எப்போதும் ஒரு செய்தித்தாளை உபயோகப்படுத்திவிட்டு தூக்கி போடுவது நமது வழக்கம். ஆனால், ஜப்பானில் ஒரு நிறுவனம், அந்த செய்தித்தாளை மறு உபயோகப்படுத்தும் விதமாக ஒரு புது ஐடியாவை கொண்டு வந்து அசத்தியது.
The Mainichi Shimbunsha என்ற செய்தித்தாள் நிறுவனம்தான் இந்த ஐடியாவை கொண்டுவந்தது. இது ஜப்பானின் மிகவும் பழமைவாய்ந்த செய்தித்தாளாகும். இந்த நிறுவனம் Green Newspaper என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது.
பொதுவாக இன்றைய செய்தி, நாளைய குப்பை என்று கூறுவார்கள். அது செய்திக்கு மட்டும் இல்லை, செய்தித்தாளுக்கும்தான். ஒருமுறை படித்த செய்தித்தாளை அடுக்கி வைத்து, ஒரு நாள் பழைய கடைக்கு எடைக்கு போட்டு காசு வாங்கத்தான் போகிறோம். சிலர் அதனை அப்படியே தூக்கிப் போட்டுவிடுவார்கள். மேலும் சிலர், ராக்கெட் விடுவார்கள், பட்டம் செய்வார்கள், செல்ஃப் ரேக்கில் வைத்து ஜாமான்களை அடுக்கி வைப்பார்கள்.
எப்படியும் அதற்கும் பயன்படுத்திவிட்டு நாம் தூக்கித்தான் போடப்போகிறோம். அது ஒன்றும் விதையல்லவே மரமாய் வளர?
இந்த விஷயங்களை மனதில் வைத்த உருவான ஒரு ஐடியாதான் The Green Newspaper. அதாவது வீட்டு அலங்காரச் செடிகள், குட்டி குட்டிச் செடிகள் ஆகியவற்றின் விதைகளோடு அந்த செய்தித்தாள்கள் தயாரிக்கப்படும். இதனால், நீங்கள் அந்த செய்தித்தாளை படித்து தூக்கிப்போட்டாலும், போட்ட இடத்தில் செடியாக வளரும். ஆனால், ஒருவேளை தரையில் தூக்கிப்போட்டுவிட்டால்? என்ற கேள்வி வருமல்லவா?
ஆகையால், மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. அதாவது, படித்தவுடன் அந்தத் தாள்களை யாரும் தூக்கி எறிய வேண்டாம். அதற்கு பதிலாக உங்கள் வீட்டில் இருக்கும் சிறு இடத்திலோ அல்லது கார்டனிலோ அல்லது தொட்டிகளிலோ இந்த தாள்களை வெட்டிப் போட வேண்டும். பின்னர் தினமும் தண்ணீர் ஊற்றி வந்தால், சில நாட்களில் அழகழான வீட்டை அலங்கரிக்கும் செடிகள் வளரும் என்று சொல்லப்பட்டது.
இதனால், செடிகள் கொடிகள் வளரும். நீர்ப்பற்றாக்குறை ஏற்படாது. மேலும் இவை சுற்றுபுறச்சூழலுக்கு ஏற்ற தாள்கள் என்பதால், பெரியளவு வரவேற்பு கிடைத்தது. அவர்களின் திட்டம் நல்ல வெற்றியை பெற்றது. ஒரு நாளைக்கும் சுமார் 4 மில்லியன் தாள்கள் விற்கப்படுகின்றன. முதற்கட்டமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதுபோன்ற நல்ல யோசனைகளை மற்ற நாடுகளும் மேற்கொண்டால், அல்லது நிறுவனங்கள் மேற்கொண்டாலே, பெரிய அளவு வெற்றியையும் வளர்ச்சியையும் பெறலாம் என்பதில் சந்தேகமேயில்லை.