ் வணிகத்திற்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
அம்பர்கிரீஸ் வணிகத்திற்கு ஐக்கிய இராச்சியம், பிரான்சு, சுவிட்சர்லாந்து மற்றும் மாலத்தீவுகள் போன்ற சில நாடுகள் அனுமதி அளித்திருக்கின்றன. ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகள் தடை விதித்திருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.