
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த அன்றே பெய்யத் தொடங்கிய மழை, தமிழ் நாட்டில் ஒரு டூர் அடித்து வருகிறது. அதன் காரணமாக வெப்பத் தாக்கத்திலிருந்து மக்கள் பெரிதும் காப்பாற்றப்பட்டாலும், விவசாய உற்பத்தியையும் ஒருகை பார்த்ததால், வழக்கம் போல விவசாயிகளை வாட வைத்து விட்டது! ஊட்டியையும், கொடைக்கானலையும் கூட மேலும் குளிரச் செய்து விட்டது மழை! பல இடங்களில் வெள்ள பயத்தையும் தோற்றுவித்தது!
மழையோ! வெயிலோ! எதுவும் அளவோடு இருந்தால்தான் ஆனந்தம்! ஆனால், அதனைக் கட்டுப்படுத்தும் திறமை இயற்கைக்குத்தானே உண்டு. அந்த இயற்கை பல சமயம் இடி, மின்னலுடன் மக்களின் உயிரையே பறித்து விடுவதும் வேதனை! வானத்திற்கும், பூமிக்கும் இடையே வாழ்கின்ற நாம் இவற்றையெல்லாம் சமாளித்தாக வேண்டியிருக்கிறது!
ஒலியைக் காட்டிலும் ஒளியானது வேகமாகப் பயணிக்கும் என்பதற்கு நல்ல உதாரணம், இடியும் மின்னலும்! இடிக்குப் பிறகே மின்னல் தோன்றினாலும் நம் காதுகளை இடிச் சப்தம் அடையும் முன்பாகவே மின்னல் கண்களில் தெரிந்து விடுகிறது! அவ்வளவு வேகம் அதற்கு!
தாமஸ் ஃப்ரான்கோய்ஸ் டையபார்ட் மற்றும் டி லோர்ஸ் ஆகிய இரு பிரஞ்சு விஞ்ஞானிகளே பட்டத்தைப் பறக்க விட்டு, மின்னலின்போது மின்சாரம் கடத்தப்படுவதை முதன் முதலில் கண்டறிந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன!
மின்னலில் மூன்று வகை உள்ளதாகக் கூறப்படுகிறது. அவை புவி மின்னல், முகில் மின்னல் மற்றும் வளி மின்னல் ஆகியவையாகும்.
முகிலில் இருந்து, அதாவது மேகத்திலிருந்து பூமிக்கு வருவது புவி மின்னல்! முகில்களுக்குள் ஏற்படும் மோதலால் தோன்றுவது முகில் மின்னல்! முகிலில் தோன்றி, அதனை விட்டு வெளிவந்து, வளியோடு சேர்வது வளி மின்னல்! ஆனால், நம் ஊர்களில், நமக்குத் தெரிந்தவரை, இரண்டு வகை மின்னல்கள்தான் தெரியும்! ஒன்று மின்னல், மற்றொன்று கொடி மின்னல்! கொடி போன்று நீண்டு ஒளி செல்வதால் இந்தப் பெயர் அதற்கு!
ஆனால், இவற்றுக்கு அப்பாற்பட்டு, விஞ்ஞானிகளையே வியக்கச் செய்யும் ஒரு மர்ம மின்னல் உண்டு. அதுதான் பந்து மின்னல் (Ball Lightning)! இதை நம்மில் பலர் கேள்விப்பட்டுக்கூட இருக்க மாட்டோம்! பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை! ஆனாலும், அப்படிப் பொதுவான முடிவுக்கு வந்து விடவும் முடியாது! ஏனெனில், திறந்தவெளிகளில் மழை, இடி, மின்னல் நேரங்களில் பணியாற்றும் சிலர் இதனைப் பார்த்திருக்க வாய்ப்புண்டு!
இது ஒரு கிரிக்கெட் பால் அளவில் உள்ள மின்சாரப் பந்து என்கிறார்கள் ஆய்வாளர்கள்! ஆனால், மின்னலைக் காட்டிலும் அதிக நேரம் நீடிக்கக் கூடியதாம்! வெள்ளை, நீலம், பச்சை, சிவப்பு, ஆரஞ்சு என்று பல வண்ணங்களிலும் இது இருக்குமாம்! சாதாரண மின்னலைப் போலவே மழை நேரங்களில் இடியுடன் தோன்றும் இது, அதிக சக்தி வாய்ந்ததாம்! சப்தமும் கூடுதலாகவே இருக்குமாம்! கல் சுவர்களையே தாக்கும் பலம் கொண்டதாம்!
இருப்பினும், ஆராய்ச்சியாளர்களால் இதைப் பற்றிய சரியான முடிவுக்கு இன்னும் வர முடியவில்லையாம்! சிலர் இதனை ‘பிளாஸ்மா’ என்றும், வேறு சிலர் ‘மைக்ரோ வேவ்’ என்றும் அழைக்கிறார்களாம்! ஆனாலும் இதன் மர்மம் இன்று வரை முழுமையாக விளங்கியபாடில்லையாம்! பூவுலகில் நிலவும் பல மர்மங்களில் இதுவும் ஒன்று போலும்!