இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட் உரையை வாசிக்கும்போது, இந்தியாவில் ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரத் திட்டம் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்தது வரவேற்கத்தக்க வகையில் உள்ளது. ஆனால் இப்படி பொருத்தப்படும் சூரிய ஒளி பேனல்கள், குடும்பங்களுக்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சரி வாருங்கள் இந்த பதிவில் வீட்டில் சூரிய ஆற்றலின் செயல்திறன் எப்படி இருக்கும் எனத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் சூரிய வளம்: இந்தியாவில் சூரிய சக்தியின் மிக முக்கிய நன்மைகளில், நாட்டில் உள்ள ஏராளமான சூரிய வளங்களைச் சொல்லலாம். சராசரியாக இந்தியாவில் 300 நாட்களுக்கு வெயில் காய்கிறது. இதனால் உலக அளவில் இந்தியா அதிக சூரிய ஆற்றல் திறனைக் கொண்டுள்ளது. இப்படி மிகுதியான சூரிய ஆற்றல் காரணமாக, வீட்டில் சோலார் பேனல்கள் பொருத்தி சூரிய சக்தியை பயன்படுத்துவது ஒரு சிறந்த தேர்வாக அமையும்.
செலவுகள்: கடந்த சில ஆண்டுகளாகவே அரசின் முன்னெடுப்பால் சோலார் பேனல்களின் விலை மிகவும் குறைந்துள்ளது. மேலும் ‘ஜவஹர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன்’ போன்ற அரசாங்கத்தின் முயற்சிகள் மூலமாக, சோலார் பேனல்களை அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது. எனவே இந்த விலை வீழ்ச்சியால், சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு ஆகும் ஒட்டுமொத்த செலவு அதன் செயல்திறனுக்கு உகந்ததாகும்.
Return Of Investment: ஒரு வீட்டுக்கு சோலார் பேனல்கள் அமைப்பது தொடக்கத்தில் அதிக விலையாகத் தோன்றினாலும், நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்ததற்கு அதிகமாகவே நன்மைகளை நாம் பெற முடியும். சோலார் பேனல்களின் சராசரி ஆயுட்காலம் 25 முதல் 30 ஆண்டுகள் வரை இருக்கிறது என்பதால், ஒரு கட்டத்திற்கு மேல் வீட்டு உரிமையாளருக்கு மின் கட்டணங்கள் இல்லாத நிலை ஏற்படும். கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் உபரி ஆற்றலை விற்பனை செய்து கூடுதல் வருமானத்தையும் ஈட்டலாம்.
சுற்றுச்சூழல் நன்மைகள்: சூரிய சக்தி ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும். ஆற்றல் உருவாகும் செயல்முறையில் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் உமிழ்வு சுத்தமாக இருப்பதில்லை. சோலார் பேனல்களை பயன்படுத்துபவர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதன் மூலமாக மாசுபாடு குறைந்து காலநிலை மாற்றத்தையும் தணிக்க முடியும்.
அரசாங்க உதவி: இந்திய அரசாங்கம் சூரிய ஒளி மின்சக்தியை ஊக்குவிப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. சோலார் துறையின் வளர்ச்சியை விரிவுபடுத்த பல்வேறு கொள்கைகள் மற்றும் சலுகைகளை செயல்படுத்தியுள்ளனர். இதன் ஒரு அங்கமாகத்தான் 2024 ஆம் ஆண்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.