world earth day
world earth day

புவி தினம் ஆரம்பிப்பதற்கான அவசியம் ஏன், எப்படி வந்தது?

ப்ரல் 22, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக உலகெங்கும் புவி தினமாகக் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் 1970 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு 193 நாடுகளில், சுற்றுச்சூழலை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகளை நடத்தி, நாம் வசிக்கும் பூமியைப் பேணி பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறது. 2024ஆம் ஆண்டிற்கான புவி தினத்தின் முக்கிய குறிக்கோள் “புவிக்கோளின் எதிரி ப்ளாஸ்டிக்”

1969ஆம் வருடம் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த யுனெஸ்கோ கருத்தரங்கில், உலக அமைதிக்காகப் பாடுபட்ட ஜான் மெக்கன்னல், வருடத்தில் ஒரு நாளை பூமியை கௌரவிக்கவும், அமைதிக்கான நாளாகவும் அனுசரிக்க வேண்டும் என்றும், அதை மார்ச் 21, 1970, வசந்த கால முதல் நாளன்று அனுசரிக்கலாம் என்றும் பரிந்துரைத்தார். அதற்கு சம்மதம் தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் ஜெனரல் யு தாண்ட் அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார். இது நடந்த ஒரு மாதத்திற்குள் அமெரிக்கன் செனட்டர் கேலார்ட் நெல்சன், அமெரிக்கா முழுவதும் சுற்றுச்சூழல் பற்றிய விவரங்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி, அதற்கான நாளாக ஏப்ரல் 22, 1970 தேர்ந்தெடுத்தார். இதற்காக அவர் டேனிஸ் ஹேய்ஸ் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலரை நியமித்தார். இவர்கள் இருவரும் இந்த நாளிற்கு சூட்டிய பெயர் “புவி தினம்”.

சுற்றுச்சூழல் அவசியத்தை விளக்கி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பித்த முதல் புவி தினம் அமெரிக்கா முழுவதும் பரவி மக்கள் பங்கேற்ற நிகழ்வாக மாறியது. முதல் புவி தினத்தில் இரண்டு கோடி மக்கள் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு, கட்சி சார்பற்ற, அரசியல் மற்றும் மதம் சார்பற்ற பேரணியாக மாறியது. இந்த முதல் பேரணிக்கு அமெரிக்காவின் “ஓருங்கிணைந்த ஆட்டோ தொழிலாளர்கள்” பெருமளவில் நிதி உதவி தந்து பங்கேற்று மக்கள் இயக்கமாக மாற்றினார்கள். மக்கள் இயக்கமான புவி தினத்திற்கு ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம் 20000 அமெரிக்கன் டாலர் (தற்போதைய மதிப்பில் 1,60000 டாலர்கள்) நன்கொடை அளித்தது. சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு ஆயில் ஒரு முக்கிய காரணி என்பதால் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.

world earth day
world earth day Image credit - pixabay.com

புவி தினம் ஆரம்பிப்பதற்கான அவசியம் ஏன், எப்படி வந்தது?

அறுபதில், வல்லரசாகவும், தொழில் துறையில் வளர்ந்த நாடாகவும் உருவாகி வந்த அமெரிக்காவில், காற்றில் கலந்த மாசுகள் செல்வச் செழிப்பின் ஒரு அம்சமாகப் பார்க்கப்பட்டது. பல்லாயிரக் கணக்கான வாகனங்கள், அவைகள் வெளியேற்றும் கரியமில வாயு காற்றில் கலப்பதைப் பற்றிய கவலையோ, அதைத் தடுக்கும் சட்டங்களோ இல்லை. பத்திரிகைகளும் அதை சுகாதார கேடாகக் கருதவில்லை. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது, மனித ஆரோக்கியத்தை அச்சுறுத்துகிறது என்பதைப் பற்றிய சிந்தனை இருக்கவில்லை.

1962ஆம் ஆண்டு ரேச்சல் கார்சன், “சைலண்ட் ஸ்பிரிங்” என்ற நூலை வெளியிட்டார். இந்த புத்தகம் நியூயார்க் டைம்ஸின் பெஸ்ட் செல்லர் ஆக மாறியது. 24 நாடுகளில் ஐந்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கப்பட்ட இந்த புத்தகம் சுற்றுச்சூழலில் மாசு கலப்பதற்கும், பொது சுகாதாரத்திற்கு விளையும் கேடுகளைப் பற்றிய தொடர்பை வலியுறுத்தியது.

ஜனவரி 28, 1969ஆம் வருடம் கலிபோர்னியா சான்டா பார்பராவில் ஏற்பட்ட எண்ணைய் கசிவில், பத்து கிலோமீட்டர் பரப்பளவில், 1.1 கோடி லிட்டர் எண்ணெய் கசிந்தது. இதனால் பத்தாயிரத்திற்கும் அதிகமான கடல் பறவைகள், டால்பின்ஸ், நீர் வாழ் உயிரினங்கள், அழிந்து போயின. 2100 கிலோமீட்டர் பரப்பளவிற்கு இந்த எண்ணெய் கசிவு பரவியது. இதனை பார்வையுற்ற செனட்டர் கேலார்ட் நெல்சன், மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம், அதற்கான சட்டதிட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டியதின் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி விளக்க வேண்டியது மிகவும் முக்கியம் என்று கருதி “புவி தினம்” தொடங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

முதலில், அமெரிக்காவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தேவை என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த புவி தினம் 1990 ஆம் ஆண்டு உலகளாவிய இயக்கமாக மாறி 141 நாடுகளில், இதற்கான கருத்தரங்கங்களும், கூட்டங்களும் நடந்தன. இதற்கு வழி வகுத்தவர் டேனிஸ் ஹேய்ஸ். இந்த கூட்டங்களில் இருபது கோடி மக்களுக்கு மேல் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து 1992இல், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் பற்றிய உச்சி மாநாடு ரியோ டி ஜெனிரோவில் நடந்தது. இந்த வருடம் அப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் பில் க்ளிண்டன், செனட்டர் நெல்சனுக்கு அமெரிக்காவின் உயரிய விருதான ஜனாதிபதி பதக்கத்தை வழங்கினார்.

இதையும் படியுங்கள்:
ஆழ்ந்த உறக்கத்தின்போது நம் உடலில் நடப்பது என்ன?
world earth day

புவி நாள் 2000ஆம் ஆண்டு, பூமி வெப்பமடையதலை முக்கிய பிரச்சாரமாக ஹேய்ஸ் எடுத்துக் கொண்டார். இது 184 நாடுகளில் பல்லாயிரம் கோடி மக்களைச் சென்றடைந்தது. 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை, பாரிஸ் நகரில், பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கை நடத்தியது. இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பருவநிலை சம்பந்தமான ஒப்பந்தங்களை அங்கீகரித்து, 2016ஆம் வருடம் புவி தினம் அன்று 120 நாடுகள் கையெழுத்திட்டன.

பருவநிலை  மாற்றத்தால், பூமியின் வெப்ப நிலை அதிகரித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. தற்போது துபாயில் ஏற்பட்ட அளவுக்கதிகமான மழைக்கும், அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்கும் பருவநிலை மாற்றம் முக்கிய காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் வல்லுநர்கள். இவற்றைப் பற்றி பலரும் உணர “உலக புவி தினம்” வகை செய்கிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com