வடகிழக்கு பருவமழை குறைவாக பதிவாகி வருவதால் பட்டாம்பூச்சிகள் நடப்பாண்டு மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி செல்லும் இடப்பெயர்ச்சியை தவிர்த்து உள்ளன. அதிக அளவிலான மழைப்பொழிவு, கன மழை, சூறைக்காற்று பட்டாம்பூச்சிகளுக்கு ஆபத்தானவையாகும். இதனாலேயே மழைக்காலங்களில் பட்டாம்பூச்சிகள் இடப்பெயர்ச்சியை மேற்கொள்ளும். இப்படி தமிழ்நாட்டின் நிலப்பகுதியில் வாழக்கூடிய பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள் வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி இடப்பெயர்ச்சி நடத்தும். மேலும், தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளை நோக்கி தனது இடப்பெயர்ச்சியை அமைத்துக் கொள்ளும்.
நடப்பு ஆண்டில் மழைப்பொழிவு குறைவாக பதிவாகி இருப்பதால் இடப்பெயர்ச்சி மிகப்பெரும் அளவில் குறைந்து இருப்பதாக பட்டாம்பூச்சி ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். வடகிழக்கு பருவமழை குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே தொடர் மழைப் பதிவை கண்டு வருவதாகவும், மற்ற பெரும்பான்மையான பகுதிகளில் பெரும் அளவில் மழை பொழிவு குறைந்து இருப்பதாலும் பட்டாம்பூச்சிகள் நடப்பு ஆண்டு இடப்பெயர்ச்சியை மேற்கொள்ள வில்லை.
எப்பொழுதும் தமிழ்நாட்டில் இருக்கும் பட்டாம்பூச்சி வகைகள் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இடப்பெயர்ச்சி மேற்கொள்வது வழக்கம். இவை வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் குடியேறும். மேலும், இவை சூரிய ஒளி அதிகம் இருக்கக்கூடிய காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, தரையில் இருந்து 3 மீட்டர் முதல் 15 மீட்டர் உயரம் வரை காற்றின் வேகத்தில் பறந்து செல்லும். இப்படி 150 கிலோ மீட்டர் முதல் 250 கிலோ மீட்டர் வரை பறந்து சென்று தனது இடப்பெயர்ச்சி மேற்கொள்ளும்.
மேலும், இரவு நேரங்களில் பட்டாம்பூச்சிகள் ஓய்வெடுக்கச் சென்றுவிடும். ஆனால், நடப்பு ஆண்டு பட்டாம்பூச்சிகள் இடப்பெயர்ச்சியை பெருமளவில் மேற்கொள்ளாததால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மகரந்தச் சேர்க்கை குறைய வாய்ப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.