
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா பாகிஸ்தானுக்கு பெரிய அடியை கொடுத்தது. அதற்குக் கதறாத பாகிஸ்தான், சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்ததும் தினமும் கதறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவை பழிவாங்க சீனா மூலம் பிரம்மபுத்திரா நதியை தடுக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்தது. சீனாவும், ‘பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டி தடுப்போம்’ என்று கொக்கரித்தது. அதற்கு இந்தியா, ‘பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்தால் சந்தோஷம்தான். இதனால் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் தேவையற்ற வெள்ளச்சேதம் ஏற்படுவது குறையும்’ என்று பதில் சொல்லி வந்தது.
இந்தியாவிற்கு எதிராக பிரம்மபுத்திரா நதியை ஆயுதமாக்க சீனா முயற்சி செய்கிறது. இதற்குப் பின்புலமாக பாகிஸ்தான் இருக்கிறது. சிந்து நதியால் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தையும், இழப்பையும் ஈடு செய்ய இந்தியாவை சிக்கலில் தள்ள பாடுபட்டு வருகிறது. பிரம்மபுத்திரா நதியை சீனா கட்டுப்படுத்தி விடலாம் என்று திட்டம் போடுகிறது. ஆனால், பிரம்மபுத்திரா நதியின் மூலம் இந்தியாவின் எல்லைக்கு அருகில் உருவாகும் கிளை நதிகளால்தான் மிகப் பிரம்மாண்டமான நதிகள் உருவெடுக்கின்றன.
இந்தியா செய்ததைப் போல சீனாவும் பிரம்மபுத்திரா நதியைத் தடுத்தால், அது இந்தியாவிற்கு மோசமாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்கள் போதிய நீரை துணை நதிகள் மூலமே பெற்று விடும். மேலும், பிரம்மபுத்திரா நதி அடிக்கடி ஏற்படுத்தும் பெரு வெள்ளத்தினால் பல இடங்கள் மூழ்கும் துயரங்களில் இருந்து இந்தியா காப்பாற்றப்படலாம். ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய அளவில் விவசாயத்தை பாதிக்கும் வெள்ளத்தில் இருந்து நிவாரணம் அடையலாம்.
ஆனால், சீனா ஒரு மோசமான திட்டத்தை வைத்திருப்பதாக இந்தியா சந்தேகப்படுகிறது. மெடோக்கில் சீனா கட்ட திட்டமிட்டுள்ள பெரிய அணை மூலம் சித்து விளையாட்டுக்களை அது செய்ய இருக்கிறது. பிரம்மபுத்திரா நதியை தேக்கி இந்தியாவிற்கு வரும் தண்ணீரை தடுப்பது சீனாவின் முதல் நோக்கமாக இருந்தாலும், பெருமழைக் காலங்கள் மற்றும் அறுவடை நேரங்களில் அணைகளில் தண்ணீரை திறந்து விட்டு இந்தியப் பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தி உயிர் பலிகளையும் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்த தீர்மானித்துள்ளது. இது பொருளாதார ரீதியாக இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளை பாதிக்கும் திட்டமாக உள்ளது.
சீனா அணை கட்டும் பகுதிகள் அனைத்தும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் தட்டுக்களின் மேல் அமைகிறது. இது அணையின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்குகிறது. ஒருவேளை இந்த அணை உடைந்தால் அதன் வெள்ளப் பாதிப்பும் இந்தியாவிற்கு அதிகமாக இருக்கும். சீனாவை பொறுத்தவரை அதற்கு ஒரு பண விரயம் என்பதைத் தவிர, வேறு நஷ்டம் இருக்காது. இந்தியாவை பொறுத்தவரை இது போன்ற செய்திகள் பாகிஸ்தானின் கற்பனையில் இருந்து உருவாகி வலைத்தளங்களில் பயமுறுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சீனாவில் உருவாகும் பிரம்மபுத்திரா நதி 15 சதவிகிதம்தான் இந்தியாவில் நுழைகிறது. மீதமுள்ள 85 சதவிகித நீர் பூட்டான் மற்றும் இந்தியப் பகுதிகளில் உருவாகி வருபவை. சீனாவின் திடீர் வெள்ளத் திட்டங்கள் இந்தியாவையும் தாண்டி வங்கதேசத்தை மூழ்கடிக்க்க் கூடியவை. வடகிழக்கு இந்தியா பெரும்பாலும் மலைப் பிரதேசம். நிச்சயமாக ஒருசில பாதிப்புகள் இருக்கும் என்றாலும் இங்கு வெள்ளம் இயற்கையாக வடிகாலை நோக்கிச் செல்லும். அந்த வடிகால் பகுதிகள் முழுவதும் வங்கதேசத்தில் உள்ளன. சமதளமான வங்கதேசத்தில் வெள்ளம் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும். அங்கு வெள்ளம் வடிய வாரக்கணக்கில் ஆகலாம்.
இந்தியா சிந்து நதியில் பாகிஸ்தானை மடக்கியது போல, சீனாவில் பிரம்மபுத்திரா விவகாரத்தில் செயல்பட முடியாது. இந்திய எல்லையோரங்களில் சில அணைகளை கட்டுவதன் மூலமும், வடிகால் வசதியை அதிகப்படுத்துவதன் மூலம் இந்த அபாயங்களில் இருந்து தப்பிக்க முடியும்.