Samudhrika Lakshana of Elephants
Samudhrika Lakshana of Elephants

யானைகளின் சாமுத்ரிகா லட்சணம் பற்றி தெரியுமா?

Published on

- தா.சரவணா

இந்த உலகில், ரயில், கடல், யானை ஆகிய மூன்றையும் எத்தனை முறை பார்த்தாலும் போதும் எனத் தோன்றாது என்பார்கள். அந்தளவுக்கு இந்த மூன்றும் எத்தனை முறை என்றாலும் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். யானைகளுக்கும் சாமுத்ரிகா லட்சணம் உண்டாமே, தெரியுமா? அது என்ன என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

யானைகளில் ஆறு வகை உண்டு. அதில், தும்பிக்கையை ஒட்டி கீழ் நோக்கி வளரும் தந்தங்களை கொண்ட யானைகளை வளர்க்கவே முடியாது. அவை நம்பகத் தன்மை இல்லாதவை. எப்போதும் பரபரப்புடனும் கொலை வெறியுடனும் காணப்படும். எந்த நேரம் ஆளை தாக்கும் என கணிக்க முடியாது.

அதேபோன்று உடம்பில் முதுகெலும்பு தூக்கிக்கொண்டு, ஆள் உட்கார முடியாத உடலமைப்பு கொண்ட யானைகள், இடுங்கிய கண்களைக்கொண்ட யானைகள், நெற்றி துருத்திய யானைகளையும் வளர்க்கவே முடியாது.

ஒழுங்கில்லாத தந்தங்கள் அல்லது ஒற்றை தந்தம்கொண்ட யானையை வளர்க்கவே கூடாது. வனத்துறை, வீட்டில் வளர்க்க அனுமதி கொடுக்காத ஒரே வகை இதுதான். காட்டு யானைகளில், இந்த ஜாதி யானைகள்தான் ஆட் கொல்லிகள். மற்ற வகைகள் வெறும் மிரட்டலுடன் விலகி போய்விடும். இது மறைந்திருந்து தாக்கும் அறிவும், குணமும் உடையது. மனிதர்களைப் பார்த்து விட்டால், அனல்போல கொதிநிலைக்குப் போய்விடும். பயங்கர ராட்சதன். அது உடம்பிலிருந்து அழுகிய மாமிச வாசம் வீசும். மலைவாழ் மக்கள், இந்த யானையின் மீது வீசும் குமட்டல் வாசத்தை வைத்தே இது வருவதையோ, அருகில் நிற்பதையோ கண்டுபிடித்து விடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
யானைக்கு மதம் பிடித்தால்...?
Samudhrika Lakshana of Elephants

ஒச்சம் இல்லாத, நிமிர்ந்த தலை, சம அளவுகளில் அகலமாக முன் நோக்கி ஆங்கில எழுத்தான ‛வி’ வடிவில் பால் போன்ற நிறமுடைய தந்தங்கள், தேன் நிறத்தில் மின்னும் கண்கள், எப்போதும் முகத்தில் ஒரு சாந்தம், அருமையான கீழ்படிதல், வசீகரிக்கும் அழகு கொண்ட உடலமைப்பு, அடர்ந்த முடி கொண்ட வால், அழகான நகங்கள், மடங்காத காதுகள், ஆள் அமரும்படி படுக்கை போன்ற முதுகமைப்பு, நடக்கும் போது அடி மாற்றி வைக்காமல் சரியான அளவுகளில் காலை முழுவதும் தரையில் ஊன்றி நடத்தல், தன் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக பராமரித்தல், அன்புக்காக ஏங்கும் மனிதர்களுடன் முக்கியமாக குழந்தைகளுடன் நன்கு பழகி, சொல் பேச்சு கேக்கும் - இது பட்டத்து யானையின் சாமுத்ரிகா லட்சணம் ஆகும்.

இதுபோன்ற குணங்கள், பத்தாயிரத்தில் ஒரு யானைக்குதான் அமையும். இதன் உடம்பில் தாமரை பூவின் நறுமணம் வீசும். முழுவதும் இந்த மொத்த குணங்களும் அமையக் கிடைக்காவிட்டாலும், இதில் மூன்றில் ஒரு பங்கு குணங்கள் அமையப் பெற்ற யானைகளை தாராளமாக தைரியமாக நெருங்கலாம்!.

logo
Kalki Online
kalkionline.com