நகரங்களையே அழிக்கக்கூடிய நெருப்பு மேகங்கள்... நம்பித்தான் ஆகணும்!

Jasper Fire Clouds
Jasper Fire Clouds
Published on

- கனடாவிலிருந்து ஸ்வர்ண ரம்யா

பொதுவாக ‘மேகம்’ என்றதும் நம் மனதில் தோன்றும் வர்ணனைகள்... வெள்ளை அழகு, பஞ்சு மெத்தை, மிருதுவான, வெள்ளை பஞ்சுமிட்டாய்... இவைதானே? மேகம் என்றாலே நீரித்துளிகளின் ஒரு தொகுப்பு. ஆனால் நெருப்பு மேகங்கள் எனப்படும் மேக வகைகளும் உள்ளன.

புயல் மற்றும் அதிக கனமழையால் ஏற்படும் அழிவுகள் நாம் அறிந்தவை. சில வருடங்களாக செயற்கையாக உருவாகும் நெருப்பு மேகங்களாலும் பேரழிவுகள் ஏற்பட்டு வருகின்றன.

மேகம் என்றால் என்ன? எப்படி உருவாகிறது?

சூரிய வெப்பத்தால் நிலப்பரப்பிற்கு சற்று மேலிருக்கும் காற்று சூடாகிறது. சூடான காற்று மேலெழும்பும். அப்போது அதன் வெப்பநிலை குறைந்து அது குளிர்வடையும். காற்றிலுள்ள நீராவி குளிர்ந்து லட்சக்கணக்கான நீர்த்துளிகளாக மாறும்போது ஒரு மேகம் உருவாகிறது. சுற்றியுள்ள காற்றைவிட அது எடை குறைவாக இருக்கும் வரையில் அது மிதக்கும். நீர்த்துளிகள் விரிவடைந்து மேகத்தின் கனம் அதிகரிக்கும்போது அது பூமியின் மீது மழையாக பெய்யும். சூடான காற்று மேலெழுந்து நீர்த்துளிகள் மிக அதிக உயரத்திற்கு எடுத்துச் செல்லப்படுகையில், அவை உறைந்து ஆலங்கட்டி மழையாக பெய்யும். பொதுவாக மேகங்கள் சிர்ரஸ், க்யுமுலஸ், ஸ்ட்ராட்டஸ் மற்றும் நிம்பஸ் என நான்கு வகைப்படும். இதில் பைரோக்யுமுலோநிம்பஸ் மேகங்கள்தான் நெருப்பு மேகங்கள்.

பைரோக்யுமுலோநிம்பஸ் ஏன் உருவாகிறது?

எரிமலைகள், காட்டுத்தீ போன்ற இயற்கை சீற்றங்களால் நிலப்பரப்பின் வெப்பநிலை அதிகமாகும். நெருப்பினால் உண்டாகும் மிகச்சூடான காற்று மேலெழும்பி, குளிர்ந்து, புகை, நீராவி, சாம்பல் கலந்த நெருப்பு மேகங்களாக உருவாகின்றன. இவை நிலத்தின் மீது முளைத்த இராட்சத காலிஃப்ளவர்கள் போல் காட்சியளிக்கின்றன. இந்த மேகங்கள் 50,000 அடி வரை மேலெழும்பும் தன்மை உடையவை. வானில் அமைதியாக இல்லாமல், கோபமாக முறைத்து சற்று தள்ளி வேறொரு இடத்தில் மின்னல் பார்வைகளை வீசுகின்றன. இந்த மின்னல்கள் புதிய காட்டுத்தீக்கள் பிறக்கும் மகப்பேறு மருத்துவமனைகளாகின்றன.

Jasper Fire Clouds
Jasper Fire Clouds

இப்படி சமீபத்தில் பிறந்த ஒரு புதிய அக்னி குழந்தையால் கனடாவிலுள்ள ஜேஸ்ப்பர் என்னும் பகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள காடுகள் அழிந்துவிட்டன. கடந்த நூறு ஆண்டுகளில் ஜேஸ்ப்பர் நகரம் கண்ட மிகப்பெரிய காட்டுத்தீ நிகழ்வு இதுவே.

இதையும் படியுங்கள்:
உலகில் இருக்கும் 4 வித்தியாசமான மலைகளைப் பற்றி பார்க்கலாம் வாங்க!
Jasper Fire Clouds

பெரும்பாதிப்புக்குள்ளான ஜேஸ்ப்பர் நகரம்

மேற்கு கனடாவில் அசர வைக்கும் பனி மலைகளும், அடர்ந்த காடுகளும், ‘அட’ என வியக்க வைக்கும் அருவிகளும், அமைதியான ஏரிகளும் நிறைந்த எழில்மிகு நகரம் ஜேஸ்ப்பர். இங்கு பொதுவாக ஜுலை முதல் செப்டம்பர் மாதங்கள் கோடைகாலம். கோடையில் வரண்டு காணப்படும் ஜேஸ்ப்பர் காடுகளில் தீ பரவுவது வழக்கமான இயற்கை நிகழ்வு. ஆனால் இந்த ஆண்டு உலகம் முழுவதும் நிலவிவந்த அதிக வெப்ப அலையால், கனடா போன்ற குளிர்வான இடங்களிலும் வெப்பநிலை வழக்கமான அளவைவிட அதிகமாகவே இருந்தது. மின்விசிறிகளைக்கூட அதிகம் பயன்படுத்தாத கனடா மக்கள் இந்த கோடையில் குளிர்சாதனப் பெட்டிகளை வாங்கும் நிலை உருவானது. அதிக வெப்பத்தால் காட்டுத்தீ பரவி, நெருப்பு மேகங்கள் செயற்கையாக உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. பொதுவாக காடுகளை மட்டும் தாக்கும் தீ, இம்முறை ஜேஸ்ப்பர் நகரையும் பதம் பார்த்துவிட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரிலுள்ள 25,000 மக்களும் வெளியேற்றம் செய்யப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இதையும் படியுங்கள்:
போலந்து பயணம் 3 - தானாக எரியும் வார்சா விளக்குகள்!
Jasper Fire Clouds

இது போன்ற நெருப்பு மேகங்கள் உருவாக்கத்திற்கு பூமி வெப்பமயமாதலே காரணம் என்கின்றனர் மேக ஆய்வாளர்கள். வடஅமெரிக்க நாடுகளில் குளிர்காலத்தை சமாளிக்க வீடுகள் மரப்பலகைகளால் கட்டப்படுகின்றன. இதுவும் தீ விரைவாக பரவி ஜேஸ்ப்பர் நகரிலுள்ள கட்டிடங்களை அழித்ததற்கான காரணங்களில் ஒன்று. நவீன கட்டுமானப் பொருட்களில் உபயோகப்படுத்தப்படும் லேமினேட், ப்ளைவுட் கோந்துகளில் பெட்ரோலிய பொருட்களின் கலவை இருப்பதும் ஒரு காரணம்.

‘ஸ்மார்ட் செக்யூரிட்டி சிஸ்டம்’ உடைய ‘ஸ்மார்ட்’ வீடுகள் இனி ‘ஃபையர் ஸ்மார்ட்’டாகவும் இருப்பது அவசியம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com