
சிலர் வீட்டில் ஒரு குழந்தை பிறந்து விட்டால் அன்றே ஒரு மரத்தை நட்டு வாசல் முன்பாக வளர்ப்பார்கள். இன்னும் சிலர் அழகுக்காக சில மரத்தையும், ராசிக்காக சில குறிப்பிட்ட மரத்தையும், நட்சத்திரத்துக்காக சில மரத்தையும் வளர்ப்பது உண்டு. அப்படி வளர்ப்பது அவரவர்களின் இறை நம்பிக்கையைப் பொறுத்தது. அதுபோல் எந்த ராசிக்கு எந்த மரத்தை வளர்க்கலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
நம் நாட்டின் பாரம்பரியமும் கலாசாரமும் இயற்கையுடன் இணைந்தது. ராசிக் கற்களைப் போன்றே ராசிக்கேற்ற மரங்களும் ஒருவருக்கு வளங்களைக் கொண்டு வரும் என்பது தொன்றுத்தொட்டு உள்ள நம்பிக்கையாகும். தனி மனித வளர்ச்சிக்கும், குடும்ப சூழல் செழிப்பதற்கும் ராசிக்கேற்ற மரங்களை வீட்டின் முன்போ அல்லது முற்றத்திலோ வளர்க்கலாம்.
ராசிக்கேற்ற வனங்களை கோயில்களிலும், பொது இடங்களிலும், பூங்காக்களிலும் அமைக்கலாம். தற்காலத்தில் இயற்கையை எழிலூட்டுவதற்காக கல்லூரி, பள்ளி மற்றும் தொழிற்சாலை வளாகங்களிலும் இதுபோன்ற மரங்கள் நடப்படுகின்றன. இப்படிப் பொது இடங்களில் ராசி வனங்களை அமைப்பதற்கான பல்வேறு விதமான வடிவமைப்புகளைக் கையாளலாம்.
பொதுவாக, இரண்டு வகையான வடிவங்களில் இந்த வனங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவை செவ்வக வடிவம் மற்றும் வட்ட வடிவம் ஆகும். செவ்வக வடிவத்தில் 12 ராசிக்கு ஏற்ற மரங்களை 4 x 3 மீட்டர் என்ற வரிசைகளில் வடிவமைக்கலாம். ஒவ்வொரு தொகுப்பிலும் 3 x 3 மீட்டர் இடைவெளியில் ஒன்பது மரங்கள் வீதம் நட வேண்டும்.
ராசிக்கேற்ற மரங்கள்: மேஷ ராசிக்கு செம்மரம், ரிஷபம் - ஏழிலைப்பாலை, மிதுனம் – பலா மரம், கடகம் - பலாசு அல்லது காட்டுமுருக்கு, சிம்மம் - பாதிரி மரம், கன்னி - மாமரம், துலாம் - மகிழம், விருச்சிகம் - கருங்காலி, தனுசு – அரச மரம், மகரம் - சிசு, கும்பம் - வன்னி மரம், மீனம் - ஆலமரம்.
இதுபோல், ராசிக்கேற்ற மரங்களை கோயிலுக்கு நேர்ந்து விடுபவர்களும் உண்டு. சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது என்பதால் சாலை ஓரத்தில் நட்டு வளர்ப்பவர்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதுபோல் பிரியப்படுபவர்கள் இது போன்று ராசிக்கேற்ற மரங்களை வளர்த்து மகிழலாம்.