
பூமியில் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் எண்ணற்ற வினோதமான விஷயங்கள் உள்ளன. மனிதர்களை போல தோற்றம் கொண்ட உயிரினங்கள், தாவரங்களைப் போலவோ தோற்றமளிக்கும் பழங்கள், விரல் அளவில் உயிரினங்கள் என எண்ணற்ற விஷயங்கள் இந்த பூமியில் உள்ளன. இவற்றை பற்றி ஆராயவும், ரசிக்கவும் ஏராளமானவர்கள் உள்ளனர். அந்த வகையில் நீங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்க்காத பல வகையான சிறிய, பெரிய, வித்தியாசமான வடிவில் அரிய குரங்கு இனங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அவற்றின் தோற்றம் உங்களை பிரமிக்க வைக்கும். அப்படிப்பட்ட ஒரு குரங்கு இனம் தான் வழுக்கை உகாரி (Bald uakari). என்னங்க ஆர்வம் தாங்க முடியலையா.. வாங்க இப்போ இந்த குரங்கை பற்றி பார்க்கலாம்.
பெரு மற்றும் பிரேசில் நாடுகளில் உள்ள அமேசான் நதிப் படுகையில் வாழும் சிறிய குரங்கு இனம், வழுக்கை உகாரி (Bald uakari). வழுக்கை உகாரியின் அறிவியல் பெயர் ககாஜாவோ கால்வஸ் (Cacajao calvus).
இது மிகக் குறுகிய வால், கருஞ்சிவப்பு நிற முகம், வழுக்கைத் தலையுடன் காணப்படுகிறது. இதன் உடல் எடை 2.75 முதல் 3.45 கிலோகிராம் வரை இருக்கும். சராசரியாக ஆண் குரங்கு 45 செ.மீ. நீளமும், பெண் குரங்கு 44 செ.மீ. நீளமும் வளரும். வழுக்கை உகாரி அதன் நீண்ட கூந்தல், மற்றும் பிரகாசமான சிவப்பு நிறத்தில் இருக்கும் முடி இல்லாத தலை மற்றும் முகம் ஆகியவற்றால் உடனடியாக அடையாளம் காணப்படுகிறது. இதன் தனித்துவமான அம்சம் அதன் வழுக்கையான தலை மற்றும் பிரகாசமான சிவப்பு நிற முகம்.
மற்ற வகையான குரங்குகளைப் போலல்லாமல், வழுக்கை உகாரிகளுக்கு மிகக் குறுகிய வால்கள் இருக்கும். ஆனால் இவை மரங்களில் தங்கள் கைகள் மற்றும் கால்களைப் பயன்படுத்தி சுறுசுறுப்பாக ஏறும் தன்மை கொண்டவை.
இவை சமூக விலங்குகள், குழுக்களாக வாழ்கின்ற. இத்தகைய கூட்டங்களில் கிட்டத்தட்ட நூறு விலங்குகள் இருக்கலாம்.
விதைகள், பழங்கள், பூக்கள், மொட்டுகள், பூச்சிகள் ஆகியவை இவற்றின் விருப்பமான உணவு. வெள்ளப்பெருக்கு மற்றும் மழைக்காலங்களில் இந்தக் குரங்கு மரத்தின் உச்சியில் வாழ்கிறது. வறண்ட காலங்களில் விதைகள் மற்றும் பிற உணவுப் பொருட்களைத் தேடுவதற்காக மட்டுமே நிலத்துக்கு வரும்.
இதன் சக்திவாய்ந்த கீழ்தாடை காரணமாக விதைகளின் கடினமான மேற்பரப்புகளை எளிதாக உடைத்து சாப்பிட முடிகிறது. இதன் ஆயுட்காலம் 30 ஆண்டுகள் என்று சொல்லப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, புத்திசாலித்தனமான இந்த குரங்கு இனம் உணவுக்காக வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக கடந்த 30 ஆண்டுகளில் இந்த இனத்தின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 2008-ம் ஆண்டு முதல் சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் இது இடம்பெற்றுள்ளது.
இந்த குரங்குகள் அமேசான் நதிப் படுகையில் மட்டுமே வாழ்கின்றன. நிரந்தரமாகவோ அல்லது பருவகாலலங்களிலோ வெள்ளம் சூழ்ந்த மழைக்காடுகள் மற்றும் சிறிய ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்ற நீர் ஆதாரங்களுக்கு அருகிலுள்ள இடங்களை விரும்புகின்றன.