விவசாயிகளுக்கு நீர்வரத்தை உறுதி செய்வதில் கால்வாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டின் பல இடங்களில் இந்தக் கால்வாய்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. இதனால் விவசாய நிலங்களுக்கு நீர்வரத்து குறையும் நிலையில், கால்வாய்கள் மீட்டெடுக்கப்படுமா என அலசுகிறது இந்தப் பதிவு.
விவசாயம் செழித்து வளர, விதைகளுக்கு உயிரூட்டுகிறது தண்ணீர். மழைநீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வரும் பல விவசாயிகளுக்கு தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வது அணைகள் தான். அணைகளில் மழைக்காலத்தில் தேக்கி வைக்கப்படும் நீர், அவ்வப்போது விவசாயப் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்படுகிறது. இருப்பினும், அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அனைத்து விவசாயிகளுக்கும் முறையாகச் சென்று சேர்கிறதா என்று கேட்டால் இல்லை என்பதே பல விவசாயிகளின் குமுறலாக இருக்கிறது.
அணையில் இருந்து வரும் தண்ணீர், நீர்வரத்துக் கால்வாய்கள் மூலம் விவசாய நிலங்களை வந்தடைகிறது. இந்நிலையில், இந்தக் கால்வாய்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பது, நீர்வரத்தை வெகுவாக பாதிக்கிறது. கால்வாய்கள் பராமரிப்பின்றி இருப்பதால், இதில் குப்பைகளைக் கொட்டவும் சிலர் தயங்குவதில்லை. இதுமட்டும் தான் பிரச்னை என்றால் கூட பரவாயில்லை. விவசாயத்திற்காக உருவாக்கப்பட்ட கால்வாய்களில் சில தனியார் நிறுவனங்கள் கழிவு நீரை வெளியேற்றுவது ஆக்கிரமிப்பின் உச்சம்.
சில இடங்களில் கால்வாய்களை ஆக்கிரமித்து தனியார் குவாரிகளுக்கு சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் கால்வாய்கள் இருந்த இடங்கள் போலி பட்டாக்களால், வீட்டு மனைகளாக விற்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பல இன்னல்களை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு இதுவும் கூடுதலாக சேர்ந்து விட்டது. விவசாயிகள் சார்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் கால்வாய்கள் இன்னும் மீட்கப்படவில்லை. இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், நீர்வரத்துக் கால்வாய்களை கண்டுபிடித்துத் தாருங்கள் என விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
இருந்த இடமே தெரியாத நிலையில் தான் தற்போது கால்வாய்கள்இருக்கின்றன என்பதை விவசாயிகளின் கோரிக்கையை வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்க விரும்பினால், அரசு முதலில் அனைத்து கால்வாய்களையும் சீரமைத்துத் தர வேண்டும். அணைகளைத் திறந்து விடுவதால் மட்டும் விவசாயிகளுக்கு தண்ணீர் சென்றடைவதில்லை என்பதைப் புரிந்து, கால்வாய்களையும் ஆண்டுதோறும் பராமரித்து வர வேண்டும்.
ஏற்கனவே விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலை இனியும் தொடர்ந்தால் விவசாயமும் குறையும், விவசாயிகளும் குறைவார்கள். விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து, விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் அடுத்து வரும் ஆண்டுகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவது நிச்சயம். இன்னும் ஒருபடி மேலே சொல்வதென்றால் பிளாஸ்டிக் அரிசியைக் கூட நாம் உண்ண வேண்டிய நிலை வரலாம். விழித்துக் கொள்வது மட்டும் முக்கியமல்ல; விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் இப்போதைய நிலையில் முக்கியம்.
விவசாயிகளின் துயர் துடைக்க ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கால்வாய்கள் எப்போது மீட்டெடுக்கப்படும் என்று தெரியவில்லை. இருப்பினும், விரைவில் விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்ப்பார்ப்புமாக இருக்கிறது.