இயற்கையாக கிடைக்கும் சில பொருள்களை விவசாயிகள் உரமாகப் பயன்படுத்துவார்கள். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று தான் பசுமாட்டின் கோமியம். இது பயிர் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது மற்றும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை விவரிக்கிறது இந்தப் பதிவு.
பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், மகசூலை அதிகரிக்கவும் விவசாயத்தில் உரங்கள் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளன. இவ்வரிசையில் பசுவின் கோமியத்தை உரமாக உபயோகிக்கும் நடைமுறை காலந்தொட்டே இருந்து வருகிறது. பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தவும் கோமியம் உதவுகிறது. பஞ்சகவ்யம் தயாரிப்பில் கூட கோமியம் முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது. இருப்பினும் இதில் சில விஷயங்களை விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
கோமியத்தை சேகரித்தல்:
முதலில் ஆரோக்கியமாக இருக்கும் பசுக்களிடம் இருந்து கோமியத்தை ஒரு கலனில் சேகரித்துக் கொள்ள வேண்டும். கோமியத்தின் அதிக செறிவு பயிர்களின் மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆகையால் பசுவின் கோமியத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, அதனை நீர்த்துப் போகச் செய்ய வேண்டியது அவசியம். அதாவது 1 பங்கு கோமியத்துடன் 10 பங்கு தண்ணீரை கலந்து விட்டால், இதன் செறிவுத் தன்மை குறைந்து விடும்.
பயன்படுத்தும் வழிமுறை:
நீர்த்துப் போன கோமியத்தை தாவரத்தின் இலைகள், கிளைகள் மற்றும் தண்டுகளின் மீது தெளிக்கலாம். இப்படித் தெளிப்பதன் மூலம் தாவரங்கள், இலை வழியாக ஊட்டச்சத்துகளை உறிஞ்சும். இதுதவிர்த்து கோயமியத்தை தாவரத்தின் வேர்ப் பகுதிக்கு அருகில் மண்ணிலும் தெளிக்கலாம். மழை பெய்யும் போது மற்றும் நீர்ப்பாசனம் செய்யும் போது கோமியத்தின் ஊட்டச்சத்துகளை வேர்கள் உறிஞ்சிக் கொள்ளும்.
பயன்படுத்தும் அளவு:
தொடக்கத்தில் பசுவின் கோமியத்தை சிறிதளவு பயன்படுத்தினால் போதுமானது. இதனால் தாவரத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். பொதுவாக 2 வாரங்களுக்கு ஒருமுறை பசுவின் கோமியத்தை தாவரங்களின் மீது பயன்படுத்தலாம். தாவரங்களுக்கு ஏதேனும் வளர்ச்சியின்மை அல்லது பாதிப்பு ஏற்பட்டால், கோமியத்தில் கூடுதலாக சிறிதளவு தண்ணீரைக் கலந்து அதன் செரிவைக் குறைக்க வேண்டும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
நாம் பச்சையாக உண்ணும் தாவரங்களின் உண்ணக் கூடிய பாகத்தில் கோமியத்தைப் பயன்படுத்த வேண்டாம். உண்ண முடியாத பாகங்கள் மற்றும் அலங்காரத் தாவரங்களின் மீது கோமியத்தைப் பயன்படுத்தலாம்.
இளஞ்செடிகள் மற்றும் மென்மையான தாவரங்களின் மீதும் கோமியத்தைப் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் இவை செறிவூட்டப்பட்ட கரைசலுக்கு எதிராக அதிக உணர்திறன் கொண்டதாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
பசுவின் கோமியத்தை சேகரிக்கும் போதும், பயன்படுத்தும் போதும் நீங்கள் கையுறைகளை அணிந்து முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
பசுமாட்டின் கோமியம் பாரம்பரிய விவசாயத்தில் உரமாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இதுகுறித்த அறிவியல் ஆய்வுகள் குறைவாகவே இருக்கின்றன. ஆகையால் கோமியத்தைப் பயன்படுத்தும் முன் வேளாண் துறை வல்லுநர்கள் மற்றும் உள்ளூர் விவசாயிகளிடம் ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.