

மற்ற பறவைகளுடன் ஒப்பிடும்போது காக்கைகளுக்கு புத்திசாலித்தனமும் ஞாபக சக்தியும் அதிகம் எனக் கூறப்படுகிறது. நடைமுறையிலும் நாம் அதைக் காண முடியும். காக்கைகள் தம்மிடம் பிரியமுடன் நடந்து, உணவளிப்போர்களுக்கு தாமும் ஏதாவது பரிசு கொடுக்க வேண்டுமென்று, அவ்வப்போது கூழாங்கல், பாட்டில் மூடி மற்றும் கீ செயின் போன்ற சிறிய பொருட்களை, உணவு வைக்கும் இடத்திற்கு அருகில் கொண்டுவந்து வைத்து விட்டுச் செல்வதாக சிலர் கூறுவர். இது பற்றி விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இப்பதிவில் பார்க்கலாம்.
காக்கைகள் தான் பெற்ற அன்பிற்கு பிரதியுபகாரமாக அன்பானவர்கள் கண்ணில்படும்படி, நன்றியுடன் இவ்வாறான பொருட்களை விட்டுச் செல்வது விசித்திரமானதும் உணர்வுபூர்வமானதுமான ஓர் அனுபவம் என்கின்றனர் விஞ்ஞானிகள். மனிதர்களுடன் நல்லுறவு வைத்துக்கொள்ள காக்கை எவ்வாறெல்லாம் யோசித்து செயல்புரிகிறது என்றும் அதன் பின்புலத்திலிருந்து செயலாற்ற உதவும் அறிவாற்றல் மற்றும் நினைவுத் திறன் பற்றியும் விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.
சமுதாயத்திலுள்ளவர்களுடன் நல்லுறவு, மனிதர்களின் முகங்களை நினைவில் வைத்துக்கொள்ளுதல், பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல் போன்ற நற்குணங்கள் காக்கைக்கு உண்டு. சில காக்கைகள், முகமூடி அணிந்த ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனைக்காக தங்களைப் பிடித்துச் சென்றதை நீண்ட காலம் நினைவில் வைத்து, அதேபோன்ற முகமூடி அணிந்திருந்த வேறு சிலரை துரத்திச் சென்று துன்புறுத்திய சம்பவமும் நடந்துள்ளது.
இதன் மூலம் தமக்கு உணவளிப்பவர்களையும், ஊறு விளைவிப்பவர்களையும் பிரித்துப் பார்க்கும் திறன் கொண்ட காக்கை, தொடர்ந்து நட்புடன் உணவளித்து வரும் மனிதருக்கு பரிசு கொடுப்பதை நம்பத்தான் வேண்டியுள்ளது. அந்தப் பரிசுப் பொருள் ஏனோதானோவென்ற ஒரு பொருளாக இருப்பதில்லை. ஆழ்ந்து யோசித்து, வழக்கத்துக்கு மாறான, பளபளப்பான, மனிதர்கள் விரும்பக்கூடிய ஒரு பொருளையே சேகரித்து வந்து வைத்துச் செல்கின்றன. தாம் கொண்டுவந்து கொடுத்த பரிசு அவர்களுக்குப் பிடித்ததாக உள்ளதா என்பதை தொடர்ந்து கவனிக்கவும் செய்கின்றன.
எப்படி என்கிறீர்களா? பின்வரும் நாட்களில் அவர்களின் கவனிப்பும் அன்பும் குறையாமல் உள்ளதா என்பதை வைத்துத்தான்! மாற்றமிருப்பின் பரிசின் தரத்தையும் உயர்த்திக்கொள்ள நினைக்கும் போல. 'பரிசு' என்பது ஒரு விபத்து போன்றது என்கின்றனர் சில விஞ்ஞானிகள். ஆர்வத்தின் காரணமாக அல்லது கூடு கட்டி முட்டையிடும் சீசனில் பல வகையான பொருட்களை காகம் சேகரிப்பதுண்டு. அப்படி ஒரு பொருளை எடுத்துச் செல்லும்போது, உணவு வைத்திருப்பதைக் கண்டுவிட்டால், பொருளை அவ்விடத்தில் வைத்துவிட்டு உணவை உண்டுவிட்டு சென்றுவிடும் என்பது அவர்களின் கருத்து.
மனிதர்களுக்கு இருப்பது போன்ற நன்றியுணர்வு மற்றும் பரிசளிக்கும் நோக்கம் காகத்திற்கு உண்டு என்பதெல்லாம் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்ற மாற்றுக் கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஒருவேளை அதன் புத்திசாலித்தனத்தை மிகைப்படுத்தி இவ்வாறு கூறுகின்றனரோ என்றும் தெரியவில்லை. எது எப்படியாயினும், வனத்திலும் மனிதர்கள் வாழுமிடங்களிலும் வேறுபாடின்றி பழகி வாழ்ந்து வரும் காக்கைகளுக்கு பாதுகாப்பான உணவளித்து நட்புறவு கொள்வோம்.