பாதுகாப்பிற்கு அழியும் தருவாயில் உள்ள நாட்டு நாய் இனங்களை சிஆர்பிஎஃப் வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள பல்வேறு பாதுகாப்புத் துறைகளில் நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மோப்பதிரன், வேகம் போன்றவற்றின் காரணமாகவும், போதைப் பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் தடயங்கள் மூலம் குற்றவாளிகளையும் எளிதில் நாய்கள் கண்டறிய உதவுவதால், பாதுகாப்புத்துறையில் நாய்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு இந்தியாவிலுள்ள பல்வேறு பாதுகாப்புத் துறைகளில் பயன்படுத்தப்படும் நாய்களில் வெளிநாட்டு நாய் இனங்களே பெருமளவில் இருக்கின்றன.
இந்த நிலையில் சிஆர்பிஎப் வீரர்கள் நாட்டு நாய்களை தங்கள் பாதுகாப்பு பணிகளில் பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் நாட்டு நாய்களுக்கு என்று பண்ணை அமைத்துள்ள வெங்கட் என்பவரிடமிருந்து நாய்கள் வாங்கப்பட்டு அவைகளுக்கு 9 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு அவை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு தமிழ்நாட்டின் பாரம்பரிய நாய் இனங்களான கொம்பை, கன்னி, சிப்பி பாறை, ராஜபாளையம், மலையேறி நாய், கட்டைக்கால் போன்ற நாய் வகைகள் அதீத மோப்பத்திறன் காரணமாகவும், வேகம் காரணமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இவற்றை பராமரிப்பதற்கான செலவும் மிக குறைவு. இது மட்டுமல்லாது நாட்டு நாய்களுக்கு மனிதர்கள் உண்ணும் சாதாரண உணவுகளே போதுமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வருங்காலத்தில் வெளிநாட்டு நாய் வகைளுக்கு இணையாக இந்தியாவில் உள்ள பல்வேறு பாதுகாப்புத் துறைகளில் நாட்டு நாய்களும் பெருமளவில் பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம் பல்வேறு நாட்டு நாய் இனங்கள் பாதுகாக்கப்படும் சூழலும் உருவாகி இருக்கிறது.