இயற்கை என்பது எப்போதும் அதன் வசிகருக்கும் உயிரினங்களால் நம்மை ஆச்சரியப்படுத்தத் தவறுவதில்லை. இதில் Cape Rain தவளைகள் ஒன்றும் விதிவிலக்கல்ல. தென்னாப்பிரிக்காவின் மேற்கு கேப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட இந்த தவளைகள், பல புதுமையான நடத்தைகளைக் கொண்ட மாறுபட்ட இனமாகும். இந்தப் பதிவில் இந்த தவளை இனத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
கேப் ரெயின் தவளைகள் அதன் குண்டான மற்றும் வட்டமான உடல் வடிவத்தால் அறியப்பட்ட ஓர் இனமாகும். பெரிய அளவிலான தவளை சுமார் 4 - 5 சென்டிமீட்டர் நீளத்தைக் கொண்டிருக்கும். பெண் தவளைகளே ஆண் தவளைகளை விட பெரிதாக இருக்கும். அவற்றின் தோல் பழுப்பு, சாம்பல் மற்றும் ஆலிவ் நிறத்தில் இருப்பதால், சுற்றுப்புறத்துடன் எளிதில் கலக்க உதவுகிறது.
கேப் ரெயின் தவளையின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று அதன் வெளியே நீண்டிருக்கும் கண்களாகும். இது ஒரு பரவலான பார்வையை அவற்றிற்கு வழங்குகிறது. இதன் மூலமாக குறைந்த வெளிச்சத்தில் கூட அவற்றின் இரை மற்றும் வேட்டையாடி விலங்குகளை இவற்றால் கண்டறிய முடியும். குறுகிய கால்களைப் பயன்படுத்தி மண்ணில் துளையிட்டு வாழ்நாளில் பெரும் பகுதியை பூமிக்கு அடியிலேயே செலவிடுகின்றன.
வாழ்விடம்: கேப் ரெயின் தவளைகள் தென்னாபிரிக்காவின் தென்மேற்கு கடலோரப் பகுதிகளில், குறிப்பாக மேற்கு கேப் மாகாணத்தில் மட்டுமே காணப்படுகின்றன. இந்த இனம் எப்போதும் மறைந்தே வாழும் தனித்துவமான வாழ்விடத்தையே விரும்புகிறது. இவற்றிற்கு பாதகம் விளைவிக்காத தாவரங்கள், பூச்சிகள் மற்றும் பிற சிறிய விலங்குகளுடன் இணைந்தே இவை வாழ்கின்றன.
நடத்தை மற்றும் வாழ்கைமுறை: கேப் ரெயின் தவளைகள் இரவு நேரத்திலேயே பூமியிலிருந்து வெளியே வருகின்றன. இவை ஈரமான மண்ணில் துளைகளை உருவாக்க அவற்றின் பலம் வாய்ந்த பின்னங்கால்களைப் பயன்படுத்துகின்றன. இந்த பதுங்கு குழிகள் பாம்புகள் மற்றும் பறவைகள் போன்ற வேட்டையாடும் விலங்குகளிலிருந்து பாதுகாப்பையும், தீவிர வெப்பநிலையில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் தங்குமிடத்தையும் வழங்குகின்றன.
பொதுவாக குளிர்காலம் என்பது இவற்றின் இனப்பெருக்க காலமாகும். ஆண் தவளைகள் வித்தியாசமான ஒலியை எழுப்பி பெண் தவளைகளை கவர முற்படும். இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண் தவளை நீர் நிரம்பி இருக்கும் பகுதிகளில் சிறிய முட்டைகளை இடுகிறது. அங்கு அவை நன்கு வளர்ந்து, சிறிய தவளைகள் வெளி வருகின்றன.
இந்தத் தவளைகள் சுற்றுச்சூழல் அமைப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்துகின்றன. எறும்புகள், வண்டுகள் மற்றும் சிலந்திகள் உள்ளிட்ட பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இவை பூமியில் துளையிட்டு வாழ்வதால், தாவரங்களுக்கு காற்றோட்டம் மற்றும் ஊட்டச்சத்து சுழற்சிக்கு பெரிதளவில் உதவியாக உள்ளது. இதனால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கும் இவை பெரும் பங்காற்றுகின்றன.
இப்படி பார்ப்பதற்கே முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் இந்த தவளை இனத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.