மண்ணுக்குள் புதையும் சீன நகரங்கள்… ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் காரணங்கள்!

China
China

சீனாவின் பெரிய முக்கிய நகரங்கள் வேகமாக பூமிக்குள் புதைந்து வருகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர். இதற்கான காரணங்களையும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

காலம் காலமாகவே சீனா இந்த நிலப்புதைவை சந்தித்து வருகிறது. கடந்த 1920ம் ஆண்டு சீனாவின் ஷாங்காய் மற்றும் டியான்ஜின் ஆகிய இரண்டு நகரங்களும் பூமிக்குள் தாழ்ந்து போனதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த நூற்றாண்டில் 3 மீட்டர் அளவுக்கும் அதிகமாக அந்த நகரங்கள் பூமிக்குள் புதைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் தற்போது, சீனாவின் பல்வேறு நகரங்கள் பூமிக்குள் வேகமாக புதைந்து வருகின்றன என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஆறு நகரங்களில் ஒரு நகரம் ஆண்டுக்கு 10 மிமீ அளவு பூமிக்குள் புதைந்து வருவதாக ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலப்புதைவு கடலோரப் பகுதிகளில் ஏற்பட்டால், கடல் மட்டம் உயர்ந்து அந்தப் பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் அபாய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெரிந்துக்கொள்ளப் பல சீன பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் 82 நகரங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆராய்ச்சியின் மூலம், 45% நகர்ப்புறங்களில் ஆண்டுக்கு 3 மிமீ அளவுக்கு மேல் நிலப்புதைவு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.

அதேபோல் சுமார் 16% நகர்ப்புற நிலங்கள், ஆண்டுக்கு 10 மிமீ அளவைவிட அதிகமாக பூமிக்குள் புதைந்து வருவதை கண்டறிந்துள்ளனர். இதனை விஞ்ஞானிகள், ‘விரைவாக புதைந்து வரும் நகரங்கள்’ என்று விவரிக்கின்றனர். கிட்டத்தட்ட 6.7 கோடி மக்கள் வேகமாக புதைந்து வரும் நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

சீனாவின் குன்மிங், நன்னிங், பெய்ஜிங், தியான்ஜிங், ஹார்பின், சாங்சின், வென்ஜோவ், பிங்டிங்ஷன் போன்ற நகரங்கள் நிலப்புதைவால், மிகவும் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம் என்றும் கூறுகின்றனர்.

இந்த நிலப்புதைவின் காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். சீனா மிக வேகமாக நகரமயமாக்குதலில் ஈடுபடுகிறது. அதேபோல், மக்களின் தேவைக்காக நிலத்தடி நீர் அதிக அளவு சுரண்டப்படுகிறது. நிலப்புதைவிற்கு நகரமயமாக்குதல் ஒரு மிகப்பெரிய காரணமாகும். ஆனால், அதைவிட மிகவும் முக்கியமான காரணம், நிலத்தடி நீரை உறிஞ்சுவதுதான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சீனா தனது அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட நிலத்தடி நீரையே அதிகம் சார்ந்து இருக்கிறது. இதனால்தான், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து நிலம் பூமிக்குள் புதைகிறது.

இதையும் படியுங்கள்:
உலக புவி தினம்!
China

இதுகுறித்து கிழக்கு ஆங்கில பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் நிக்கோலஸ், “சீனாவில் வண்டல் படிந்து வரும் பகுதிகளிலேயே மக்கள் அதிகம் வாழ்கின்றனர். எனவே, அங்கு நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்போது மணல் படலம் அழிக்கப்பட்டு, நிலத்தின் நிலைத்தன்மை பாதிக்கப்படுகிறது. இதுதான், நிலப்புதைவு ஏற்படக் காரணமாகிறது.” என்றார்.

அதேபோல் நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகள், கனிமங்கள் மற்றும் நிலக்கரி சுரங்கம் ஆகியவையும் நிலப்புதைவின் பிற காரணங்களாகும்.

மேலும், நீர் உறிஞ்சப்படுவதைத் தடுத்தால், நிலப்புதைவைத் தடுக்கலாம் என்றும், இதுபோன்ற நிலப்புதைவைத் தடுக்க பிற வழிகள் உள்ளன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com