
நமது சுற்றுப்புறம் ஆரோக்கியமாக இருந்தால், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். உண்ணும் உணவிலும், பருகும் நீரிலும் சுகாதாரம் காப்பது, நம்மை வியாதிகளில் இருந்து பெருமளவில் காக்கும். எப்போதும் பாதுகாக்கப்பட்ட குடிநீரையே பருகுவது நல்லது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காதபோது குடிப்பதற்கு முன் தண்ணீரைக் கொதிக்க வைப்பது மிகவும் நல்லது. சிறு குழந்தைகள் விஷயத்திலும், வயிற்றுப்போக்கு, டைபாய்டு, ஈரல் அழற்சி, காலரா போன்றவை அதிகமாகக் காணப்படும் சமயங்களிலும் கொதிக்க வைத்த தண்ணீர் மிகவும் அவசியம்.
ஈக்களும், பிற பூச்சிகளும் உணவுப் பண்டங்களின் மீது உட்கார்ந்து, ஊர்ந்து செல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அந்தப் பூச்சிகள் நோய்க் கிருமிகளை விட்டுச் சென்று வியாதிகளை பரப்புகின்றன. உணவுத் துகள்களும், கெட்டுப்போன பதார்த்தங்களும் ஈக்களை ஈர்த்து கிருமிகளைப் பெருக்குவதால், அவற்றை உங்களைச் சுற்றிக் கிடக்கும்படி விட்டு வைக்காதீர்கள்.
பொதுவாக, பாசனத்திற்குப் பயன்படுத்தும் தண்ணீர் சுத்தமானதல்ல. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தக்கூடிய கிருமிகள் அதில் இருக்கலாம். பழங்களையும் காய்கறிகளையும் கழுவிச் சுத்தம் செய்து சாப்பிட அல்லது சமைக்க வேண்டும். குறிப்பாக, கேரட், முள்ளங்கி, டர்னிப் போன்ற காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள் போன்றவற்றை, இறைச்சியை நன்றாக வேக வைத்து மட்டுமே சாப்பிட வேண்டும். வறுத்த அல்லது சுட்ட இறைச்சியிலும் வேகாத பகுதிகள் இல்லாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நேரம் கடந்த அல்லது கெட்டுப்போன உணவைச் சாப்பிடாதீர்கள். அது விஷமானதாக மாறியிருக்கலாம். டப்பாவில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவாக இருந்தாலும் கூட, அந்த டப்பா உப்பியிருந்தாலோ, அதை திறக்கும்போது வாயுடன் கூடிய திரவம் பீறிட்டு கொண்டு வெளியே வந்தாலோ அதற்குள் இருக்கும் உணவைச் சாப்பிடாதீர்கள். டப்பாக்களில் அடைக்கப்பட்ட மீன்களை சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும்.
காசநோய், புளூ, ஜலதோஷம் அல்லது வேறு தொற்று நோய் உள்ளவர்கள் மற்றவர்களை விட்டு ஒதுங்கி இருந்து சாப்பிட வேண்டும். நோயாளிகள் பயன்படுத்திய தட்டுகளையும், பாத்திரங்களையும் மற்றவர்கள் பயன்படுத்தும் முன் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். மரங்கள் சூழ்ந்த இடங்களில் வாழும் மக்கள் நீண்ட ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடன் வாழ்வதாக ஜப்பான் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
ஆரோக்கியத்தைக் கெடுக்கும் இரைச்சல் நமது இருதயத்தில் இருந்து உடலெங்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமணிகள் என்ற மெல்லிய நரம்புகள் அதிக சப்தங்கள் மூலம் தளர்வடைந்து விரிகின்றன. இந்தத் தளர்ச்சி இருதயத்தின் வேலைகளை கடினமாக்கி, நாளடைவில் அதன் செயல்திறனை பாதிக்கிறது. இருதயம் பழுதடைவதால் அதைச் சார்ந்துள்ள நுரையீரல், மூளை மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளும் மறைமுகமாக பாதிப்படையலாம் என ஆய்வில் கண்டறிந்துள்ளனர். வீடுகளின் அருகில் ஒலிபெருக்கி போன்றவை எழுப்பும் ஒலியை அடிக்கடி கேட்பதால் ஒலி மாசு ஏற்படுவது தெரியும். அதனால் உடல் நிலை பாதிக்கும் என்பது தெரியுமா? 40 டெசிபல் ஒலிகளுக்கு மேல் கேட்கப்படும் ஒலிகளால் தலை சுற்றல், வாந்தி, தலைவலி, அதிக களைப்பு போன்றவை ஏற்படுவதாக லண்டன் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
நம்மில் பெரும்பாலோர் வெளியே குடிக்கும் தண்ணீர் பாட்டில்களை வாங்கி உபயோகிக்கிறார்கள். பிறகு அதிலேயே வேறு தண்ணீரை நிரப்பி நாள் முழுவதும் பயன்படுத்துகிறார்கள். இது ஆரோக்கியக் கேடு என்கிறார்கள் ஆய்வாளர்கள். திரும்பப் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களில் ஒரு சதுர செ.மீ.க்கு 3,00,000 பாக்டீரியா கிருமிகள் தங்குவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
கார் போன்ற வாகனங்கள் வெளியிடும் புகையில் இரும்பு ஆக்சைடு எனும் மேக்னிடைட் துகள்கள் அதிகளவில் உள்ளன. இதுவே நகரம் மாசு ஏற்படக் காரணமாக அமையும். இந்த மேக்னிடைட் துகள்கள் மனித மூளையின் செல்களின் செயல்பாட்டை முடக்கி பிரிரேடிக்கல்களை உருவாக்கி நாளடைவில் மனிதர்களிடம் ஞாபக மறதி நோயை உருவாக்கும் என்கிறார்கள் லான்செட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
எங்கே இருந்தாலும் சரி, அதிகப்படியான நேரம் எரியும் மெழுகுவர்த்திகள் நச்சு தன்மையுள்ள வாயுக்களை வெளியிடுகிறது. அது நாளடைவில் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி மூச்சு விடுதலில் சிரமத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் டென்மார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.