
கருஞ்சிறுத்தை (Black panther) என்பது மைக்கருமை நிறம் கொண்ட பூனைக்குடும்பத்தில் உள்ள சிறுத்தை அல்லது ஜாகுவார் இனத்தைச் சேர்ந்ததாகும். இது ஒரு தனி இனம் அல்ல, கருப்பு ரோமங்களின் தோலால் வகைப்படுத்தப்படுகிறது. இவ்வினங்கள் பொதுவாக ஆசியா, ஆப்பிரிக்கா, போன்றவற்றில் வாழும். இவை சிறுத்தைகள் என்றும் அமெரிக்கப் பகுதியில் வாழ்பவை ஜாகுவார் வகையிலும் சேர்க்கப்படுகிறது. இந்தியாவில், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகள், வடகிழக்கின் அடர்ந்த காடுகள் மற்றும் மத்திய மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி, அதன் வளமான பல்லுயிர் பெருக்கத்திற்கு பெயர் பெற்றது மற்றும் கருஞ்சிறுத்தைகளுக்கு ஒரு முக்கிய வாழ்விடமாகும்.
பிளாக் பாந்தர் என்ற பெயர் மெலனிசத்தால் (melanism) ஏற்படும் கருப்பு நிறத்தை குறிக்கிறது. இது சில விலங்கினங்களில் காணப்படும் மரபணு பண்பாகும். அவற்றின் உணவு, அவை வாழும் வாழ்விட வகையைப் பொறுத்தது. அவை பொதுவாக சிறு விலங்குகள், பறவைகள் மற்றும் மீன்கள் போன்றவற்றை வேட்டையாடி உண்கின்றன.
கருஞ்சிறுத்தைகள் சிறந்த நீச்சல் மற்றும் மிகவும் அதிவேகமாக மரம் ஏறும் சக்தி கொண்டவை. அவை மான் மற்றும் குரங்குகள் போன்ற நடுத்தர அளவிலான விலங்குகள், அதே போல் சிறிய முயல்கள் மற்றும் பறவைகள் உட்பட தங்கள் இரையைப் பிடிக்க 20 அடி வரை ஏறும்.
பிளாக் பாந்தர்கள் பொதுவாக தனிமைப்பட்டு வாழ்பவை; ஆனால் சில நேரங்களில் அவை கூட்டமாக வேட்டையாடவும் செய்கின்றன. மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பிளாக் பாந்தர்களின் வாழ்விடம் அச்சுறுத்தலுக்கு ஆளாவதால் இந்த இனம் அதிகமாக அழிந்து வருகிறது. உலகில் தோராயமாக 1,73,000 கருஞ்சிறுத்தை எஞ்சியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவை கூர்மையான செவிப்புலன், பார்வை மற்றும் சக்திவாய்ந்த தாடை, நம்பமுடியாத வாசனை உணர்வைக் கொண்டுள்ளன. கருப்பு சிறுத்தை 'காட்டின் பேய்' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இவை இரவு நேரத்தில் தந்திரமான, திருட்டுத்தனமான தனது இரையை தாக்கும்.
பெஞ்ச் தேசியப் பூங்கா (pench national park), தடோபா தேசியப் பூங்கா, கபினி நேஷனல் பார்க், நாகர்ஹோல், பத்ரா வனவிலங்கு சரணாலயம் மற்றும் அசாமில் உள்ள மனாஸ் தேசிய பூங்கா போன்ற சரணாலயங்கள் கருஞ்சிறுத்தைகளைப் பார்ப்பதற்குப் பெயர் பெற்றவை.
ஒடிசாவின் காடுகளில் ஒரு கருஞ்சிறுத்தையை சமீபத்தில் பார்த்ததாக அறிவிக்கப்பட்டது. கருஞ்சிறுத்தைகள் இயல்பாகவே மனிதர்களுக்கு நட்பானவை அல்ல. மேலும் அவை தூரத்தில் வைக்கப்பட வேண்டிய காட்டு விலங்குகள். அவை பொதுவாக மனிதர்களைத் தவிர்க்கின்றன என்றாலும், அவை ஆபத்தானவை. அவற்றை அணுகவோ கையாளவோ கூடாது.
இந்தியாவில் கருஞ்சிறுத்தைகள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் அவற்றை செல்லப்பிராணிகளாக வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.