
மயில் சிலந்தி (Peacock Spider) தெற்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும் ஒரு வகை தாவும் சிலந்தியாகும். இவை மராட்டஸ் வோலன்ஸ் (Maratus volans) இனத்தைச் சேர்ந்தவை. இதில் மொத்தம் 108 இனங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. 4 மில்லி மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த சிறிய சிலந்திகள் புல்வெளி, வனப்பகுதி, வறண்ட புதர்க்காடுகள், மணல்மேடுகள் மற்றும் காடுகளில் காணப்படுகின்றன.
ஒரு வருடத்திற்கும் குறைவான ஆயுட்காலமே கொண்டவை இவை. ஆண் சிலந்திகள் நீலம், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் பிரகாசமான நிற வயிற்றுப் பகுதியை கொண்டுள்ளன. பெண் சிலந்திகள் சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன.
மயில் சிலந்திகளுக்கு 8 கண்கள் உள்ளன. இவை சிறந்த பார்வை மற்றும் ஆழமான உணர்வைத் தருகின்றன. இவை பெரும்பாலும் தனிமையில் வாழும் தன்மை கொண்டவை. ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் காணப்படுவதில்லை என்றாலும், இனச்சேர்க்கைக்காக ஒன்று சேரும். ஆண் சிலந்திகள் தங்களுடைய மயில் விசிறி போன்ற வயிற்றைக் காட்டி நடனத்தை நிகழ்த்தி பெண் சிலந்திகளை ஈர்க்கின்றன.
பெண் மயில் சிலந்திகள் பசியுடன் இருந்து, இனச்சேர்க்கையிலும் விருப்பமில்லை என்றால் ஆண் சிலந்திகளைத் தாக்கி உண்ணக்கூடும். சில சமயங்களில் இனச்சேர்க்கைக்குப் பிறகு ஆண் மயில் சிலந்தியை சாப்பிடும். இதனால் ஆண் மயில் சிலந்திகள் இனச்சேர்க்கைக்குப் பிறகு உடனடியாக புத்திசாலித்தனமாக குதித்து தப்பிவிடும்.
மயில் சிலந்திகள் பொதுவாக சுறுசுறுப்பானவை. தங்கள் உடல் நீளத்தை விட 40 மடங்கு அதிகமாக இவற்றால் குதிக்க முடியும். இவை தங்களை விட மிகப்பெரிய இரையை வேட்டையாடும் திறன் கொண்டவை. இவை சிறியதாக இருந்தாலும் கிரிக்கெட் போன்ற பெரிய பூச்சிகளைக் கொல்லும். இவை இரையை ஒரு பூனையைப் போலவே பதுங்கி தாக்கிக் கொல்கின்றன. மயில் சிலந்திகள் விஷத்தன்மை கொண்டவை. சிறிய ஈக்கள், அந்துப்பூச்சிகள், இறக்கைகள் கொண்ட எறும்புகள், வெட்டுக்கிளிகள் மற்றும் பிற சிலந்திகள் போன்ற இரையை கொல்ல தங்களுடைய விஷத்தை பயன்படுத்துகின்றன.
பெண் மயில் சிலந்திகள் பொதுவாக பழைய மரத்தின் துளைகளில் பூமிக்கடியில் முட்டையிடும். தங்கள் முட்டைகளை பாதுகாக்க பட்டுப் பொந்துகளை உருவாக்கி பாதுகாக்கும். சிலந்தி வகைகளில் மிகவும் அழகான சிலந்தி, மயில் சிலந்தியாகும். இதன் அழகான நடனமே இதற்கு காரணப் பெயராக அமைந்துள்ளது.
இனச்சேர்க்கைக்கு முன்பாக பெண் சிலந்தியை மகிழ்விக்க ஆண் சிலந்தி வயிற்றுப் பகுதியை உயர்த்தி தன்னுடைய மூன்று ஜோடி கால்களையும் உயர்த்தி ஆடத் தொடங்கும். ஆண் சிலந்தியின் ஆட்டம் பிடிக்காமல் போனாலோ அல்லது பெண் சிலந்தி ஏற்கெனவே கருவுற்று இருந்தாலோ அவற்றின் மேல் தாவிச் சென்று கொன்று விடும். திறமையான ஒருசில ஆண் சிலந்திகள் வேகமாகத் தாவி தப்பித்து விடும்.
பல விலங்குகளில் 5 முதல் 10 இனங்களே இருக்கும். ஆனால், மயில் சிலந்தியில் நிறைய இனங்கள் காணப்படுகின்றன. இதன் டிஎன்ஏவில் உள்ள மர்மமான பகுதி, சூழலுக்கு ஏற்ப தகவமைப்பதால் புதிய இனங்கள் உருவாவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அத்துடன் அந்த மர்மமான டிஎன்ஏ குறித்து நிபுணர்கள் அறியவும் முயற்சி செய்கின்றனர்.