'ஒரு கிராமம் ஒரு பயிர்' திட்டத்தின் சிறப்பம்சங்கள்!

One Village One Crop
One Village One Crop

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அவ்வகையில் நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 'ஒரு கிராமம் ஒரு பயிர்' திட்டத்தின் முக்கிய அம்சங்களை இப்போது காண்போம்.

ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. எந்த மண்ணில் எந்தப் பயிர் வளர்ந்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்பதை வேளாண் துறையும், விவசாயிகளும் ஓரளவு அறிந்து வைத்திருப்பார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள வருவாய் கிராமங்களில் எந்தப் பயிர் அதிகமாக விளைவிக்கப்படுகிறது என்பதை கணக்கெடுத்து, அந்தப் பயிரை மட்டும் 5 ஏக்கர் முதல் 10 ஏக்கர் நிலப்பரப்பில் விளைவிப்பது தான் 'ஒரு கிராமம் ஒரு பயிர்' திட்டம் ஆகும். ஒவ்வொரு கிராமத்திலும்‌ இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் நிலம் தகுந்த மண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதற்கேற்ப வேளாண் துறையால் பரிந்துரைக்கப்படும் உரங்கள் இடப்படும்.

தேர்வு செய்யப்படும் பயிர் வகைகள்:

ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் தானிய வகைப் பயிர்களில் நெல், ராகி, கம்பு மற்றும் மக்காசோளம் உள்ளிட்ட தானியங்கள் அடங்கும். திணை, வரகு மற்றும் குதிரைவாலி போன்ற சிறுதானியங்களும், சூரியகாந்தி, எள் மற்றும் நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துகளும், உளுந்து மற்றும் பாசிப்பயறு போன்ற பயறு வகைகளும், பருத்தி மற்றும் கரும்பு போன்ற பணப்பயிர்களும் அந்தந்த நிலத்தின் தன்மைக்கேற்ப தேர்வு செய்யப்படும்.

ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் செய்லபடுத்தப்படும் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு கடன் உதவிகளும் வழங்கப்படும். இது மட்டுமின்றி இயற்கை சீற்றங்களால் மகசூல் பாதிக்கப்பட்டால் பயிர்க் காப்பீடு பெற்றுத் தரவும் வழிவகை செய்யப்படும். பயிர்களில் உண்டாகும் பூச்சித் தாக்குதலுக்கு உரிய தீர்வினை வழங்கி, பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசே செய்து கொடுக்கும்.

தேர்ந்தெடுக்கப்படும் அனைத்துப் பயிர்களுக்கும் நிலத் தேர்வு, விதை நேர்த்தி, பூச்சி மேலாண்மை, தண்ணீர் மேலாண்மை, களை மேலாண்மை, அறுவடைக்குப் பிந்தைய நேர்த்திகள் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்றவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இதையும் படியுங்கள்:
எளிதில் விவசாய பயிர் காப்பீடு செய்யும் வழிகள்!
One Village One Crop

திட்டத்தின் பலன்கள்:

ஒரு மாவட்டம் ஒரு பயிர் திட்டத்தின் அடிப்படை தான் இந்த ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம். அரசு வேளாண் துறை சார்பில் பலதரப்பட்ட உதவிகள் கிடைப்பதால், மிகக் குறைந்த செலவில் அனைத்து விதமான தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த முடியும். மேலும் இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செலவு குறைவதால், விவசாயிகளுக்கு நிதித் தேவையைக் குறைக்கிறது. விளைபொருள்களை சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுப் பொருள்களாக விற்பதால் விவசாயிகளின் வருமானம் கணிசமாக உயரும். குறிப்பட்ட ஒரு பயிர் அதிக நிலப்பரப்பில் விளைவிக்கப்படுவதால், அப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் நிபுணத்துவம் அடையவும் வாய்ப்புள்ளது.

விவசாயிகளுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாகவும், தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ளவும் உதவுகிறது. இளம் தலைமுறை விவசாயிகள் குறைந்து வரும் இந்நிலையில், இதுபோன்ற திட்டங்கள் விவசாயத்தை இன்னமும் ஊக்குவிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com