உலகின் மிகச்சிறிய குரங்கு இனம் எது தெரியுமா?

Pygmy marmosets
Pygmy marmosets

குரங்குகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவைதான். மரத்திற்கு மரம் தாவுவதிலிருந்து ஆரம்பமாகும் அதனுடைய சேட்டை முடிவே இல்லாமல் செல்லும். அதுவும் குட்டி குரங்குகள் என்றால் சொல்லவா வேண்டும். விரல் அளவும் உள்ளங்கை அளவும் உள்ள உலகின் மிகச்சிறிய குரங்கு இனம்தான் மிகவும் சுட்டியான குரங்கினமும் கூட. அந்தவகையில் இந்தக் குரங்குகள் பிரேசில், பெரு, கொலம்பியா மற்றும் ஈக்டவார் ஆகிய நாடுகள் அடங்கிய தென் அமெரிக்காவில்தான் அதிகம் காணப்படும்.

இந்த இன குரங்குகள் வெறும் 85 முதல் 140 கிராம் எடை அளவிற்குத்தான் இருக்கும். இது 12 முதல் 15 சென்டிமீட்டர்கள் அளவு வரை நீண்ட உடலைக் கொண்டிருக்கும். ஆனால் இதன் வால் பகுதி மட்டும் உடல் நீளத்தைவிடவும் அதிக நீளமாக இருக்கும். அதாவது 15 முதல் 20 சென்டிமீட்டர்கள் வரை நீண்டிருக்கும். இதன் குட்டியான உடம்பு, முகம் மற்றும் நீளமான வால் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும் க்யூட்டாகவும் இருக்கும். அமெசான் மலைக்காடுகளில் சுற்றித் திரியும் இந்த குரங்குகள் பழுப்பு மற்றும் சாம்பல் நிறங்களைக் கொண்டிருக்கும். முகம், காதுகள் மற்றும் தொண்டைப்பகுதியில் வெள்ளை நிற அடையாளங்களுடன் இருக்கும்.

Pygmy marmosets
Pygmy marmosets

இது சாறு, பசை நிரம்பிய மரங்களை மட்டுமே தனது இருப்பிடமாகக் கொண்டு, அந்த மரத்தில் துளையிட்டு வாழும் குணாதிசயத்தைக் கொண்டது. ஏனெனில் இந்தக் குரங்குகள் மரத்தின் பட்டைகளைக் கீறி, கசக்கி அதிலிருந்து வரும் சாறு, பிசின், பசை ஆகியவற்றைதான் உட்கொள்ளும். மேலும் இது பூச்சிகள், பழங்கள் மற்றும் தேன் ஆகியவற்றையும் உட்கொள்ளும்.

இப்படி நிறைய உணவுகளை எடுத்துக்கொண்டாலும் வெட்டுகிளியைவிட அளவில் சிறியதாக இருக்கும் இந்த குரங்கின் பெயர் Pygmy marmosets. ஆம்! Pygmy marmosets  என்ற குரங்கு இனம்தான் உலகிலேயே மிகச்சிறிய குரங்கு இனமாகும்.

விரல் அளவில் மட்டுமே இருக்கும் இந்த குரங்கிற்கு Finger monkeys என்ற பட்டப் பெயரும் உண்டு. குழுவாக வாழும் இந்த குரங்குகளில் சிறிய சிறிய குடும்பங்களும் வாழும். வருடத்திற்கு ஒருமுறை பெண் குரங்குகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பது இயற்கையின் வரப்பிரசாதமாகும். பிறந்த குழந்தை குரங்குகளை அப்பா மற்றும் உடன்பிறப்புகள்தான் வளர்க்கும்.

இதையும் படியுங்கள்:
தனிநபர் புரட்சியால் உருவான 1,360 ஏக்கர் வனச் சரணாலயம்!
Pygmy marmosets

Pygmy marmosets குரங்குகள் தங்களதுத் தனிப்பட்ட குரல்களில், அதாவது ட்ரில்ஸ், சிர்ப்ஸ் மற்றும் ஸ்க்விக்ஸ் போன்ற குரல்களைப் பயன்படுத்திதான் தொடர்பு கொள்கின்றன.

பகலில் துள்ளி விளையாடி மரத்திற்கு மரம் 3 மீட்டர் அளவில் குதிக்கும். அதேபோல் இரவில் அந்த மரத்தில் வாழும் அனைத்து குரங்குகளும் ஒன்றாகத்தான் தூங்கும். உருவத்தில் சிறியதாக இருக்கும் இந்தக் குரங்குகள் மனதளவிலும் சிறியதுதான். ஏனெனில் இவை சண்டையிடுவதை முற்றிலுமாகத் தவிர்த்து எதிரிகளின் கண்களில் படாமல் மறைந்தே இருக்குமாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com