

மனித வாழ்வை எளிதாக்க வந்தவை தான் விஞ்ஞானக் கண்டுப்பிடிப்புகள். விஞ்ஞானிகள் தங்கள் இன்ப, துன்பங்களை ஒதுக்கி வைத்து விட்டு ஊண், உறக்கமின்றி ஆய்வுகளை மேற்கொண்டே புதியவற்றைக் கண்டுப்பிடித்து, அனைவரையும் ஆச்சரியப்படவும், ஆனந்தப்படவும் செய்கிறார்கள். ஏகப்பட்டவை அவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்டதில், நெகிழ்ச்சியும், எடைக் குறைவும் கொண்ட பிளாஸ்டிக்கின் வரவு மகத்தானது. மனித வாழ்வோடே அது ஐக்கியமும் ஆகிவிட்டது.
மணவாழ்க்கை ஆரம்பிக்கும் மண்டபத்திலிருந்து ஆரம்பிப்போமா? நூற்றுக்கணக்கான நாற்காலிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் குறைந்த இடத்திலேயே அவற்றை இன்று ஸ்டோர் செய்ய முடிகிறது. அதற்குப் பதிலாக மரச் சேர்களையோ, ஸ்டீல் சேர்களையோ எண்ணிப் பாருங்கள். இடம், ஆள் எல்லாம் ஏகமாகத் தேவைப்படும். பிளாஸ்டிக் சேர்களைக் கையாள்வதும் எளிது.
ஊருக்குப் புறப்படுவோர் கையில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில். அந்தக் காலத்தைப் போல் ஆளுக்கொரு கூஜாவைத் தூக்கிக் கொண்டு போனால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தாலே, சிரிப்புத்தான் வரும்.
என்ன ஒரு குறை.... கூஜாவை நீர் முடிந்ததும், பிளாஸ்டிக் பாட்டிலைத் தூக்கி எங்கு, ஏது என்று பார்க்காமல் வீசுவதைப் போல் வீச முடியாது. ஆனால் அப்படி வீசுவதால்தான் ஆபத்தே ஆரம்பமாகிறது என்பதை உணராத காரணத்தாலேயே இன்று உலகே தத்தளிக்கிறது. கூடவே, கடைகளில் பொருட்களை வாங்கக் கையை வீசிக் கொண்டு வந்து விட்டு, பொருட்களைப் பிளாஸ்டிக் பைகளில் எளிதாக வாங்கி வர, உலகமே பழகி விட்டது.
வளர்ந்த நாடுகளில் அதனை ஒழுங்காக டிஸ்போஸ் செய்து விடுகிறார்கள். நாமோ அதனையும் காற்றில் பறக்கவிட்டுச் சுற்றுச்சூழலையும் பாழாக்குகிறோம். விலங்குகளுக்கும் தீங்கிழைக்கிறோம். மெலிதான பிளாஸ்டிக் பைகளை உணவாக உண்டு, பல மாடுகள் இறப்பதாக அடிக்கடி செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இவை மட்டுமல்ல. பிளாஸ்டிக்கின் பயன்பாடு பலவற்றிலும் உள்ளதுபோல், சரியான டிஸ்போஸ் இல்லாததால் தொடரும் அவலங்களும் பல.
2014ல் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம், திறந்த வெளிகளில் மலஜலம் கழிப்பதை நிறுத்தவும், திடக் கழிவு மேலாண்மையை மேம்படுத்தவும், பொதுவிடங்களில், நீர் நிலைகளில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளைக் களையவும் வழி வகுத்து, இயங்கி வருகிறது. நீர் நிலைகளில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளால் மீன் மற்றும் பல நீர் வாழ் இனங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன.
சாதாரண நீர் நிலைகளில் மட்டுமல்ல, கடல்களிலும் கூட இந்தப் பிளாஸ்டிக்கால் (Ocean trash) பேரழிவு ஏற்பட்டு வருவதாக செய்திகள் தெரிவித்து வரும் நிலையில், டச்சு பொறியாளர்கள்(Dutch Engineers) 600 மீட்டர் நீளமுள்ள மிதக்கும் வெற்றிட சாதனத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறார்கள். இதன் மூலம் கடல்கள், சமுத்திரங்களில் உள்ள பிளாஸ்டிக் துகள்கள், கழிவுகள் போன்றவற்றை அகற்றி அவற்றைத் தூய்மையாக்கி விடலாமாம்!
ஆரம்பம்தானே இது! இனி சமுத்திரங்கள், கடல்கள், ஏரி, குளங்களென்று அனைத்தும் பிளாஸ்டிக்கின் பிடியிலிருந்து விடுபட்டு, தூய்மை காக்கும்! மக்கள் வாழ்வு சிறக்கும்! நம்புவோம்! நம்பிக்கைதானே வாழ்க்கை!