
பொதுவாக, நம்முடைய வீடுகளில் எதிர்மறை எண்ணங்களை அழித்து, நன்மைகள் பெறுவதற்காக வாஸ்து சாஸ்திரம் உள்ளிட்ட பலவிதமான பாரம்பரிய முறைகளை பின்பற்றி வருகிறோம். இதில் சமையலறையில் வளர்க்கப்படும், ‘மாமியார் நாக்கு’ எனப்படும் பாம்பு செடி, வாஸ்து குறிப்பிடும் செடிகளில் ஒன்றாக உள்ளது. இதைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி நல்ல அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் தரும் நம்பகமான ஒரு பிரபலமான உட்புற தாவரமாக உள்ள பாம்பு செடிகள்(Snake plant, Sansevieria) ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்தை பூர்வீகமாகக் கொண்டவை.
செயற்கை இலைகள் போன்ற தோற்றத்தையும் நிமிர்ந்து பசுமையான அழகிய வாள் வடிவம் போன்ற இலைகள் கொண்ட பாம்பு செடிகள் பராமரிக்க எளிதானவையாகவும், கண்ணுக்கு இன்பம் தருவதாகவும் இருப்பதால் வீட்டு அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.
சமையலறையில் பாம்பு செடிகள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்: பாம்பு செடிகள் காற்றில் உள்ள நச்சுப் பொருட்களான ஃபார்மால்டிஹைட், பென்சீன், சைலின் ஆகியவற்றை நீக்குவதோடு. காற்றில் உள்ள மாசுபாடுகளை அகற்றி சுத்தம் செய்யும் கிருமி நாசினியாக இருப்பதால் சமையலறைக்கு ஏற்ற செடியாக இது உள்ளது.
சமையலறை என்பது வீட்டின் உயிர்நாடியாகவும், நேர்மறை உணர்வுடன் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியம் தரும் என்பது நம்பிக்கையாகவும் இருப்பதால் வாஸ்து சாஸ்திரத்தின்படி பாம்பு செடிகள் சமையலறைக்கு நல்ல அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரும் என நம்பப்படுகிறது. அதிக கவனிப்பு தேவைப்படாத குறைந்த வெளிச்சம் மட்டும் இருந்தால் நன்கு வளரக்கூடிய பாம்பு செடிகள் சமையலறைக்கு ஏற்றதாக இருக்கின்றன.
சமையலறையில் பாம்பு செடிக்கான வாஸ்து குறிப்புகள்: பாம்பு செடியை சமையல் செய்யும் பகுதிக்கு அருகில் வைப்பதைத் தவிர்த்து சமையல் அறையில் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் சுத்தமாகவும் தூசி இல்லாமலும் வைத்து வளர்ப்பதால் அதிக நன்மைகளைப் பெறலாம் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
பாம்பு செடிகள் வீட்டின் உட்புறத்தில் இருக்கும் காற்றை சுத்திகரித்து மன அழுத்தத்தைக் குறைத்து இரவில் ஆக்சிஜனை வெளியிடுவதன் மூலம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுவதாக நம்பப்படுகிறது. மேலும், காற்றில் உள்ள தூசி மற்றும் பொடுகு போன்ற ஒவ்வாமைகளின் தாக்கத்தையும் குறைக்கிறது.
இத்தகைய நன்மைகளைக் கொண்டிருப்பதால் பாம்பு செடிகளை மற்ற செடிகளுடன் ஒப்பிடும்போது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால், பாம்பு செடிகளின் இலைகளில் மிதமான விஷத்தன்மை இருப்பதால் இதை சாப்பிட்டால் நாக்கில் வீக்கம் மற்றும் உணர்வின்மையை ஏற்படுத்தும் என்பதால் குழந்தைகள் மற்றும் விலங்குகளிடம் இருந்து இதை விலகி வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
பாம்பு செடிகளை மேற்கூறிய முறைகளில் திறம்பட வீட்டில் முறையாக வைத்து பராமரிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.