
தாவரங்களை உண்ணும் விலங்குகள் இந்த பூமியில் உண்டு. ஆனால் விலங்குகளையும் பூச்சிகளையும் உட்கொள்ளும் தாவரங்களைப் பற்றி பலருக்கும் தெரியாது. பூச்சிகள், நத்தை, பல்லி, எலிகள் போன்ற சிறிய பாலூட்டிகளை உண்ணும் தாவரங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. வெப்ப மண்டல குடம் செடி - Tropical Pitcher Plant
இந்த தாவரத்தில் குடம் போன்ற அமைப்பு உள்ளது. இது ஒரு அடிக்கு மேல் உயரம் உள்ளது. இது பூச்சிகளை மட்டுமல்ல சிறிய பல்லிகள், பாலூட்டிகளை கூட தின்று ஜீரணிக்கும். இந்தத் தாவரத்தில் உள்ள நறுமணமுள்ள தேனால் ஈர்க்கப்படும் விலங்குகள் இந்த குடம் போன்ற பகுதியில் விழுந்தவுடன் இந்தச் செடி அவற்றை அப்படியே உள்ளிழுத்துக் கொள்கிறது.
தன்னில் விழுந்த விலங்குகளை உண்டு செரிமானம் செய்வதற்கு அந்த செடிக்கு இரண்டு மாதங்கள் வரை கூட ஆகும். இவை மடகாஸ்கர் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ளன. குரங்கு கோப்பை என்றும் இந்த தாவரம் அழைக்கப்படுகிறது.
2. கோப்ரா லில்லி - Cobra Lily
பார்ப்பதற்கு நாகப்பாம்பு போல தோற்றமளிப்பதால் இதற்கு கோப்ரா லில்லி என்று பெயர். இது வடக்கு கலிப்ஃபோர்னியாவின் குளிர்ந்த சதுப்பு நிலங்களில் காணப்படும் ஒரு அரிய வகை தாவரமாகும். இந்தச் செடிகளில் இருந்து வீசும் ஒரு நறுமணத்திற்கு மயங்கி பூச்சிகள் அதன் அருகில் செல்கின்றன. அவற்றை அப்படியே தன்னுள் பிடித்து வைத்துக் கொள்ளும் இந்தச் செடிகள்.
3. பட்டர் வார்ட் - Butterwort
இந்தச் செடியின் இலைகளில் வெண்ணை பூசப்பட்டதை போல பளபளப்புடன் காணப்படுகிறது. வட அமெரிக்கா தென் அமெரிக்கா மத்திய அமெரிக்காவில் இருக்கும் இவற்றின் இலைகளில் உள்ள முத்து போன்ற சுரப்பிகளை தண்ணீர் என தவறாக நினைக்கும் பூச்சிகள் இவற்றில் வந்து ஒட்டிக் கொள்கின்றன. அந்த ஒட்டும் கூழில் சிக்கி செரிமான நொதிகளால் மெதுவாக கரைக்கப்படுகின்றன. அதனுடைய இலைகளில் பூச்சியை தின்ற பின்பு மிஞ்சி இருக்கும் எலும்புகளை காணலாம்.
4. லியானா - Triphyophyllum
லியானா என்று அழைக்கப்படும் இந்த தாவர இனம் ஓவல் வடிவ இலைகளைக் கொண்டிருக்கிறது. அதில் பூக்கள் பூக்கும் நேரத்தில் பூச்சிகளை ஈர்க்கிறது. இலைகளில் உள்ள சுரப்பிகள் பூச்சிகளை பிடித்து வைத்துக் கொள்கின்றன. கொடிபோல படரும் இனத்தைச் சேர்ந்த இந்த செடி 100 அடி நீளம் கூட வரை கூட வளரும். மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது.
5. போர்த்துக்கீசிய சண்டியூ - Portuguese Sundew
ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் மொராக்கோ கடற்கரைகளில் ஊட்டச்சத்து இல்லாத மண்ணில் இந்த வகை தாவரங்கள் வளருகின்றன. இதுவும் பல மாமிச தாவரங்களைப் போலவே இனிமையான நறுமணத்தால் பூச்சிகளை ஈர்க்கிறது. அதனுடைய இலைகளில் சளி போன்ற ஒட்டும் பொருள் உள்ளது. அதனால் பூச்சிகள் அவற்றில் விழுகின்றன இவை பூச்சிகளை மெதுவாக கரைக்கும் செரிமான நொதிகளை சுரக்கிறது.
6. ரோரிடுலா - Roridula
ரோரிடுலா என்பது தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட மாமிச தாவரங்களின் தனித்துவமான இனமாகும். இதில் இரண்டு இனங்கள் உள்ளன: ஆர். டென்டாட்டா மற்றும் ஆர். கோர்கோனியாஸ். இந்த தாவரங்கள் இரண்டு மீட்டர் உயரம் வரை வளரும் மற்றும் ஒட்டும் இலைகளைப் பயன்படுத்தி இரையைப் பிடிக்கும். இலைகள் பிசின் போன்ற, சுரப்பி போன்ற முடிகளால் மூடப்பட்டிருக்கும், அவை பூச்சிகள் மற்றும் சிறிய பறவைகளைப் பிடிக்க ஒட்டும் பொருளை சுரக்கின்றன.
7. வீனஸ் ஃபிளைட்ராப் - Venus flytrap
இது எறும்புகள், ஈக்கள், வண்டுகள், பூச்சிகள், சிறிய தவளை, மற்றும் சிறிய விலங்குகளைப் பிடித்து ஜீரணிக்க கீல் "பொறிகளை" உருவாக்கும் மாற்றியமைக்கப்பட்ட இலைகளைக் கொண்டுள்ளது. பொறிகள் உணர்திறன் வாய்ந்த தூண்டுதல் முடிகளால் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும். ஒரு பூச்சி சுமார் 20 வினாடிகளுக்குள் இந்த முடிகளை இரண்டு முறை தொடும்போது, பொறி ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் மூடிவிடும்.