காற்று மாசுபாடு இன்று உலகம் சந்திக்கும் பிரதான பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. இவற்றைத் தடுக்க மாற்று செயல்திட்டங்களை உலகம் வகுத்துப் பயணிக்க வேண்டும் என்று மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மத்திய மின்சாரத் துறை அமைச்சர் தெரிவித்து இருப்பது, “பூமி பல லட்சம் ஆண்டுகள் காணாத மாற்றத்தை கடந்த 50 ஆண்டுகளாக கண்டு வருகிறது. அதற்குக் காரணம் இயற்கைக்கு எதிரான மனிதர்களுடைய அதிதீவிர வளர்ச்சியே. ஆனால், அவற்றை இயற்கைக்கு ஏதுவாக அமைக்க வேண்டியது கட்டாயம்.
உலகம் தற்போது சந்திக்கும் பிரதான பிரச்னையில் ஒன்றாக காற்று மாசுபாடு மாறி இருக்கிறது. எரிபொருள் பயன்பாடு நாளுக்கு நாள் உலக நாடுகளில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, காற்று மாசுபாட்டிற்கு 80 சதவீத காரணமாக வளர்ச்சி அடைந்த சில நாடுகளே இருக்கின்றன. அந்தக் குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. இதனால் இயற்கையும், சுற்றுச்சூழலும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. இதே நிலை தொடருமானால், ஆக்சிஜன் பற்றாக்குறை பூமியில் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். காற்று மாசை குறைக்க உலக நாடுகள் மாற்று சிந்தனையை நோக்கி நகர வேண்டும்.
இந்தியா நம்பிக்கையான வகையில் காற்று மாசை குறைக்க பயணித்து வருகிறது. உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் காற்று மாசு குறைவாகக் காணப்படுகிறது. அதேசமயம் அதிகப்படியான மக்கள் தொகை உள்ள நாட்டில் மூன்று சதவிகிதம் மட்டுமே காற்று மாசுபாடு நிகழ்கிறது என்பது காற்று மாசுபாட்டை தடுக்க இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் வெளிப்பாடு.
மேலும், காற்று மாசை குறைக்க மாற்று ஆற்றலை தேடி இந்தியா அதிவேகமானப் பயணத்தை மேற்கொள்கிறது. சோலார் மின்சாரம் போன்ற பயன்பாடு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வாகன பயன்பாட்டிலும் இந்தியா விரைவில் மிக வேகமான மாற்றத்தை காணும்” என்று கூறினார்.