
துன்பப்படுபவரைப் பார்த்து யாராவது பொய்யாக பரிதாபப்படுவதுபோல நடித்தால் அவரை முதலைக் கண்ணீர் விடுகிறார் என்று சொல்வோம். உண்மையில் முதலைகள் கண்ணீர் விடுமா என்ற கேள்விக்கு ஆம் என்பதே பதில். அது ஏன் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
முதலைக் கண்ணீர் விடுவது என்பது பிறரை ஏமாற்ற சோகமாக, வருத்தமாக இருப்பதை போல நடிப்பதைக் குறிக்கிறது. மற்றவரை ஏமாற்றும் ஒரு செயல் அது. உதாரணமாக ஒரு அரசியல்வாதி பொதுமக்களின் ஆதரவை பெறுவதற்காக உண்மையிலேயே அக்கறை கொள்வதைப்போல வருத்தப்படுவது போல் நடிப்பதை முதலைக் கண்ணீர் விடுகிறார் என்று சொல்லலாம். உண்மையில் முதலைகள் தங்கள் இரையை உண்ணும் போது கண்ணீர் விடுகின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனால் அது பரிதாபத்தினால் அல்ல, அவற்றின் உடல் அமைப்பின் காரணமாகத்தான்.
காட்டின் ராஜா சிங்கமாக இருக்கலாம். ஆனால் முதலைகள் உடல் வலிமையில் சிங்கங்களை விட மூன்றரை மடங்கு வலிமையானவை. விலங்கு ராஜ்ஜியத்திலேயே வலிமையாக கடிக்கும் உயிரினம் முதலைகள்தான். தங்கள் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான பற்கள் உதிர்ந்து புதிய பற்கள் முளைப்பதும் முதலைகளுக்குதான்.
முதலைகளுக்கு கண்ணீரை உருவாக்கும் சுரப்பிகள் உள்ளன. முதலைகளால் தங்கள் உணவை அதாவது இரையை மெல்ல முடியாது. அதனால் இரையைப் பிடித்து இறைச்சித் துண்டுகளை கிழித்து முழுமையாக விழுங்கிவிடும். வாயை மிக அகலமாக திறக்கும்போது அது கண்ணீர் சுரப்பைகளை பாதிக்கிறது. அதிலிருந்து கண்ணீர் வருகிறது. இவற்றின் தாடைகள் பக்கவாட்டாக நகரும்போது சில சமயங்களில் வயிற்றில் உணவை அரைக்க உதவும் இரைப்பை கற்களை கூட விளங்கி விடுகின்றன
மனிதர்களைப் போலவே முதலைகளுக்கும் கண்களை ஈரப்பதமாக வைத்திருக்கவும் அழுக்கு மற்றும் குப்பைகளை கழுவவும் கண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீரில் இருந்து வெளியே வரும்போது முதலைக்கு கண்கள் வறண்டு போகும். உப்பு நீர் முதலைகள் அவற்றின் உணவு மற்றும் சுற்றுச்சூழலில் இருந்து நிறைய உப்பை எடுத்துக் கொள்கின்றன. அதனால் அவற்றின் கண்ணீர் வழியாக அந்த அதிகப்படியான உப்பை வெளியேற்றுகின்றன.
இரையைப் பிடிக்கும்போது அவை பெரும்பாலும் அதிகமாக தங்களது வாயை அகலமாக திறக்கின்றன. அவற்றின் மூக்கு, தொண்டை போன்ற பகுதிகளில் காற்று அதிகமாக உள்ளே போகிறது. இதனால் அவற்றின் கண்ணீர் சுரப்பிகள் தூண்டப்படுகிறது. மனிதர்கள் கடுமையாக இருமும் போதும் அல்லது வாந்தி எடுக்கும் போதும் கண்ணீர் வரும்.
அது போலத்தான் உடல் ரீதியான எதிர்வினை முதலைகளுக்கு நேர்கிறது. ஒரு பெரிய இரையைப் பிடித்து உண்ணும் போது அவற்றின் கண்களில் இருந்து நுரை போன்ற கண்ணீர் வெளியே ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
முதலைகள் கண்ணீர் விடுவது நிஜம்தான். ஆனால் அது யாரையும் ஏமாற்ற அல்ல; மனிதர்கள்தான் போலியாக நடித்து பிறரை ஏமாற்ற முதலைக் கண்ணீர் விடுகின்றனர் என்பது கசப்பான உண்மை.