
நீர் மேலாண்மை என்றாலே சோழர்களின் ஆட்சியைப் பற்றி புகழாரம் சூட்டாமல் இருக்க முடியாது. அவர்கள் ஏன் நீர் மேலாண்மைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்? எந்தெந்த சோழ மன்னர்கள் காலத்தில் நீர் மேலாண்மை எவ்வாறு வளர்ச்சி அடைந்தது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்!
900ம் ஆண்டில் இருந்து 1300ம் ஆண்டு வரையிலான காலத்தை 'இடைக்கால வெப்ப காலம்' என்று குறிப்பிடுகிறார்கள். இந்த நேரத்தில் வடகிழக்குப் பருவ மழை அதிகமாகவும், தென்மேற்கு பருவ மழை மிகக் குறைவாகவும் பொழிந்து இருக்கிறது. இதை கவனித்த சோழ மன்னர்கள், தென்மேற்கு பருவ மழை பொழிவு குறைந்த காரணத்தால் தமிழகத்தின் மேற்கு திசையிலிருந்து உற்பத்தியாகி தமிழ்நாட்டு நிலப்பரப்பிற்கு ஓடிவரும் ஆறுகளில் வரும் நீர்வரத்து குறைவதை அறிந்தனர்.
ஆறுகளை நம்பியே வாழ்ந்து வந்த இந்தப் பகுதி அரசுகளுக்கு இது பெரும் பிரச்னையாக இருந்திருக்கிறது. மேலும், வடகிழக்கு பருவமழை அதிகமாகப் பொழிந்தாலும் ஆற்றில் நீர் பெருக்கம் ஏற்படாது. ஏனென்றால் வடகிழக்கு பருவ மழை வேகமாக ஓடி கடலில் கலந்து விடும். அப்பொழுதுதான் இனி ஆற்று நீரை மட்டும் நம்பி இருக்க முடியாது என்று கருதி அவ்வப்போது பெய்யும் குறைவான மழையை தேக்கி வைக்கும் முறைக்கு அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்கள். இதனால் தெப்பக்குளங்களையும், ஏரிகளையும், நீர்த்தேக்கங்களையும் உருவாக்கி இருக்கிறார்கள்.
இப்படித் தேக்கிய நீரை சரியான முறையில் மேலாண்மை செய்துள்ளார்கள். இதுவே சோழர்களின் எழுச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. பருவ கால மாற்றத்தைப் புரிந்துகொண்டு அதனால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து அதற்கு ஏற்ற மாற்று வழிகளை சோழர்கள் உருவாக்கியது மற்றவர்களைக் காட்டிலும் அவர்களை பலமிக்க ஆட்சியாளர்களாக மாற்றி இருக்கிறது.
சோழர்களின் காலத்தில் ஏற்பட்ட இடைக்கால வெப்பம் போல இனி வரும் காலங்களில் வடகிழக்கு மழை பொழிவே அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. எனவே, சோழர்களின் நீர் மேலாண்மையை குறித்து அறிந்து, அதோடு இன்றைய நவீன முறைகளையும் சேர்த்து நீர் மேலாண்மை திட்டமிடல் இப்போதைய தமிழகத்திற்கு மிகவும் அவசியத் தேவை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வளவு துல்லியத்தை உணர்ந்து அப்பொழுதே நீர் மேலாண்மையை கடைப்பிடித்த நம் முன்னோர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
விஜயாலயன் காலத்திலிருந்து சோழர்களின் வளர்ச்சி தொடங்கினாலும் முதலாம் ராஜராஜன் காலத்தில் உச்சநிலையை அடைந்தது. நீர் மேலாண்மை என்பதை சங்க காலத்தில் இருந்து நாம் அறிகிறோம்.
கரிகாலன் காவிரிக்கு இருபுறமும் கரை எழுப்பி கல்லணை எழுப்பினான் என்பது நாம் அறிந்தது. வரலாற்று சிறப்புமிக்க கல்லணை கி.பி இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதுவே உலகின் நாலாவது பழைமையான நீர் மாற்று அமைப்பு அல்லது நீர் ஒழுங்குபடுத்தும் அமைப்பு. உலகில் இன்னும் பயன்பாட்டில் உள்ள பழைமையான கட்டமைப்பும் இதுவே. இதனால் திருச்சி மற்றும் தஞ்சை பகுதிகளை வளப்படுத்தினான். மற்றும் இதனை கரிகால சோழன் இலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்ட 12 ஆயிரம் அடிமைகளைக் கொண்டு கட்டி முடித்தான். இந்த கல்லணை பல ஏக்கர் நிலங்களுக்கு நீர் வளத்தை அளித்துக் கொண்டு இருக்கிறது. சோழர்களின் நீர் மேலாண்மைக்கு சான்றாய் இன்றும் கல்லணை திகழ்கிறது. சங்க காலத்திற்குப் பின்னர் வந்த சோழர்கள் நீர் மேலாண்மை மற்றும் பாசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் நீர்த்தேக்கம் ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் உருவாக்கப்பட்டது. இவர்கள் குறிப்பாக இராஜராஜன் அவரது மகன் ராஜேந்திரன் காலத்தில் ஏரிகள், வாய்க்கால்கள், குளங்கள் அதிகம் வெட்டப்பட்டன. அவர்களது நீர் பாசன தகவல்களை கல்வெட்டுகளிலோ அல்லது செப்பேடுகளிலோ குறித்து வைத்திருக்கிறார்கள். அதற்கு சான்றாக விளங்குவது வீராணம் ஏரி எனப்படும் வீரநாராயணன் ஏரி. அதுபோல, மதுராந்தகத்தில் அமைந்துள்ள பெரிய ஏரியும் சோழர் கால ஏரியாகும். முதலாம் ராஜேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைத்த சோழகங்கன் என்னும் ஏரி வரலாற்று சிறப்புமிக்க ஏரியாகும். இதற்கான மதகுகளையும் அவனே கட்டினான்.
இந்த ஏரி பாசனங்கள் மூலமாக சோழ நாடு செழிப்புற்று இருந்தது என்பதற்கான சான்றுகளை உத்திரமேரூர் கல்வெட்டுகளில் படித்திருக்கிறோம். ஏரிகளை தூர்வாரி பராமரிக்க ஏரி வாரியம் என்ற வரி விவசாயிகளிடம் அப்பொழுதே வசூலிக்கப்பட்டது என்றும் சரித்திரப் பாடங்களில் படித்த ஞாபகம் உண்டு. வேளாண்மை நிலங்களுக்கு குறிப்பிட்ட வாய்க்கால்கள் மூலமாக நீர் செல்ல வேண்டும் என்பதை கல்வெட்டுகளில் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். சில நேரங்களில் சாதாரண மக்கள் கூட நீர்நிலைகளை சீரமைத்த செய்தியும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதிகளில் சோழர்களின் பெயரில் அமைந்த வாய்க்கால்களை காண்கிறோம். இப்படி நீர் நிலைகளை சீரமைத்த பெருமை சோழர்களையே சாரும் என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள்.
இதனால்தான் உலகப் பாரம்பரியமான நீர்ப் பாசன கட்டமைப்புகளுக்கான விருதுகளுக்கு கல்லணை, வீராணம் ஏரி போன்றவை தேர்ந்தெடுக்கப்பட்டு நீர் சேமிப்பை ஊக்குவித்தல் மற்றும் நீர்ப் பாசன கட்டமைப்புகளை சிறந்த முறையில் பராமரித்தல் போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாநிலத்திற்கான சிறப்பு விருதுகளை சர்வதேச அமைப்பால் பெற்றது.