

தரையில் படராமல், சுவர், வேலி, கம்பி, மரம் அல்லது பிற ஆதரவுகளைப் பற்றிக்கொண்டு மேல்நோக்கி வளரும் தாவரங்களே செங்குத்தாக வளரும் கொடிச்செடிகள் எனப்படுகின்றன. இவற்றின் தண்டுகள் பொதுவாக மென்மையாக இருப்பதால் தனியாக நிற்க முடியாது. அதனால் ஏதேனும் ஒரு ஆதாரத்தைப் பற்றிக்கொண்டு உயரமாக வளர்கின்றன.
இன்றைய நகர்ப்புற வாழ்க்கையில் இடப்பற்றாக்குறை அதிகமாக இருப்பதால், குறைந்த இடத்தில் அதிக பசுமையை உருவாக்க செங்குத்துத் தோட்டம் (Vertical Garden) மற்றும் செடிகொடிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவை வீடுகளின் அழகை மேம்படுத்துவதோடு, நிழல், குளிர்ச்சி மற்றும் இயற்கைச் சூழலையும் வழங்குகின்றன.
செங்குத்தாக வளரக்கூடிய சில முக்கியமான கொடி வகைகள் இதோ:
மணி பிளாண்ட்(Money Plant)
முல்லை (Jasmine Vine)
பூகைன்வில்லா (Bougainvillea)
பாஷன் பிளவர் (Passion Flower)
கொடி ரோஜா (Climbing Rose)
பீர்க்கங்காய்/புடலங்காய் மற்றும் பாகற்க்காய் கொடிகள்
திராட்சை கொடி
இக்கொடிகள் வளரக்கூடிய இடங்கள்:
வீட்டு சுவர்கள், பால்கனி, மாடித் தோட்டம், வேலிகள் போன்ற பகுதிகளில் அழகாகப் படர்ந்து வளரக்கூடியவை. மேலும், பேர்கோலா (Pergola) மற்றும் வளைவு அமைப்புகளில் வளரும்போது இயற்கையான நிழலையும் கண்ணைக் கவரும் தோற்றத்தையும் வழங்குகின்றன. அதுமட்டுமல்லாமல், ஜன்னல்கள் மற்றும் வீட்டின் நுழைவாயில் பகுதிகளில் வளர்க்கப்படும் போது சுற்றுப்புறத்தின் அழகை மேம்படுத்தி பசுமையான சூழலை உருவாக்குகின்றன.
வீட்டின் அழகை மாற்றும் செங்குத்துத் தோட்டம் அமைக்கும் ரகசியங்கள்:
வலுவான கம்பிகள் அல்லது கயிறுகள் அமைத்தல்.
டிரெலிஸ் (Trellis) பயன்படுத்துதல்.
சுவற்றில் வலைகள் அமைத்தல்.
கொடிகளை மெதுவாக கட்டி வழிநடத்துதல்.
செங்குத்துத் தோட்டம் பராமரிப்பில் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்:
வளர ஏற்ற சூழ்நிலைகள்:
கொடிச்செடிகள் ஆரோக்கியமாக வளர போதுமான சூரிய ஒளி, நல்ல வடிகால் வசதியுள்ள மண், மிதமான நீர்ப்பாசனம் மற்றும் காற்றோட்டமான சூழல் அவசியமாகும். சில கொடிச்செடிகள் நிழலான பகுதிகளிலும் நன்கு வளரும்; அதே சமயம் சில வகைகள் முழு வெயில் கிடைக்கும் இடங்களில் சிறப்பாக வளரக்கூடியவை.
பராமரிப்பு முறைகள்:
தேவையற்ற கிளைகளை அவ்வப்போது வெட்டி சீரமைக்க வேண்டும். உரமிடுதல் போதிய ஊட்டச்சத்தை வழங்குவதோடு, பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். கயிறுகள் மற்றும் பிற ஆதரவு அமைப்புகளை சீராகப் பரிசோதித்து, தொடர்ந்து தேவையான அளவு நீர் வழங்கினால் செடிகள் நன்கு வளர்ந்து செழிப்பாக காணப்படும்.
செங்குத்துத் தோட்டம் மூலம் கிடைக்கும் வியக்கத்தக்க நன்மைகள்:
வீட்டின் வெப்பத்தைக் குறைத்து, காற்றின் தரத்தை மேம்படுத்துவதோடு தனியுரிமையையும் (Privacy) வழங்குகின்றன. மேலும், இவை வீட்டின் அழகை அதிகரித்து, குறைந்த இடத்திலேயே அதிக பசுமையை உருவாக்க உதவுகின்றன. சில கொடிச்செடிகள் அழகிய பூக்களையும் சத்தான காய்கறிகளையும் வழங்கும் சிறப்பை கொண்டுள்ளன.
இன்றைய நகர வாழ்க்கையில் ஒரு சிறந்த பசுமைத் தீர்வாக மாறியுள்ளன. குறைந்த இடத்திலேயே அதிக பசுமையை உருவாக்க உதவும் இச்செடிகள், காற்றின் தரத்தை மேம்படுத்துவதோடு மனதிற்கும் புத்துணர்ச்சியை அளிக்கின்றன. சரியான பராமரிப்பு மற்றும் பொருத்தமான சூழலை வழங்கினால், உங்கள் வீட்டை பசுமை போர்த்திய ஓர் அழகிய இயற்கைச் சோலையாக மாற்றிவிடும். இயற்கையோடு இணைந்த ஆரோக்கியமான வாழ்க்கையை விரும்புபவர்கள், செங்குத்தாக வளரும் கொடிகளை தங்கள் வீட்டில் வளர்ப்பதை ஒரு பழக்கமாக மாற்றலாம்.
சிறிய பால்கனியாக இருந்தாலும், பெரிய தோட்டமாக இருந்தாலும், செங்குத்தாக வளரும் கொடிச்செடிகள் எந்த இடத்தையும் பசுமையால் நிரப்பும் திறன் கொண்டவை. சுவர்களுக்கு உயிர் கொடுத்து, வீட்டிற்கு இயற்கையின் அழகை சேர்க்கும் இந்த பசுமைத் தோழர்களை வளர்த்து, வீட்டை பசுமைச் சோலையாக மாற்றுங்கள்! ஒரு சிறிய முயற்சி போதும்; உங்கள் வீட்டை பசுமை பேசும் இடமாக மாற்ற முடியும்!