Deforestation: காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா? 

Deforestation
Deforestation

காடுகளை அழிப்பது என்பது ஒரு மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சனையாகும். இது நமது பூமியில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. விவசாயம், மரம் வெட்டுதல், நகரமயமாக்கல் மற்றும்  உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற மனித நடவடிக்கைகள் அனைத்துமே காடழிப்பில் அடங்கும். காடுகளை அழிப்பது ஒரு குறிப்பிட்ட இடம் சார்ந்த பிரச்சனையாகத் தோன்றினாலும் அதனால் உலக அளவில் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்க பாதிப்புகள் ஏற்படுகின்றன. 

பல்லுயிர் பாதிப்பு: காடுகள் எண்ணற்ற தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகளுக்கு வாழ்விடமாகத் திகழ்கின்றன. காடுகள் அழிக்கப்படும்போது இத்தகைய வளமான பல்லுயிர் பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. பல தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்கள் காடுகளை தங்களின் வாழ்வாதாரமாக நம்பியுள்ளன. ஏனெனில் அவை, அத்தகைய உயிரினங்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருக்கிறது. காடுகளை அழிப்பதால் இதன் வாழ்விடங்கள் சீர்குலைந்து, ஏராளமான உயிரினங்களின் இடப்பெயர்ச்சி மற்றும் அழிவுக்கு வழிவகுக்கும். 

பருவநிலை மாற்றம்: காடுகள் ஒளிச்சேர்க்கை மூலம் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி பூமியின் காலநிலையை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. காடழிப்பு, இந்த இயற்கை கார்பன் சுழற்சியை சீர்குலைப்பது மட்டுமின்றி, மரங்கள் வெட்டப்பட்டு எரிக்கப்படும்போது சேமிக்கப்பட்ட கார்பன் மீண்டும் வளிமண்டலத்தில் வெளியேறி, கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அதிகரிப்புக்கு பங்களிக்கிறது. குறிப்பாக காடுகள், வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவை ஒழுங்கு படுத்துவதால், இவை அழிக்கப்படும்போது காலநிலை முறைகள் பெரிதளவில் பாதிக்கப்படும். இதனால் வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வறட்சி, வெள்ளம் போன்ற பெரும் பாதிப்புகள் ஏற்படலாம். 

மண் அரிப்பு: மண்ணின் ஆரோக்கியத்தை பேணுவதிலும், அரிப்பைத் தடுப்பதிலும் காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. மரத்தின் வேர்கள் மண்ணை ஒன்றாக இணைக்க உதவுகின்றன. இதனால் காற்று மற்றும் நீரால் ஏற்படும் அரிப்பு, நிலச்சரிவு போன்றவை குறைகிறது. மழைப் பொழிவால் மேலே இருக்கும் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நீங்கி மண் சரவை ஏற்படுத்துகிறது. இதனால் விவசாய உற்பத்தி பெரிதளவில் பாதிக்கப்படலாம். நீரினால் அரித்துகொண்டு செல்லப்படும் மண், நீர் மாசுபாட்டை ஏற்படுத்தி நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விட அழிவுக்கு வழிவகுக்கும். 

இதையும் படியுங்கள்:
ஹைட்ரஜன் நீர் என்றால் என்ன? மற்றும் அதன் பயன்கள்!
Deforestation

நீர் சுழற்சி பாதிக்கப்படும்: நீர் சுழற்சிக்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை மழையை உறிஞ்சி மெதுவாக ஆறுகள், ஓடைகள் மற்றும் நிலத்தடி நீர் நிலைகளில் வெளியிடுகின்றன. இது ஆண்டு முழுவதும் நீர் இருப்பை பராமரிக்க உதவி, வெள்ளம் மற்றும் வறட்சியைத் தடுக்கிறது. காடழிப்பு, இந்த இயற்கை செயல்முறையை சீர்குலைப்பதால் இதன் விளைவாக வெள்ளப்பெருக்கு, நீர் மாசுபாடு, மண் அரிப்பு, கழிவுகள் காரணமாக நீரின் தரம் குறையும் அபாயம் உள்ளது. காடுகள் அழிக்கப்படுவதால் நிலத்தடி நீர் மீண்டும் நிரப்பப்படும் திறன் குறையும். இது மனித மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளுக்கான நீர் விநியோகத்தை முற்றிலும் பாதிக்கிறது. 

காடுகளை அழிப்பதால், மேலே குறிப்பிட்டுள்ளபடி பல பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடலாம். எனவே இதை கருத்தில் கொண்டு, நமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த சுற்றுச்சூழலை உறுதிப்படுத்த, நாம் அனைவரும் கூட்டாக செயல்பட வேண்டும்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com