

சென்னையின் புறநகர் பகுதியான ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏரி, பல ஆண்டுகளாகப் பிளாஸ்டிக் கழிவுகளால் மூச்சுத் திணறிக்கொண்டிருந்தது. ஆனால், அங்கேயே இயற்கையிலேயே உருவான ஒரு சிறிய நுண்பாசி, இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் மேம்பாட்டு ஆய்வு மைய (CAS in Botany) Centre for Advanced Studies in Botany.) ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டறிந்துள்ளனர்.
பிளாஸ்டிக் கழிவுகள் மட்குவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்பது நாம் அறிந்தது. ஆனால், பிளாஸ்டிக் குப்பைகள் அதிகம் உள்ள நீர்நிலைகளில், அந்தச் சூழலுக்கு ஏற்ப சில நுண்ணுயிரிகள் தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன.
சென்னைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார ஏரிகளில் இருந்து 222 வகையான பாசி மாதிரிகளைச் சேகரித்தனர்.
அதில் ராஜகீழ்ப்பாக்கம் ஏரியில் கண்டறியப்பட்ட 'யுரோனிமா ட்ரென்டோனென்ஸ்' (Uronema trentonense) என்ற பாசிதான் பிளாஸ்டிக்கைச் சிதைப்பதில் முதலிடம் பிடித்தது.
இந்த நுண்பாசியின் சிறப்பு என்ன?
இது மிக வேகமாக வளரக்கூடிய ஒரு நுண்பாசி.
பொதுவாகப் பிளாஸ்டிக் பாலிமர்களை (Polymers) உடைப்பது கடினம். ஆனால், இந்தப் பாசி "லைபேஸ் (Lipase)" போன்ற நொதிகளை (Enzymes) சுரந்து, பிளாஸ்டிக்கின் கடினமான வேதிப் பிணைப்புகளைத் தளர்த்துகிறது
வெறும் 12 வாரங்களில் (சுமார் 100 நாட்கள்), இது கடினமான HDPE பிளாஸ்டிக்கை 27%வரையிலும், மெல்லிய LDPE பிளாஸ்டிக்கை 21% வரையிலும் சிதைக்கிறது.
இந்த நுண்பாசி பிளாஸ்டிக்கை எப்படிச் சாப்பிடுகிறது? (The Process)
1. ஒட்டுதல் (Adhesion):பாசிகள் பிளாஸ்டிக் துகள்களின் மேல் ஒரு மெல்லிய படலமாக (Biofilm) படர்கின்றன.
2. பிணைப்பை உடைத்தல்: பிளாஸ்டிக் என்பது நீளமான வேதிச்சங்கிலிகளால் ஆனது. பாசி சுரக்கும் நொதிகள் இந்தச் சங்கிலிகளைச் சிறு சிறு துண்டுகளாக உடைக்கின்றன.
3. உணவாக உட்கொள்ளுதல்: உடைக்கப்பட்ட அந்தச் சிறு துகள்களைப் பாசி தனது வளர்ச்சிக்கு ஆற்றலாகப் (Energy) பயன்படுத்திக் கொள்கிறது. இதுதான் பிளாஸ்டிக்கை 'சாப்பிடுதல்' என்று அழைக்கப்படுகிறது.
4.சுற்றுச் சூழலுக்கு இது ஏன் முக்கியம்? வேதிப்பொருட்கள் தேவையில்லை: பிளாஸ்டிக்கை எரிக்கத் தேவையில்லை, அதன் மூலம் நச்சுப் புகை வராது.
5.குறைந்த செலவு: இது இயற்கையான முறை என்பதால், பெரிய இயந்திரங்களோ அல்லது கோடிக்கணக்கான ரூபாய் நிதியோ தேவையில்லை.
மற்றொரு பயன்: இந்தப் பாசிகள் வளரும்போது வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சிக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகின்றன. இது புவி வெப்பமடைவதையும் குறைக்கிறது.
சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்களுக்கு உண்மையில் நாம் பாராட்டைத் தெரிவிப்போம்.