Costa Rica பகுதியில் உள்ள பசுமையான மழைக்காட்டினுள் மர்மமான இடம் ஒன்று உள்ளது. அதுதான் The Cave of Death எனப்படும் மரண குகை. இயற்கைக்கு முற்றிலும் புறம்பாக இங்கு நடக்கும் அதிசயத்தால், புவியியல் ஆர்வலர்களை இந்த இடத்திற்கு வரச் செய்கிறது.
கோஸ்ட ரிக்காவில் போவாஸ் எரிமலையின் ஓரத்தில் அமைந்துள்ள மரண குகை, அதன் பெயரைப் படிக்கும் போதே உங்களுக்கு ஒரு ஆபத்து உணர்வை ஏற்படுத்தலாம். ஆனால் நீங்கள் நினைக்கும்படி அந்த அளவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் குகை அல்ல. இதற்கு மாறாக இயற்கைக்கு புறம்பான சூழ்நிலை இங்கு அமைகிறது. அதாவது, இந்த குகைக்கு அருகே சென்றால் உங்களுக்கு எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. இது வெறும் 10 அடி நீளம் மட்டுமே இருக்கும் குகை தான் என்றாலும், இங்கிருந்து 100% தூய்மையான கார்பன் டை ஆக்சைடு வெளியேறுகிறது. இதை ஒருவர் சுவாசிக்க நேர்ந்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இருப்பினும் இந்த இடம் ஒரு சுற்றுலா தளமாக இருக்கிறது.
ஏனெனில் கார்பன் டையாக்சைடு வெளிப்புற காற்றை விட கனமானதாக இருப்பதால், அது பெரும்பாலும் தரையை ஒட்டியே இருக்கும். மேலும் அந்தக் குகைக்கு வெளிப்புறத்திலும் தரையை நோக்கி கார்பன் டை ஆக்சைடு வழியும். இதை சில இயற்கை ஆர்வலர்கள் புகையை தரையை ஒட்டியபடி செலுத்தி கார்பன் டை ஆக்சைடு பயணிப்பதை கண்டுபிடித்தனர்.
இங்குள்ள கார்பன் டையாக்சைடின் ஆற்றலை தெரியப்படுத்தும் விதமாக யூடியூபில் ஒரு காணொளி உள்ளது. அந்த காணொளியில் தீப்பந்தத்தை கையில் பிடித்திருக்கும் நபர், தரைக்கு மேலே அதை பிடிக்கும் போது நன்றாக கொழுந்து விட்டு எரிகிறது. இதுவே தரைக்கு கொஞ்சம் நெருக்கமாக கொண்டு சென்றால், உடனடியாக தீ அணைந்து விடுவதை நாம் பார்க்க முடிகிறது.
பெரும்பாலும் மனிதர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும், தெரியாமல் இந்த குகைக்குள் செல்லும் ஊர்வன விலங்குகள் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் அங்கேயே மடிந்து விடுகின்றன. உலகிலேயே தூய்மையான கார்பன் டை ஆக்சைட்டை வெளியேறும் குகை இதுதான்.